அக்டோபர் 7 தாக்குதல்: பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்ததாக இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டுவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேலை நோக்கி ஆயிரக்கணக்காக ராக்கெட்டுகள் சரமாரியாக பாய்ந்தன. தரைவழியாக ஊடுருவியும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாக பிடிப்பித்துச்செல்லப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ரகசிய ஆவணங்கள்: காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் சூளுரைத்துள்ள நிலையில் ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதல் குறித்த முக்கிய ரகசியங்களை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கணினியில் இருந்து 36 பக்க ரகசிய ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அமைதி: அந்த ஆவணத்தின்படி, கடந்த 2023 அக்டோபர் 7 தாக்குதலை ஹமாஸ் ஒரு வருடத்துக்கு முன்பாகவே 2022 ஆம் ஆண்டிலேயே நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்ட இந்த திடீர் தாக்குதலுக்காகக் கடந்த 2021 முதல் ஹமாஸ் அமைப்பு எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் இஸ்ரேலை நம்ப வைக்க அமைதி காத்து வந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டபோதும் ஈரான், ஹிஸ்புல்லா உதவியைப் பெறும்வகையில் திட்டத்தைத் தள்ளிப் போட்டுள்ளனர்.

ஆக்கிரமிப்பு: கடந்த 2022 ஆம் ஆண்டு மீண்டும் பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் ஆன பின்னர் காசா தெற்கு முனையிலும், அல்அக்சாவிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு விரிவுபடுத்தப்பட்டுவந்ததால் ஹமாஸ் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்துவதில் உறுதியாக இருந்துள்ளது.

ஜூலை 2023 இல் லெபனானில் ஈரான் படைத்தலைவரைச் சந்திக்க ஹமாஸ் தரப்பில் இருந்து உயர் மட்ட அதிகாரி ஒருவர் அனுப்பப்பட்டுள்ளார்.

உதவி: அப்போது இஸ்ரேல் மீதான தாக்குதல் திட்டம் குறித்து இரான் படைத்தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அப்போது இந்த தாக்குதல் குறித்து இன்னும் அதிக நேரம் செலவிட்டு கச்சிதமாகத் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த அந்த கணினியில் கிடைத்த ஆவணத்தின்படி ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுடனும் ஹமாஸ் திட்டம் குறித்து விவாதித்துள்ளது.

இந்த சந்திப்புகளின் பின் ஈரான், ஹிஸ்புல்லா பின்னணியில் ஆதரவு அளிக்கும் என்ற தைரியம் ஹிஸ்புல்லவை அக்டோபர் 7 தாக்குதலை நோக்கி நகர்த்தியுள்ளது.

மேலும் ஈரான் தரப்பிலிருந்து ஹமாஸ் ஆயுதப்படைக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், ஹமாஸ் தலைவர் யாஹோவா சின்ஹார் ஈரானிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டாலர்கள் எதிர்பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

திட்டம் அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேல் நகரங்களில் உள்ள ஷாப்பிங் மால்கள், ராமானுவ கமாண்ட் சென்டர்களும் முதலில் குறிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று டுவின் டவர்ஸில் அல் கொய்தா நடத்திய 9/11 தாக்குதலைப் போல் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் இல் உள்ள அஸ்ரேலி [Azrieli] டவர்ஸ் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டிருந்ததாகவும் அந்த ரகசிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த ஹமாஸ் தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என்று கூறப்படுவதை ஈரான் மறுத்துள்ளது.

Share.
Leave A Reply