டெல் அவிவ் நகரில் உள்ள மொசாட்டின் (இஸ்ரேலிய உளவு அமைப்பு) தலைமையகத்தின் மீது ஹெஸ்பொலா கடந்த புதன்கிழமையன்று ஏவிய ஏவுகணை, இரானால் தயாரிக்கப்பட்ட காதிர்-ஒன் பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படுகிறது.
இந்த ஏவுகணை 700 முதல் 1000 கிலோ வரை வெடிமருந்துகளை சுமந்து செல்லக்கூடியது மற்றும் முழு கட்டடத்தையும் அழிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது.
டேவிட் ஸ்லிங் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டிருப்பதால் ஹெஸ்பொலாவின் இந்தத் தாக்குதலை தடுப்பதில் இஸ்ரேல் வெற்றி பெற்றதாக இஸ்ரேலிய அரசின் செய்தித் தொடர்பாளர் டேவிட் மெயின்சர் தெரிவித்தார்.
இஸ்ரேல் மீது இரான் நேற்றிரவு பேலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு நடத்திய தாக்குதலை முறியடிப்பதிலும் டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது.
இரான் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதில் இஸ்ரேலின் அயர்ன் டோம் மற்றும் அமெரிக்காவுடன் டேவிட் ஸ்லிங் அமைப்பும் திறம்பட செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டேவிட் ஸ்லிங் என்பது என்ன?
இஸ்ரேல் தனது தொழில்நுட்ப திறனுக்காக உலகம் முழுவதும் புகழ் பெற்றது
இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிய பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கு மாற்றாக டேவிட் ஸ்லிங், உருவாக்கப்பட்டது.
டேவிட் ஸ்லிங் அமைப்பின் தற்காப்புச் செயல் திறன் பேட்ரியாட் அமைப்பை விட 100 கிலோமீட்டர் தூரம் அதிகம் என்று மத்திய ஆசிய ராணுவ விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசகர் கர்னல் அப்பாஸ் தோஹக் பிபிசியிடம் கூறினார்.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மூன்று அடுக்குகளை கொண்டது என்று இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை கண்காணிக்கும் 21C இணையதளம் தெரிவிக்கிறது.
டேவிட் ஸ்லிங் என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள ஒரு நடுத்தர தூர ஏவுகணைகளை முறியடிக்கும் பாதுகாப்பு அமைப்பாகும். இது ’அயர்ன் டோமுக்கு’ப் பிறகு மிகவும் வெற்றிகரமான பாதுகாப்பு கவசமாக கருதப்படுகிறது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனம் ரஃபேல் கூறுகிறது.
டேவிட் ஸ்லிங் ஒரு ‘முழுமையான, நடுத்தர முதல் நீண்ட தூர வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு’ என்றும் கருதப்படுகிறது.
பைபிளில் கூறப்பட்ட ஒரு கதையின் அடிப்படையில் இந்த ஆயுதத்திற்கு பெயரிடப்பட்டது. அதில் டேவிட் (தாவூத்) கோலியாத் (ஜாலூத்) மீது கற்களை வீசுவதற்கு கவனை (Slingshot) பயன்படுத்தினார் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறுகிறது.
டேவிட் ஸ்லிங், பேலிஸ்டிக் மற்றும் க்ரூயிஸ் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு குறுகிய தூர ஏவுகணைகளை அழிக்கிறது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
டேவிட் ஸ்லிங் பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரேலிய நிறுவனமான ரஃபேல் மற்றும் அமெரிக்க நிறுவனமான ரேதியோனால் தயாரிக்கப்பட்டு 2017இல் பயன்பாட்டுக்கு வந்தது என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
40 முதல் 300 கிலோமீட்டர் தொலைவு வரை ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து காக்கும் திறன் கொண்ட டேவிட் ஸ்லிங், ‘மந்திரக்கோல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
டேவிட் ஸ்லிங்கில் ஒரு ஏவுகணை செலுத்தும் அமைப்பு, ELM 2084 ரேடார், ஒரு இயக்க முறைமை மற்றும் ஸ்டன்னர் இடைமறிக்கும் ஏவுகணைகள் உள்ளன. டேவிட் ஸ்லிங்கின் ஒரு ஏவுகணை செலுத்தும் அமைப்பில் 12 ஏவுகணைகளை பொருத்த முடியும். அதன் அனைத்து பாகங்களும் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன என்று மிஸைல் த்ரெட் என்ற இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலில் டேவிட் ஸ்லிங் ஏவுகணையை பார்வையிடும் அமெரிக்க வீரர்கள்
ஸ்டெய்னர் ஏவுகணை
ஸ்டெய்னர் ஏவுகணை 4.6 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 15 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து வரும் எந்த ஒரு ராக்கெட் அல்லது ஏவுகணையையும் அழிக்கும் திறன் கொண்டது என்று மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் மிஸைல் த்ரெட் என்ற இணையதளம் தெரிவிக்கிறது.
இந்த ஏவுகணையின் முன் பகுதி ஒரு டால்ஃபின் வடிவத்தை ஒத்து இருக்கிறது. அதில் இரண்டு சென்ஸார்கள் நிறுவப்பட்டுள்ளன.
டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலை தாக்க வரும் எதிரியின் ஏவுகணைகளை செயல்பட விடாமல் தடுக்கும் (ஜாம் செய்யும்) திறனைக் கொண்டுள்ளது. ஸ்டெய்னர் ஏவுகணையில் திட எரிபொருள் அமைப்பு உள்ளது. இது ஒரு அதிவேக ஆயுதம்.
ஒரு ஸ்டெய்னர் ஏவுகணையை உருவாக்க பத்து லடசம் டாலர்கள் செலவாகும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிப்பதாக இஸ்ரேலிய நாளேடு ‘ஹாரெட்ஸ்’ தெரிவிக்கிறது.
அயர்ன் டோமில் பயன்படுத்தப்படும் ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் ஸ்டெய்னர் ஏவுகணையில் தனியாக வெடிபொருட்கள் (வார் ஹெட்) இருக்காது. ஏவுகணை நேரடியாகவே இலக்கைத் தாக்கும்.
இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பு
ரேடார் அமைப்பு
டேவிட் ஸ்லிங்கில் ELM 2084 மல்டி-மிஷன் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இது அத்துமீறும் விமானம் மற்றும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது.
இந்த ரேடார், விமான கண்காணிப்பு அல்லது தாக்குதல்களை கண்காணிக்கும் பணிகளுக்கும் பயன்படுத்தப்படலாம். இந்த ரேடார் 474 கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 1,100 இலக்குகளை கண்காணிக்க முடியும். இது மின்சார அமைப்பு மூலம் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது.
தாக்குதல் கண்காணிப்பு பணியைப் பற்றி நாம் பேசினால், அது 100 கிலோமீட்டர் வரம்பில் ஒரு நிமிடத்திற்குள் 200 இலக்குகளை கண்காணிக்க முடியும்.
இஸ்ரேல் டேவிட் ஸ்லிங் அமைப்பின் பணியை 2006 இல் தொடங்கியது
இஸ்ரேல், டேவிட் ஸ்லிங் அமைப்பை உருவாக்கும் வேலையை 2006 இல் தொடங்கியது. பின்னர் இந்த அமைப்பை உருவாக்க 2008 ஆகஸ்டில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
2006 மற்றும் 2020க்கு இடையில் டேவிட் ஸ்லிங்கை உருவாக்க அமெரிக்கா இரண்டு பில்லியன் டாலர்களை இஸ்ரேலுக்கு வழங்கியது என்று அந்நாட்டு நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவையின் ஆய்வு தெரிவிக்கிறது.
2009 அக்டோபரில், இஸ்ரேலிய நிறுவனமான ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம், சர்வதேச ஏவுகணைகள் மற்றும் லாஞ்சர்கள் தயாரிப்பதற்காக அமெரிக்க நிறுவனமான ரேதியோனுடன் 10 கோடி டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இஸ்ரேலிய நிறுவனமான ரஃபேல் முதன்முதலில் டேவிட் ஸ்லிங்கை 2013 இல் பாரிஸ் விமான கண்காட்சியில் காட்சிக்கு வைத்தது என்று ராணுவ உபகரணங்களைக் கண்காணிக்கும் இணையதளமான டிஃபென்ஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
டேவிட் ஸ்லிங்கின் முதல் வெற்றிகரமான சோதனை 2012 இல் ஒரு பாலைவனத்தில் நடத்தப்பட்டது என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவிக்கிறது.
டேவிட் ஸ்லிங் 302 மிமீ ராக்கெட்டுகள் மற்றும் இரானிய ஃபத்தஹ 110 ஏவுகணையை இடைமறிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று 2015 ஆம் ஆண்டு டிஃபென்ஸ் நியூஸில் வெளியான ஒரு செய்தி குறிப்பிடுகிறது.
இஸ்ரேல் இதை எப்போதெல்லாம் பயன்படுத்தியது?
ஹெஸ்பொலாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கர்னல் அப்பாஸ் தோஹக் கூறினார்
கோலன் குன்றுகளிலிருந்து வரும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க டேவிட் ஸ்லிங் முதன்முறையாக 2018 ஜூலையில் பயன்படுத்தப்பட்டது என்று 2018 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய செய்தித்தாள்கள் தெரிவித்தன.
இஸ்ரேல் டேவிட் ஸ்லிங்கைப் பயன்படுத்தி இரண்டு இடைமறிக்கும் ஏவுகணைகளை ஏவியது. சிரியாவால் ஏவப்பட்ட இரண்டு SS-21 பேலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் நோக்கத்துடன் அவை செலுத்தப்பட்டன என்று டிஃபென்ஸ் நியூஸ் வலைத்தளம் கூறுகிறது.
சிரியாவால் ஏவப்பட்ட ஏவுகணைகள் சிரிய எல்லைக்குள் விழுந்தன. அதே சமயம் ஒரு இஸ்ரேலிய ஏவுகணை கோலன் குன்றுகள் மீது விழுந்து சேதமடைந்தது.
டேவிட் ஸ்லிங்கில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை சிரிய ராணுவம் கைப்பற்றி அதை ஆய்வு செய்ய ரஷ்யாவுக்கு அனுப்பியது.
2023 மே மாதமும் டேவிட் ஸ்லிங்கை பயன்படுத்தியது பற்றி இஸ்ரேல் தகவல் கொடுத்தது. காஸாவில் இருந்து ஏவப்பட்ட, அயர்ன் டோமால் தடுக்க முடியாத ஏவுகணைகளை இந்த பாதுகாப்பு அமைப்பு அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது.
ஹெஸ்பொலாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், கடந்த புதன்கிழமை இந்த லெபனான் அமைப்பால் ஏவப்பட்ட ஏவுகணையை இஸ்ரேல் படைகள் அழித்ததாக இஸ்ரேலிய அரசின் செய்தித் தொடர்பாளர் டேவிட் மெயின்சர் கூறினார்.
“டெல் அவிவ் மீது ஹெஸ்பொலா பயங்கரவாதிகள் ஏவுகணையை வீசியது வரலாற்றில் இதுவே முதல் முறை. ஆனால் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பான டேவிட் ஸ்லிங் அதை வெற்றிகரமாக முறியடித்தது மற்றும் தெற்கு லெபனானில் உள்ள ஏவுதளங்களையும் அழித்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
டேவிட் ஸ்லிங் உள்ளிட்ட இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு ஹெஸ்பொலாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக நிரூபணமாகியுள்ளது என்று கர்னல் அப்பாஸ் தோஹக் கூறுகிறார்.
“இது பல ராக்கெட்டுகளை அழித்தது மட்டுமல்லாமல், வெவ்வேறு திசைகள் மற்றும் இடங்களில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் முறியடித்தது.”
ஜோர்டானின் ராணுவ விவகார நிபுணரான பிரிகேடியர் ஜெனரல் மூசா அல்-கல்பும், கர்னல் அப்பாஸ் தோஹாக்குடன் உடன்படுகிறார்.
2006 போருடன் ஒப்பிடும் போது டேவிட் ஸ்லிங் சிஸ்டம் காரணமாக இப்போது இஸ்ரேலுக்கு ஹெஸ்பொல்லா மீது ஒரு ஆதிக்க நிலை கிடைத்துள்ளது என்று அவர் கூறுகிறார்.
ஒருவேளை ஹெஸ்பொலாவின் சில ஏவுகணைகள் டேவிட் ஸ்லிங் இருக்கும் இடத்தை அடைந்து அதற்கு சேதம் விளைவிப்பதில் வெற்றி பெறக்கூடும். ஆனால் அது குறைவான விளைவையே ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார்.
ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மிக வேகமாக நகர்வதால் அவற்றை நிறுத்துவதில் டேவிட் ஸ்லிங் சிரமங்களை எதிர்கொள்ளலாம் என்று கர்னல் அப்பாஸ் தோஹக் கூறுகிறார்.
ஹெஸ்பொலாவிடம் இந்த ஏவுகணை இருக்கிறதா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டார்.
ரஷ்ய உதவியுடன் தயாரிக்கப்பட்ட சர்குன் ஏவுகணை ஹெஸ்பொலாவிடம் இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என்று மூசா அல்-கல்ப் கூறுகிறார்.
குறைந்த எண்ணிக்கையிலான இந்த ஏவுகணைகளை இரான் ஹெஸ்பொலாவுக்கு கொடுத்திருக்கும் சாத்தியக்கூறு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த முடிவு இரானின் உயர்மட்ட தலைமையின் சிறப்பு அதிகாரம் என்பதால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் நினைக்கிறார்.
டேவிட் ஸ்லிங்கை ஃபின்லாந்திற்கு வழங்கும் 355 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் 2023 நவம்பரில், கையெழுத்திட்டது.
டேவிட் ஸ்லிங், பேலிஸ்டிக், க்ரூஸ் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் போர் விமானங்களை கண்காணித்து அழிக்கும் திறன் கொண்ட உலகின் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும் என்று அப்போது இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பின் பலவீனங்கள்
படக்குறிப்பு, டேவிட் ஸ்லிங்கில் பொருத்தப்பட்ட ஒரு ஏவுகணையின் விலை பத்து லடசம் டாலர்கள்
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பில் சில பலவீனங்கள் இருக்கின்றன. அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துவது கடினம். அந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் அந்த ஆயுதங்களை குறிவைத்து அழிக்க முடியும் என்று மூசா அல்-கல்ப் கூறுகிறார்.
டேவிட் ஸ்லிங்கில் பொருத்தப்பட்ட ஒரு ஏவுகணையின் விலை பத்து லடசம் டாலர். அதனால் எதிரியின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்துடன் இதன் எண்ணிக்கையை ஒப்பிடமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப காரணங்களுக்காக இஸ்ரேல், டேவிட் ஸ்லிங்கை அயர்ன் டோம் போலப் பயன்படுத்தாது என்றும் மூசா அல்-கல்ப் கருதுகிறார்.
எழுதியவர், உமைமா அல்ஷாஸ்லி
-பிபிசி – செய்தி-