லெபனான் தலைநகரின் தெற்கு புறநகர் பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாரிய வெடிப்புகளுடன், இரவு வானெங்கும் பெரும் தீப்பிளம்புகளுடன் கரும்புகை வெளிவந்தது.

கடந்த வியாழக்கிழமை (03) இரவு முழுவதும் இடம்பெற்ற இந்தத் தாக்குதல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமாக இருந்ததாகவும் கார் ஆலாரங்கள் ஒலிக்க ஆரம்பித்ததாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் பெய்ரூட் குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது இஸ்ரேலியப் போர் விமானங்கள் சர்வதேச விமானநிலையத்தின் சுற்றுப்பகுதிகள் உட்பட மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீது சரமாரித் தாக்குதல்களை நடத்தியது.

இஸ்ரேலியப் படை தொடர்ச்சியாக 11 தடவைகள் தாக்குதல்களை நடத்தியதாகவும் பெய்ரூட்டில் இதுவரை இடம்பெற்ற அதிக தீவிரமான தாக்குதலாக இது இருந்ததாகவும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் எந்த விளக்கமும் அளிக்காதபோதும் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு பதில் அந்த அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் ஹாஷிம் சபிதீனை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதலை நடத்தி இருப்பதாக இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் உளவுத் தகவல் அடிப்படையில் பெய்ரூட் மீது நடத்திய துல்லியமான தாக்குதலில் ஹிஸ்புல்லா தொடர்பாடல் வலையமைப்பின் தலைவர் முஹமது ரஷீத் சபாகியை கொன்றதாக இஸ்ரேல் இராணுவம் நேற்றுக் கூறியது. சபாக்கியின் நிலை குறித்து ஹிஸ்புல்லா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இஸ்ரேல் இராணுவம் சிரியாவுடனான லெபனானின் மஸ்னா எல்லை மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வீதி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த வீதியைப் பயன்படுத்தியே அண்மைய நாட்களில் இஸ்ரேல் தாக்குதலுக்கு அஞ்சி நூற்றுக்கணக்கான லெபனானியர்கள் சிரியாவுக்கு தப்பிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 நாட்களில் 300,000க்கும் அதிகமான மக்கள் லெபனானில் இருந்து சிரியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலால் சிரியாவுடனான எல்லைக் கடவைக்கு அருகில் 12 அடி அகலமான பள்ளம் ஒன்று ஏற்பட்டிருப்பதாக லெபனானின் பொதுப் பணிகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அலி ஹமிகே ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

லெபனானுக்குள் ஆயுதங்களைக் கொண்டுவர இந்த எல்லைக்கடவை பயன்படுத்தப்படுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

‘ஆய்தங்கள் கடத்தப்படுவதை இஸ்ரேலிய இராணுவம் அனுமதிக்காது என்பதோடு இந்த போர் முழுவதும் செய்வது போல் படை பலத்தை பயன்படுத்துவதற்கும் தயங்காது’ என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் அவிசாய் அட்ராயி எக்ஸ் சமூகதளத்தில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் லெபனானில் உள்ள சுமார் 900 தற்காலிக முகாம்களும் கிட்டத்தட்ட நிரம்பி இருப்பதாகவும் மக்கள் வெட்ட வெளிகளில் உறங்கும் நிலை அதிகரித்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான நிறுவன அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று பெய்ரூட் நகரை வந்தடைந்தார். விமானநிலைய சுற்றுப்புறத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்திலேயே அவர் அங்கு சென்றுள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் 1,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மட்டுப்படுத்தப்பட்ட தரைவழி நடவடிக்கையை மேற்கொள்வதாக குறிப்பிடும் நிலையில் ஹிஸ்புல்லா போராளிகள் அங்கு தமது நிலைகளை தக்கவைத்து வருகின்றனர்.

இதன்போது இரு தரப்புக்கும் இடையே நேரடி மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

தெற்கு லெபனானில் மேலும் 20 சிறு நகரங்களில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் நேற்று புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்த நிலையில் அது தனது தரைவழி நடவடிக்கையை விரிவுபடுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யவே தரைவழி படை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது.

 

Share.
Leave A Reply