அநுரகுமார திஸாநாயக்கவினதும், தேசிய மக்கள் சக்தியினதும் இந்த பிரம்மிக்கவைக்கும் வெற்றி நாட்டின் அரசியல் பரப்பை முழுமையாக மாற்றியமைத்திருக்கின்றது. இது நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவருக்கு வாக்களித்த மக்களுக்குக் கிடைத்த பரிசாகும் எனத் தெரிவித்திருக்கும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், தனக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தானே ஜனாதிபதி என்பதை அவர் உணர்ந்து செயற்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியிருக்கின்றார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்த வேளையில், அதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவிலேயே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு வலியுறுத்தியிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

ஜனாதிபதித்தேர்தலின் இறுதி முடிவு இன்னமும் வெளியிடப்படாவிடினும், அநுரகுமார திஸாநாயக்கவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்பது தற்போது வெளிப்படையாகியிருக்கின்றது. அநுரகுமார திஸாநாயக்கவினதும், தேசிய மக்கள் சக்தியினதும் இந்த பிரம்மிக்கவைக்கும் வெற்றி நாட்டின் அரசியல் பரப்பை முழுமையாக மாற்றியமைத்திருக்கின்றது.

அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி என்பது ஊழல் மோசடிகள், தன்னலம் கருதிய ஆதரவு போன்றவற்றிலிருந்து தாமும், தமது பிள்ளைகளும் விடுபட்டு, பாதுகாப்பானதும் நேர்த்தியானதுமான வாழ்க்கையை வாழவேண்டும் எனும் எண்ணத்துடன் நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அவருக்கு வாக்களித்த பல மில்லியன் மக்களுக்குக் கிடைத்த பரிசாகும்.

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்று, அரசாங்கம் அமைத்து, பின்னர் பாராளுமன்றத்தைக் கலைத்து, பொதுதேர்தலுக்குச் செல்லவேண்டியிருக்கும் நிலையில், எதிர்வரும் நாட்களில், வாரங்களில், மாதங்களில் அவர் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டியிருக்கும். இருப்பினும் இதுவரை காலமும் அவரது அரசியல் பயணத்திலும், தேர்தல் பிரசாரத்திலும் அவரிடமிருந்து வெளிப்பட்ட தெளிவும், யதார்த்தபூர்வ தன்மையும் அவர் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கும் காலப்பகுதியிலும் தொடரும் என எதிர்பார்க்கின்றேன்.

அதேவேளை அநுரகுமார திஸாநாயக்க நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையின் ஆபத்துக்களை உணர்ந்து செயற்படுவதுடன், அதன் பரந்துபட்ட அதிகாரங்களை மக்களின் நம்பிக்கையை உறுதிசெய்யும் வகையில் பயன்படுத்தவேண்டும். அதேபோன்று புதிய ஜனாதிபதி இந்நாட்டின் அரைவாசி வாக்காளர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை என்பதையும், இருப்பினும் தான் அவர்கள் அனைவரினதும் ஜனாதிபதியே என்பதையும் புரிந்து செயலாற்றவேண்டும்.

மேலும் 5 வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று பிரம்மிக்கத்தக்க விதத்தில் தெரிவுசெய்யப்பட்டு, பின்னர் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத் தவறியதன் விளைவாக பதவி விலகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விதியில் இருந்து அநுரகுமார திஸாநாயக்க அவசியமான பாடத்தைக் கற்றுக்கொண்டிருப்பார் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply