கடந்த இரண்டு வாரங்களாக லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய துருப்புக்கள் லெபனானில் படையெடுத்துள்ளன.

இவை இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையிலான தற்போதைய மோதலின் காரணமாக நடந்தவை. ஹெஸ்பொலா லெபனானில் இருக்கும் ஒரு அரசியல் கட்சி மற்றும் ஆயுதக் குழு.

லெபனானின் தேசிய ராணுவத்தை விட ஹெஸ்பொலா மிகவும் சக்திவாய்ந்தது. குறிப்பாக, லெபனானின் ஷியா முஸ்லிம் மக்கள் மத்தியில் அது ஆதரவைப் பெற்றுள்ளது.

ஹெஸ்பொலா ஒரு அதிகாரப்பூர்வ அரசு அமைப்பு அல்ல. ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் லெபனானுக்குள் அது ஒரு ஆதிக்கச் சக்தியாக மாறியுள்ளது.


படக்குறிப்பு, லெபனானில் ஷியா சமூகங்கள் பெருமளவில் உள்ள பகுதிகளில் பள்ளிகள், சுகாதாரம், மற்றும் சமூக சேவைகள் போன்றவற்றையும் ஹெஸ்பொலா வழங்குகிறது

லெபனானை யார் ஆட்சி செய்கிறார்கள்?

லெபனானில், அரசியல் அதிகாரம் பல்வேறு மதப் பிரிவுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளன.

1943-இல் லெபனான் பிரான்சிடமிருந்து சுதந்திரம் பெற்ற போது மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி, லெபனானின் அதிபர் மரோனைட் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவராகவும், பிரதமர் சுன்னி முஸ்லீமாகவும், நாடாளுமன்ற சபாநாயகர் ஷியா முஸ்லிமாகவும் இருக்க வேண்டும்.

இது அந்த நேரத்தில் லெபனானில் இருந்த பல்வேறு மத குழுக்களைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கையைப் பிரதிபலித்தது. அப்போது சுன்னி மற்றும் ஷியா முஸ்லீம்களை விட அதிக எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் இருந்தனர். லெபனான் மக்கள் தொகையில் பாதிக்கும் மேல் கிறிஸ்தவர்களே இருந்தனர்.

இருப்பினும், கிறிஸ்தவர்கள், சுன்னி முஸ்லீம்கள், மற்றும் ஷியா முஸ்லீம்கள் மக்கள் தொகையில் தலா 30% சதவீதத்திற்கும் சற்று அதிகமாக இருப்பதாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளதால், இந்த உடன்படிக்கை காலாவதியானது என்று பலர் கூறுகிறார்கள்.

உடன்படிக்கையின்படி, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நாடாளுமன்றத்தில் சமமான இடங்கள் உள்ளன. இருப்பினும் லெபனான் மக்கள்தொகையில் முஸ்லிம்கள் இப்போது பெரும்பான்மையாக உள்ளனர்.

உண்மையில், லெபனானில் எந்தவொரு கட்சியும் அல்லது மதப் பிரிவும் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அரசாங்கங்கள் கூட்டணிகளால் உருவாக்கப்படுகின்றன. மேலும், அனைத்து பெரிய முடிவுகளும் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட வேண்டும். இதனால் அங்கு அடிக்கடி அரசியல் முடக்கம் ஏற்படுகிறது.


குறிப்பாக, லெபனானின் ஷியா முஸ்லிம் மக்கள் மத்தியில் ஹெஸ்பொலா ஆதரவைப் பெற்றுள்ளது

லெபனானில் ஹெஸ்பொலாவின் நிலை என்ன?

1982-ஆம் ஆண்டு, லெபனான் உள்நாட்டுப் போரின் போது, லெபனானை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேலியப் படைகளை எதிர்க்க, ஷியா முஸ்லீம்களின் ஆயுதக் குழுவாக ஹெஸ்பொலா அமைக்கப்பட்டது.

இக்குழுவுக்கு, இரானின் இஸ்லாமிய குடியரசு பெருமளவில் ஆயுதம் மற்றும் நிதியுதவி வழங்கியுள்ளது. அரபு மொழியில் ஹெஸ்பொலா என்பதன் பொருள் ‘கடவுளின் கட்சி’ என்பதாகும்.

1985-இல் ஹெஸ்பொலா தனது இருப்பை முறையாக அறிவித்தது. அப்போது அக்குழு, இரானில் உள்ளதைப் போல லெபனானில் ஒரு இஸ்லாமிய அரசை நிறுவ விரும்புவதாக அறிவித்தது. தெற்கு லெபனான் மற்றும் பாலத்தீனப் பகுதிகளில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அது உறுதியளித்தது.

2009-இல், ஹெஸ்பொலா ஒரு புதிய கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது. அதில் அது ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்குவதைக் குறிப்பிடவில்லை. இருப்பினும், இஸ்ரேலுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அது தொடர்ந்தது.

லெபனானின் உள்நாட்டுப் போர் 1990-இல் முடிவடைந்தபோது, ​​போரிட்ட அனைத்துப் பிரிவுகளும் தங்கள் ஆயுதக் குழுக்களை கலைத்தன. இருப்பினும், ஹெஸ்பொலா கலைக்கப்படவில்லை. தெற்கில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராட வேண்டும் என்று அது கூறியது.

இஸ்ரேல் இறுதியாக 2000-ஆம் ஆண்டில் அப்பகுதியிலிருந்து தனது படைகளை திரும்பப் பெற்றது. ஹெஸ்பொலா அதை வெற்றி என்று கூறியது.

1992-இல், ஹெஸ்பொலா நாடாளுமன்றத்திற்கு வேட்பாளர்களை நிறுத்த தொடங்கியது.

லெபனானில் ஹெஸ்பொலா இப்போது பல நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அந்நாட்டின் அரசாங்கத்தில் ஹெஸ்பொலா அமைச்சர்களும் உள்ளனர்.

லெபனானில் ஷியா சமூகங்கள் பெருமளவில் உள்ள பகுதிகளில் பள்ளிகள், சுகாதாரம், மற்றும் சமூக சேவைகள் போன்றவற்றையும் ஹெஸ்பொலா வழங்குகிறது.

லெபனானில் உள்ள மற்ற கட்சிகளும் தங்கள் தொகுதிகளுக்கு இத்தகையச் சேவைகளை வழங்குகின்றன. ஆனால் அவற்றைவிட ஹெஸ்பொலா மிகப்பரந்த வலையமைப்பைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.


ஹெஸ்பொலாவிடம் 1.2 லட்சம் முதல் 2 லட்சம் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளன என்று என்று கூறப்படுகிறது

ஹெஸ்பொலா எப்படி சக்தி வாய்ந்த குழு ஆனது?

ஹெஸ்பொலா லெபனானில் சக்தி வாய்ந்ததாக இருப்பதற்கு அதன் ஆயுததாரிகளே காரணம். அக்குழு தங்களிடம் 1 லட்சம் வீரர்கள் உள்ளனர் என்று கூறுகிறது. இருப்பினும் சுயாதீன மதிப்பீடுகள் இந்த எண்ணிக்கை 20,000 முதல் 50,000 வரை இருக்கக் கூடும் என்கின்றன.

ஹெஸ்பொலாவிடம் 1.2 லட்சம் முதல் 2 லட்சம் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளன என்று அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட சிந்தனைக் குழுவான, ‘உத்தி மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம்’ தெரிவித்துள்ளது.

ஹெஸ்பொலா உலகின் மிகவும் சக்திவாய்ந்த அரசு சாரா ராணுவங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. இது லெபனானின் தேசிய ராணுவத்தை விட மிகவும் வலிமையானதாகக் கருதப்படுகிறது.

லெபனானின் தேசிய அரசாங்கம் பலவீனமாக இருப்பதாலும் ஹெஸ்பொலா ஆயுதக்குழு பயனடைந்துள்ளது. 2022-ஆம் ஆண்டு முதல் லெபனானுக்கு அதிபர் இல்லை. அதிபர் யார் என்பதைத் தீர்மனிப்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே உடன்படிக்கை ஏற்படவில்லை. ஹெஸ்பொலா தனது சொந்தக் குறிக்கோளைச் செயல்படுத்துவதைத் தடுக்கும் அளவுக்கு லெபனான் அரசு பலமானதாக இல்லை.

Share.
Leave A Reply