இஸ்ரேலிய – ஹமாஸ் போர் இதுவரை கண்டிராத புதிய நெருக்கடிக்குள் மேற்காசிய பிராந்திய அரசியலை சிக்க வைத்துள்ளது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பின் தாக்குதல் படிப்படியாக விரிவடைந்து தற்போது லெபனான் தென்பகுதியை மையப்படுத்தி நிகழத் தொடங்கி இருக்கின்றது. உலக வரலாற்றிலே யூதர்களே அதிகம் போர் உத்திகளை பிரயோகப்படுத்தப்படுத்தியவர்கள்.
குறிப்பாக 1967 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆறு நாள் யுத்தத்தைப் போன்று உத்திகளை மாற்றுவதும் எதிரியை அழிவுக்கு உள்ளாக்குவதும் இஸ்ரேலின் அல்லது இராணுவத்தின் பிரதான உத்தியாக உள்ளது.
அண்மையில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலானது உலக வரலாற்றின் யூதர்களுக்கே உரிய இராணுவ உத்தியாக தெரிகின்றது.
அதிலும் குறிப்பாக பேஜர்களையும் ேவாக்கிடோக்கியையும் வைத்துக்கொள்ளும் போர் வீரர்களை எவ்வாறு அழித்து ஒழிப்பது என்பது மிக முக்கியமான போரியல் தந்திரமாக மாறி இருக்கின்றது இக்கட்டுரையும் ஹமாஸ்- இஸ்ரேலிய போரின் புதிய போக்குகளை தேடுவதாக அமைய உள்ளது.
18.09.2024 தொடக்கப்பட்ட இந்த தாக்குதல் ஹிஸ்புல்லா அமைப்பினரது தொலைத்தொடர்பு சாதனங்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட தாக்குதலாகும்.
இது பாரிய அழிவை ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஏற்படுத்தியுள்ளது.
ஏறக்குறைய ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்துச் சிதறியுள்ளன.
அதனைத் தொடர்ந்து வோக்கிடாக்கிகள் வெடித்த நிகழ்வு ஹிஸ்புல்லாக்களின் போரியல் உபாயங்களை நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது.
இத்தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதுடன் 3300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஏறக்குறைய ஐயாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் போர்க்களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
இஸ்ரேலியர்களின் தாக்குதல் போரில் பிரதான எதிரிகளாக ஹிஸ்புல்லாக்கள் விளங்குகின்றனர்.
கடந்த காலங்களில் இருந்த அனைத்து நெருக்கடிகளையும் இஸ்ரேலிய இராணுவமும் அதன் உளவுப் பிரிவும் உத்திகளை மாற்றிக் கொள்வதன் ஊடாக வேகமாக நகர்ந்து வருகிறது.
இது ஏறக்குறைய பிராந்திய அரசியலை தன்வசம் கட்டுப்படுத்தி வைத்திருப்பதில் கவனம் கொள்ளுகின்ற போர் உத்தியாகவே தென்படுகிறது.
போர் என்பது உத்திகளை கொண்ட கலையாகவே கொள்ளப்படுகிறது.
எதிரியின் இலக்குகளையும் எதிரியின் படைகளையும் ஆயுத தளவாடங்களையும் அழித்தொழிப்பது மிகப் பிரதானமான போரியல் உத்தியாக உலக வரலாறு முழுவதும் பின்பற்றப்பட்டு வருகின்றது.
இத்தகைய நகர்வையே இஸ்ரேலிய இராணுவம் ஒவ்வொரு போரிலும் பிரயோகித்துவருகிறது. அத்தகைய ஒரு சூழலை தான் தற்போது மேற்காசிய நாடுகளும் உலக போரியல் வல்லுநர்களும் எதிர்கொண்டிருக்கிறார்கள்.
இத்தகைய உத்தியை எதிர்த் தரப்பு எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தை ஒரு முறியடிப்பு போர் வழிமுறையாக மேற்கொண்டு இருக்கின்றது.
இத்தகைய இஸ்ரேலிய தாக்குதல் மூலம் பலமான கட்டுமானங்களை சிதைப்பதன் ஊடாக இஸ்ரேல்; தன்னுடைய இலக்கை சாத்தியப்படுத்தி வருகிறது.
குறிப்பாக ஈரான் பாரிய போரியல் திறன்களைக் கொண்ட இஸ்ரேலுக்கு சவால் விடக்கூடிய சக்தியாக காணப்படது.
இது ஹமாஸ்- இஸ்ரேல் போரின் ஆரம்பகால பகுதியில் விளங்கியது.
அதனை முடிவுக்கு கொண்டுவர ஈரான் ஜனாதிபதி மீதான தாக்குதல் பயன்பட்டது.
மற்றும் வெளியுறவு அமைச்சர் இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டமைக்கு பின்னர் ஈரான் வலுவிழந்துள்ளது.
இதுவே இஸ்ரேலிய இராணுவ நகர்வாக காணப்படுகிறது. அதனடிப்படையில் ஈரான் போரின் பிரதான பாத்திரத்தை இழந்தவுடன் ஈரானை தக்க வைப்பது முக்கியமானது என கருதும் நிலையை ஈரானிய ஆட்சியாளர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் ஹமாஸ் அமைப்பு பாரிய எதிர்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியபோதும் அதனை காசா பகுதி மீதான தாக்குதலுடன் முற்றாகவே நெருக்கடிக்கு உள்ளாகிறது.
இவ்வாறு ஹமாஸ் அமைப்பு பின்னர் ஈரானிய தரப்பு என்ற அடிப்படையில் போரில் பிரதான பங்கெடுப்பை விலக்கிக் கொண்ட இஸ்ரேல் தற்போது ஹிஸ்புல்லா பிரிவினர் மீது அதே வகையான அணுகுமுறையை பின்பற்ற தொடங்கியிருக்கின்றது.
இது பெருமளவுக்கு போரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அணுகுமுறையாக அமைந்திருக்கின்றது. ஆரம்பத்தில் ஹவுத்தி படைப் பிரிவு அல்லது தீவிரவாத பிரிவு இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் கவனம் கொண்ட போதும் அது தற்போது வெளிப்படையாக அதிக தாக்குதலை மேற்கொள்வதில் இருந்து விலகி இருப்பதோடு செங்கடலை இலக்கு வைத்த தீவிரவாத அமைப்பாகச் செயல்படுகின்றது.
எனவே இஸ்ரேலிய இராணுவம் தனது போரியல் உத்திகளை படிப்படியாகவும் நிதானமாகவும் போரிலிருந்து அகற்றப்பட வேண்டிய தரப்புகளை இனம்கண்டு அவற்றின் பிரதான பங்கெடுப்பாளர்களே அழிவுக்கு உள்ளாக்குவதில் வெற்றிகரமான நகர்வை சாத்தியப்படுத்தி வருகிறது.
இத்தகைய நகர்வுக்கு பின்னால் இருக்கக்கூடிய வலுவான அம்சங்களை தேடுவது அவசியமானது.
ஹசன் நஸ்ருல்லா
முதலாவது தாக்குதல் நடந்த பிற்பாடு, ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா தெரிவித்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பேஜர், வோக்கிடோக்கி வெடிப்பு லெபனான் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாதவகையில் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த சூழலை ஏற்படுத்தி உள்ளது.
அத்தகைய சூழலில் நாம் உள்ளோம் என்பதில் சந்தேகம் இல்லை. இது மாதிரியான தாக்குதலை உலகம் எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை.
இந்த தாக்குதல் அனைத்தும் எல்லைகளை அத்துமீறி இஸ்ரேல் நடத்தியுள்ளதாக தெரிகின்றது.
எதிரி தரப்பான இஸ்ரேல் அனைத்து நெறிமுறைகளையும் சட்டத்தையும் அதற்கு அப்பால் சென்று நிகழ்த்திய போர் குற்றம்.
இது படுகொலைக்கு சமமானது. இப்படுகொலை லெபனான் மீதும் அதன் மக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே உள்ளது.
இதற்கான பதில் தாக்குதலை அல்லது தண்டனையை விரைவில் கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டது.
இது ஹிஸ்புல்லாக்களின் உண்மையான நிலையை தெரியப்படுத்தி இருப்பதோடு, பேஜர்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதலின் விளைவுகளை அடையாளப்படுத்தவும் ஹிஸ்புல்லாக்கள் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியை விளங்கிக் கொள்ளவும் போதுமானது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் 20.09.2024 இஸ்ரேலிய வடக்கு பகுதி நோக்கி தாக்குதலை தொடங்கின.
குறிப்பாக வடக்கு இஸ்ரேல் பகுதிகளில் அமைந்திருக்கின்ற இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு பாரிய ரொக்கட் தாக்குதல்களை நிகழ்த்தியது.
இதனுடைய விளைவுகள் பற்றி தெரியவராத போதும் பாரிய அளவில் சேதங்களை இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்புக்கு ஏற்படுத்தியிருப்பதாக ஹிஸ்புல்லாக்கள் அறிவித்துள்ளார்.
இரண்டு பேஜர்கள் மற்றும் வோக்கிடோக்கி தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் எதுவித பதிலையும் வெளிப்படுத்தாத சந்தர்ப்பத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யாவ் கேடன் குறிப்பிடுகின்ற போது இஸ்ரேலியப் படையினர் போரின் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளனர்.
அதற்கான உறுதியும் விடாமுயற்சியும் தேவை என தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய தாக்குதலை இஸ்ரேலிய தரப்பு மேற்கொண்டது என்பதை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரது கருத்து உணர்த்துகின்றது.
இத்தகைய தாக்குதல்களை இஸ்ரேலிய தரப்பு, நீண்ட காலமாகவே எதிரியை கையாளுவது அல்லது அழிப்பதில் உத்தியாக கையாண்டுவருகிறது. அவ்வாறான ஒரு நகர்வை தற்போதைய தாக்குதல்கள் ஏற்படுத்தி இருக்கிறது.
மூன்று உலக போரியல் வரலாற்றில் மேற்கு நாடுகளில் ஆயுதங்களும் தளபாடங்களும் மிகப் பிரதான பங்கெடுக்கின்ற சாதனங்களாக காணப்படுகின்றன.
கிழக்கு நாடுகளில் நிகழ்த்துகின்ற அனைத்து போர்களுக்கும் பின்னால் வளர்ந்த நாடுகளின் போரியல் ஆயுதங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
இஸ்ரேலிய இராணுவத்தினால் பேஜர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் அவற்றையே ஹிஸ்புல்லாக்கள் ஆயுத தளபாட கொள்ளளவு செய்கின்ற நாடுகளிடமிருந்து பெற்றுக் கொண்டதாகவும் தெரியவருகிறது.
இது ஒரு நீண்டகால உத்தியாக காணப்படுகிறது என்றும் தெரியவருகின்றது. உலக வரலாறு எவ்வாறு மேற்கு உலகத்தின் நலன்களுக்கு ஏற்ற வகையில் வரையப்படுகிறது என்பதை இனம்கண்டு கொள்ள முடிகிறது.
ஆயுதங்களையும் ஆயுத தளபாடங்களையும் மேற்கு நாடுகள் கிழைத்தேச நாடுகளுக்கு வழங்குகின்ற போது எவ்வாறான தந்திரங்களை பிரயோகிக்கின்றன என்பதை உணர முடிகின்றது.
உலக சந்தை பொதுத்தளமாக இருந்தாலும் அது மேற்கின் தளம் என்பதை இத் தாக்குதல் மீண்டும் ஒரு தடவை உலக வரலாற்றுக்கு அல்லது கீழைதேச வரலாற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
இதனுடைய விளைவு ஆயுததளபாடங்களை கொள்வனவு செய்யும் நாடுகளும் போரியல் அல்லது போர்களை நடத்தும் தரப்புகள் அனுபவிக்க வேண்டும் என்பதும் உணர்த்தப்படுகிறது.
தகவல் யுகத்தின் வளர்ச்சியும் உலகத்தை பூகோளமயமாக்கி இருக்கின்றது என்ற அடிப்படையிலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இதனுடைய விளைவுகளை உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் நாடுகளோடு இராணுவமும் இராணுவத்தினுடைய போரியல் வடிவங்களும் அவற்றை முதன்மைப்படுத்துகின்ற பாதுகாப்பு தரப்புக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக இவ்வாறு செயல்படுவதால் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கின்றது.
ஹமாஸ் -– இஸ்ரேல் போரில் ஹிஸ்புல்லா அமைப்பை அப்புறப்படுத்துகின்ற நிலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவே இஸ்ரேலிய இராணுவத்தின் உறுதியான நகர்வாக காணப்படுகின்றது.
எனவே இஸ்ரேலிய- – ஹமாஸ் போர் ஆரம்பத்தில் ஹமாஸ் பக்கம் வலிமையானதாக இருந்தாலும் படிப்படியாக இஸ்ரேலிய தரப்புகள் தமது கட்டுப்பாட்டுக்குள் போரை மாற்றியுள்ளன.
இத் தாக்குதலுக்கு பின்னால் எழுந்திருக்கக் கூடிய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் அமெரிக்கா தனது 12 போர்க்கப்பல்கள் இப்பகுதி நோக்கி நகர்த்துகிறது.
4000 போர் வீரர்களையும் பாரிய அளவிலான ஆயுத தளபாடங்களையும் இஸ்ரேலிய தரப்புக்கு கைமாற்றுகின்ற நோக்கத்தோடு நகர்வை அமெரிக்கா மேற்கொண்டிருக்கின்றது.
மேற்கு இஸ்ரேலியக் கூட்டு அல்லது அமெரிக்க இஸ்ரேலியக் கூட்டு வலுவான நிலையில் இப்போரை கையாள ஆரம்பித்திருக்கிறது.
இது படிப்படியாக இப்போரிலிருந்து ஹிஸ்புல்லா அப்புறப்படுத்தப்படுவதும் ஒரு புதிய கட்டத்தை நோக்கி பிராந்தியம் நகர்த்தப்படுவதும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
ஆளில்லாத விமானங்கள் ஆளில்லாத படகுகள் எவ்வாறு உலக போரியல் களத்தை ஆதிக்கம் செய்ய தொடங்கியிருக்கின்றனவோ,
அவ்வாறே இத்தகைய உத்திகளும் போரியலில் ஒரு பிரதான பங்கெடுப்பாக மாறியுள்ளது. இஸ்ரேலிய தரப்பு நீண்ட காலமாகவே அராபிய தரப்புக்கு எதிராக இத்தகைய உத்திகளை மேற்கொண்டுள்ளது.
அதனை நோக்கி உலகத்தின் தீவிரவாத அமைப்புகளும் அவற்றினுடைய தலைமைகளும் அண்மை காலங்களில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றன. அதனுடைய நீட்சியே ஹிஸ்புல்லா மீதான இஸ்ரேலிய தாக்குதலாகும்.
-ரி. கனோசலிங்கம்-
யாழ். பல்கலைகழகம்