சமீபத்தில் நடந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். இதையடுத்து, அதுவரை பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று (செவ்வாய், செப்டம்பர் 24) பிற்பகல் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதற்குமுன் இலங்கையின் பெண் பிரதமர்களாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தொடர்ந்து மூன்றாவது பெண் பிரதமரானார் ஹரிணி அமரசூரிய. மற்ற இரண்டு பிரதமர்களைப் போல் இல்லாமல், குடும்ப அரசியல் பின்னணி ஏதும் இன்றி ஹரிணி பிரதமர் ஆனது எப்படி?

இளமைக்காலம் மற்றும் கல்வி

1970-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி கொழும்பில் பிறந்தார் ஹரிணி. இரண்டு உடன்பிறந்தவர்கள் அவருக்கு உள்ளனர்.

கொழும்பு பிஷப் கல்லூரியில் அடிப்படைக் கல்வியை முடித்த அவர் உயர் கல்விக்காக வெளிநாடு சென்றார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலைப் பட்டம் முடித்தார். அதன்பின் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மானுடவியல் மற்றும் மேம்பாட்டுப் படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

2011-இல், எடின்பர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகங்களில் சமூக மானுடவியல், சர்வதேசச் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார்.

சமூகப் பணிகள்

கடந்த 10 ஆண்டுகளாக, ஹரிணி அமரசூரிய இலங்கை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றினார்.

பல்கலைக்கழக நிர்வாகத்திலும் ஈடுபட்ட அவர், 2016 முதல் பல்கலைக்கழக மானியக் குழுவின் பாலினச் சமத்துவம் மற்றும் சமத்துவம் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

அவர் சமூக நலம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளிலும் ஆர்வலராக இருந்துள்ளார்.

மேலும், அவர் இலங்கையில் உள்ள சமூக சுகாதார அமைப்பான Nest-இன் இயக்குநராகவும், தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இலங்கையில் பெண்கள் மற்றும் பாலினம் குறித்த ஆராய்ச்சி நிறுவனமான CENWOR-இல் பதவி வகித்துள்ளார்.

ஹரிணி, லா & சொசைட்டி டிரஸ்டின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

ஆசிரியர் சங்கங்களில் ஈடுபாடு

ஹரிணி, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும், 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உதவிச் செயலாளராகவும், 2016-இல் அச்சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அவர், 2011-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

அதுமட்டுமின்றி, சமீபகாலமாக இலவசக் கல்வி தொடர்பாகப் பல்வேறு தரப்பினர் தலைமையில் பல போராட்டங்களிலும் ஈடுபட்டார்.

அரசியலில் வாழ்க்கை

ஹரிணி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும், 2020 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றிபெற்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானார். அன்று முதல் அந்தப் பதவியில் பணியாற்றி வருகிறார்.

*அந்த நேரத்தில், அவர் 389 நாட்களில் 269 நாட்கள் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

*நாடாளுமன்றத்தில் அவர் வகித்த பதவிகள் பின்வருமாறு:

*இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மகளிர் மன்றம்

*இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, பாலினச் சமத்துவம் மற்றும் சமத்துவத்தை ஆராய்வதற்கும் அதன் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்கு அறிக்கையாக சமர்பிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழு

*சர்வதேச உறவுகளுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு

*இலங்கையில் சிறார் போஷாக்குக் குறைபாடு அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக நாடாளுமன்ற விசேஷ குழுவினால் மேற்கொள்ளப்படவுள்ள குறுகிய கால, நடுத்தர கால, மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, விரைவாக நடைமுறைப் படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள்

*குழந்தைகள், பெண்கள், மற்றும் பாலினம் மீதான துறைசார் கண்காணிப்புக் குழு

*விலங்குகள் நலம் தொடர்பான நாடாளுமன்றக் கணக்குக் குழு

*நெறிமுறைகள் மற்றும் சலுகைகளுக்கான குழு

*கல்விக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு

‘manthri.lk’ என்ற இணையதளம் வெளியிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையின்படி, அவர் 225 எம்.பி-க்களில் 65-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 14 தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவற்றில், அவர் பெரும்பாலும் கல்வி, உரிமைகள், பிரதிநிதித்துவம், சுகாதாரம், பொருளாதாரம், மற்றும் நிதி தொடர்பான தலைப்புகளில் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் பரப்புரைக்காக 21,500 கி.மீ பயணம்

அநுர குமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரையின் போது முனைவர் ஹரிணி அமரசூரியவின் பங்கு தனித்து தெரிந்தது. தேர்தலுக்கு முன்பு அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் ஹரிணி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தேர்தல் பணிகளுக்காக நாடு முழுவதும் 21500 கி.மீ பயணத்தை மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.

“எங்கள் தேர்தல் பரப்புரையின் போது, நான் 21,500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்தேன். நூற்றுக்கணக்கான கூட்டங்களில் பேசியிருப்பேன். ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்திருப்பேன். என்னுடைய வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான அதே நேரத்தில் அதிகம் சோர்வடைய வைத்த காலகட்டம் அது,” என்று முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
அரசியல் பின்னணியை சாராத முதல் பிரதமர்

உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையில் தேர்வு செய்யப்பட்டவரே. இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க கொல்லப்பட்ட பிறகு அவருடைய மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக பொறுப்பேற்றார்.

அவரை தொடர்ந்து அவரின் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 1994ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பொறுப்பேற்றார். அதே ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வரலாறு காணாத வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஏற்கனவே பிரதமர் பொறுப்பு வகித்து வந்த தங்களின் கணவர்கள், தந்தைகள் இறந்த பின்னரே அந்த பொறுப்பிற்கு வந்தனர்.

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என்று தெற்காசியா முழுவதும் இது போன்ற நிகழ்வுகளை காண இயலும். இந்த நாடுகளில் உருவான பெண் தலைமைகள் அனைவரும் அரசியல் பின்னணியை கொண்ட குடும்பங்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்.

ஆனால் ஹரிணியை பொறுத்தமட்டில் இவர் ஒருவர் தெற்காசியாவிலேயே எந்த ஒரு அரசியல் குடும்ப பின்னணி ஏதுமின்றி பிரதமர் ஆன முதல் பெண்ணாவார்.

Share.
Leave A Reply