நாட்டில் கடந்த ஒரு வாரமாக நிலவிய மழையுடனான காலநிலை சற்று குறைவடைந்துள்ளது. அதிக பாதிப்புக்கள் ஏற்பட்ட மேல் மாகாணத்தில் நேற்று மழை பதிவாகவில்லை. அதே போன்று ஏனைய மாகாணங்களிலும் மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறைவடையும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எவ்வாறிருப்பினும் கடந்த 7ஆம் திகதி முதல் நேற்று செவ்வாய்கிழமை (15) வரை வெள்ளம், காற்று மற்றும் மண் சரிவு என்பவற்றால் 13 மாவட்டங்களில் 40 ,768 குடும்பங்களைச் சேர்ந்த 159,547 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை 2,433 குடும்பங்களைச் சேர்ந்த 10,361 பேர் 80 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பகுதியளவில் சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 380 ஆக உயர்வடைந்துள்ளது.
கொழும்பு, காலி, கம்பஹா, கேகாலை, திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீக்கப்படவில்லை. எனினும் உயர்வடைந்திருந்த ஆறுகளின் நீர்மட்டம் நேற்றைய தினம் குறைவடைந்திருந்தது. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் நீர் வழிந்தோடவில்லை.
மேல், சப்ரகமுவ, வடமேத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் சில சந்தர்ப்பங்களில் 75 மில்லி மீற்றர் பதிவாகக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடுவலை உள்ளிட்ட பிரதேசங்களில் வெள்ளம் வழிந்தோடாமையால் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த மேல் மற்றும் தென் மாகாண பாடசாலைகள் இன்று புதன்கிழமை திறக்கப்படும் என மாகாண கல்வி பணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தங்குமிடங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் திறக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.