களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு காதலனான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஒட்டிசுட்டானில் இருந்து தேடிவந்த காதலி ஒருவருக்கு தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோத்தரின் வீட்டில் இருந்த 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற சம்பவத்தில் தலைமறைவாகிய நிலையில் ஓட்டிசுட்டானில் வைத்து கைது செய்யப்பட்ட 33 வயதுடைய பெண் ஒருவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (01) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
ஆரையம்பதியைச் சேர்ந்த திருமணமாகி குழந்தையுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஓட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள நிலையில் அங்கு 33 வயதுடைய பெண் ஒருவரை, தான் திருமணம் முடிக்கவில்லை என தெரிவித்து காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் காதலனை தேடி குறித்த காதலி கடந்த ஜூன் மாதம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று காதலனை சந்தித்த போது அவர் ஏற்கனவே திருமணம் முடித்து குழந்தைகள் இருப்பதையறிந்ததுடன் தான் திருமணம் முடிக்கவில்லை என தெரிவித்து காதலித்து வந்துள்ளதுடன் தன்னை காதலன் ஏமாற்றிவிட்டார் என அங்கு அவருடன் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை அங்கிருந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்தனர்.
இதனை அடுத்து அங்கு கடமையாற்றிவரும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த பெண்ணின் பிரச்சனையை கேட்டறிந்த நிலையில், பெண்ணின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக தங்குவதற்கு இடமில்லாமல் இருந்ததைத் தொடர்ந்து தனது வீட்டிற்கு கூட்டிச் சென்று தங்க வைத்ததுடன் அவர் ஆலையம் மற்றும் வெளியில் செல்லும் போது அவரையும் கூட்டிக் கொண்டு வீட்டை பூட்டி அதன் திறப்பை வெளியில் வழமையாக ஒளித்து வைக்கும் இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு சென்று வந்துள்ளார்.
இவ்வாறு 3 தினங்கள் கடந்த நிலையில் ஜூன் 10 ஆம் திகதி குறித்த பெண் தான் வீட்டிற்கு போவதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறி குறித்த வீட்டிற்கு அருகாமையில் ஒளித்திருந்துவிட்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அவரது வீட்டை பூட்டிவிட்டு கதவின் திறப்பை வழமைபோல ஒளித்து வைக்கும் இடத்தில் ஒளித்து வைத்துவிட்டு கடமைக்கு செல்லும்வரை காத்திருந்துவிட்டு அங்கு சென்று அவர் ஒளித்து வைத்திருந்த கதவின் திறப்பை எடுத்து கதவை திறந்து அங்கிருந்த 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளார்.
கடமை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டின் கதவை திறந்த போது தனது தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ளதை கண்டுகொண்ட அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், திருடிய பெண் 3 மாதங்களாக தலைமறைவாகி வந்த நிலையில் அவரை திங்கட்கிழமை (30) ஒட்டிசுட்டானில் வைத்து காத்தான்குடி பொலிஸார் கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்கிழமை ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.