அநுர குமார திஸாநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள்ளார்.
அவர் யார், அவரது பின்னணி என்ன?
அநுராதபுரம் மாவட்ட தம்புத்தேகம பகுதியில் 1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்தார்.
தம்புத்தேகம கமினி மகா வித்யாலயாவிலும் தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் படித்த அநுர குமார திஸாநாயக்க, அங்கிருந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
பாடசாலை காலத்தில் இருந்தே அரசியலில் அநுர குமாரவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. தனது 19வது வயதில் இலங்கையின் மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவில் இணைந்தார்.
ஒரு கட்டத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து விலகி, களனி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
கடந்த 1995ஆம் ஆண்டு வாக்கில் அவரை சோஷலிச மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக ஜே.வி.பி. நியமித்தது. அக்கட்சியின் மத்திய பணிக் குழுவிலும் அவருக்கு இடமளிக்கப்பட்டது.
கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனவின் தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்தில் நுழைந்தார் அநுர குமார. 2001ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.
கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி., ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 39 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைத்தன. குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க, 1,53,868 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜே.வி.பியும் இணைந்து ஆட்சி அமைத்தன. இந்த அரசாங்கத்தில் விவசாயம், கால்நடைகள், காணி, நீர்பாசனத் துறை அமைச்சராக அநுர குமார பதவியேற்றார்.
ஆனால், சுனாமிக்குப் பிறகு, வடக்கிலும் கிழக்கிலும் புலிகளுடன் இணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள சந்திரிகா குமாரதுங்க அரசு முடிவு செய்தபோது, அதை எதிர்த்து ஜே.வி.பி. அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர். அநுரவும் பதவி விலகினார்.
கடந்த தேர்தலில் மூன்றாம் இடம்
கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஜே.வி.பியின் தேசிய மாநாட்டில், அக்கட்சியின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் அநுர குமார.
அதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் 2019ஆம் ஆண்டு தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க முதல் தடவையாகப் போட்டியிட்டார். வெறும் சுமார் 3 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையே பிடித்தார் அவர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸ தேர்வான நிலையில், ஊழலுக்கு எதிராக அநுர குமார திஸாநாயக்க தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தார். இதனால், அவருக்கான ஆதரவுத்தளம் வலுவடைய ஆரம்பித்தது. மேலும் பொருளாதார நெருக்கடியின்போது நடந்த போராட்டங்களிலும் அநுர குமார முன்னணியில் இருந்தார்.
இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அநுர குமார திஸாநாயக்க போட்டியிடுவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக பல்கலைக்கழக மாணவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் திரண்டனர்.
வன்முறைகளுக்கு மன்னிப்பு
அநுர குமார திஸாநாயக்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில், கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் பெருமளவு கூட்டம் திரண்டது. கடந்த தேர்தலில் வெறும் 3 சதவீத வாக்குகளைப் பெற்ற ஒருவர், 2024 தேர்தலில் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது பலரது புருவங்களையும் உயர்த்தியுள்ளது.
தற்போது அவர் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் அவர் தலைமை வகிக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவின் கடந்த காலம் வன்முறைகளால் நிறைந்தது.
கடந்த 1971இல் பண்டாரநாயக அரசுக்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய கிளர்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அதேபோல, 1987 – 89 காலப் பகுதியில் இந்தியா – இலங்கை அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக ஜே.வி.பி. நடத்திய கலகத்திலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர்.
ஆனால், 2014இல் ஜே.வி.பியின் தலைவரான பிறகு பிபிசிக்கு அளித்த பேட்டியில், அக்கட்சியின் கடந்த கால வன்முறைகளுக்காக மன்னிப்பு கோரினார் அநுர. அக்கட்சி இலங்கையில் நிகழ்த்திய வன்முறைகளுக்கு மன்னிப்பு கோரியது அதுவே முதலும் கடைசியுமாக இருந்தது.
தமிழர் பிரச்னையில் நிலைப்பாடு என்ன?
இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிப்பதற்காக 13வது சட்டத் திருத்தம் இலங்கையின் அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்பட்டது.
நிலம், காவல் மற்றும் நிதி தொடர்பாகக் கூடுதல் அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் மாகாண சபைகளுக்கு அளிக்கிறது. ஆனால், இதுவரை மாகாண சபைகளுக்குக் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வடக்கு – கிழக்கு பகுதிகளுக்குப் பயணம் செய்த அநுர குமார, யாழ்ப்பாணத்தில் பேசினார். அப்போது, “நான் 13வது சட்டத் திருத்தத்தைச் செயல்படுத்துகிறேன். பதிலுக்கு எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்க நான் வரவில்லை. கூட்டாட்சி முறையை அளிக்கிறேன், எனக்கு வாக்களியுங்கள் எனக் கேட்க வரவில்லை” என்றார். இது அந்தத் தருணத்தில் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தையே அளித்தது.
ஆனால், தேர்தலுக்கு நெருக்கமாக அநுர குமார தனது நிலைப்பாட்டை சற்று மாற்றிக்கொண்டார்.
ஜூன் மாதத்தில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்து தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார் அநுர. அந்த சந்திப்பிற்குப் பிறகு பேசிய அவர், மாகாண சபைகள் தொடர்ந்து செயல்படும் எனக் கூறினார்.
ஆனால், மாகாண சபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது பற்றி அவர் ஏதும் தெரிவிக்கவில்லை. மேலும், ஜனதா விமுக்தி பெரமுனவை பொறுத்தவரை, அது நீண்ட காலமாகவே அதிகாரப் பகிர்வை எதிர்த்து வருகிறது.
ஆனால், தற்போதைய புதிய சூழலில் அக்கட்சி என்ன செய்யும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அதானி திட்டத்திற்கு எதிர்ப்பு
இரு நாட்டு உறவுகளைப் பொறுத்தவரை, இந்தியா – சீனா ஆகிய இரு நாடுகளுமே இலங்கைக்கு மிக முக்கியமானவை.
இரு நாடுகளுமே இலங்கைக்கு மிகப்பெரிய அளவில் கடனுதவிகளைச் செய்திருக்கின்றன. ஜே.வி.பி ஒரு இடதுசாரி கட்சியாக இருப்பதால், இயல்பாகவே சீனாவுக்கு நெருக்கமாக இருக்கும் என்ற எண்ணம் இருக்கிறது. மேலும், மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து எதிர்த்து வருகிறது ஜே.வி.பி.
இந்த ஒப்பந்தம் இலங்கை மீது இந்தியாவால் திணிக்கப்பட்டதாகவும் கருதுகிறது.
செப்டம்பர் 16ஆம் தேதியன்று ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற அநுர, அதானி குழும முதலீட்டில் உருவாகும் காற்றாலை மின் திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறினார். அந்தத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் கூறினார்.
ஆனால், இந்தத் திட்டத்தில் கூடுதல் விலைக்கு மின்சாரம் இலங்கைக்கு விற்கப்படும் என்பதாலேயே அதற்கு எதிராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் பிராந்தியத்தில் உள்ள எந்த சக்திகளையும் பகைத்துக்கொள்ள மாட்டோம் என அக்கட்சியினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அநுர குமாரவும் இந்தியாவுக்கு வந்து சென்றார். ஆகவே, வரும் நாட்களில் இந்தியா தொடர்பான, அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்பது தெரிய வரும்.
அநுரவை பொறுத்தவரை, ஒரு கடினமான உழைப்பாளி என்பதில் சந்தேகமில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் 3 இடங்களைப் பிடித்த கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்னைகளையும் இதே தீவிரத்தோடு எதிர்கொள்வாரா என்பதைப் பார்க்க வேண்டும்.