யுக்ரேன் போர்: ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள், சீனா, இரானின் ஆயுதங்களா? உண்மை என்ன?
யுக்ரேன் போர்: ரஷ்யாவிற்கு எந்தெந்த நாடுகள் ஆயுதம் வழங்குகின்றன?

யுக்ரேனுடனான போரில் ரஷ்யா ஆண்டுக்கு லட்சக்கணக்கான ஷெல் குண்டுகளை யுக்ரேன் ராணுவத்தின் மீது வீசுகிறது. மேலும் அங்கு பொதுமக்கள் வாழும் பகுதிகளின் மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறது.

இதில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான வெடிபொருட்கள் ரஷ்யாவின் நட்பு நாடுகளால் வழங்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது.

மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் அந்நாட்டின் ஆயுதங்களைத் தயாரிக்கும் திறனைத் தடுக்க முயல்கின்றன.

ஆனால், அதே வேளையில் சீனா, இரான், வட கொரியா போன்ற நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கி உதவுவதாகக் கூறப்படுகிறது.

இரான் வழங்கும் ட்ரோன்கள், ஏவுகணைகள்

ஃபாத்-360 என்பது 150 கிலோ வெடிபொருட்களை சுமந்து, சுமார் 120 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய ஒரு ஏவுகணை. குறுகிய தூரம் தாக்கும் இந்த பாலிஸ்டிக் ஏவுகணைகளை, சுமார் 200 அல்லது அதற்கும் மேற்பட்ட அளவில் ரஷ்யாவுக்கு வழங்க இரான் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

ரஷ்யாவின் ஆயுதப்படையைச் சேர்ந்த பல வீரர்கள் இந்த ஏவுகணையைப் பயன்படுத்த இரானில் பயிற்சி எடுத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குறிப்பிடுகிறது.

மேலும், எதிர்காலத்தில் இந்த ஏவுகணைகள் மூலம் யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள் சண்டையிடுவதாக முன்பு எழுந்த குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் “முழுமையான முட்டாள்தனம்” என்று கூறி மறுப்பு தெரிவித்தார்

ரஷ்யா ஃபாத்-360 ஏவுகணைகளைப் பயன்படுத்தி யுக்ரேனின் பல்வேறு நகரங்கள் மற்றும் அந்நாட்டின் எல்லைகளுக்கு அருகிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற இடங்களைத் தாக்கலாம்.

இதனால் யுக்ரேனின் மிகவும் உள்ளார்ந்த பகுதிகளில் இருக்கும் இலக்குகளைத் தாக்குவதற்கு மட்டும் அதன் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த முடியும்.

“ஃபாத்-360 ஏவுகணை ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள யுக்ரேனிய இலக்குகளைத் தாக்குவதற்கு உதவும். ரஷ்யாவிடம் இதுபோன்ற ஏவுகணை இல்லை,” என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் போர் ஆய்வுத் துறையைச் சேர்ந்த முனைவர் மெரினா மிரோன் கூறுகிறார்.

ரஷ்யா இரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பம் உள்பட ராணுவத் தொழில்நுட்பத்தை வழங்கலாம் என்றும் அவர் கூறுகிறார். ரஷ்யாவுக்கு ஏவுகணைகளை வழங்கியதற்காக இரான் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் புதிய தடைகளை விதித்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இரானை சேர்ந்தவர்களின் மீது, பயணத் தடைகள், சொத்து முடக்கம் ஆகியவற்றுடன் சேர்த்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவிற்குள் நுழைய இரானின் விமானங்கள் மீது கட்டுப்பாடுகள் போன்றவை விதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவிற்கு ஃபாத்-360 போன்ற சுயமாக இலக்கை நோக்கிச் செல்லும் ஆயுதங்களை வழங்குவதை இரான் பலமுறை மறுத்துள்ளது.

ஷாஹேத்-136 ட்ரோன், நகரங்கள், உள்கட்டமைப்புகளைத் தாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 500 கிலோ எடையுள்ள ராக்கெட்டை சுமந்து செல்ல முடியும்.

கடந்த 2022ஆம் ஆண்டில் யுக்ரேன் – ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து ஷாஹேத்-136 ட்ரோன்களை இரான் ரஷ்யாவிற்கு வழங்கி வருவதாக யுக்ரேன் அரசாங்கம் மற்றும் மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளும் கூறுகின்றன.

ஷாஹேத் ட்ரோன் அதன் முனையில் வெடிபொருட்களைக் கொண்டுள்ளது. அதோடு, தாக்குவதற்கான உத்தரவு வழங்கப்படும் வரை அது இலக்கைச் சுற்றியே வட்டமடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யுக்ரேனின் வான் பாதுகாப்பை முறியடிக்க முயற்சி செய்ய இந்த ட்ரோன்களை அதிக எண்ணிக்கையில் ரஷ்ய படைகள் பயன்படுத்துகின்றன.

இந்த ட்ரோன்கள், அதிக வெடிபொருட்களைக் கொண்டு அதிக சேதங்களை ஏற்படுத்தும். இவை பெரும்பாலும், க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பது, யுக்ரேனின் வான் பாதுகாப்பை முறியடிப்பது ஆகியவற்றுக்காகப் பயன்படுகின்றன.

யுக்ரேன் – ரஷ்யா போர் தொடங்குவதற்கு முன்பு ‘சிறிய எண்ணிக்கையில்’ மட்டுமேரோன்களை வழங்கியதாக இரான் அரசு கூறுகிறது.

இருப்பினும், இரான் ரஷ்யாவுக்குத் தொடர்ச்சியாக ஆயுதங்களை வழங்கி வருவதாக, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் குற்றம் சாட்டின. ஐரோப்பிய ஒன்றியம் இதில் தொடர்புடைய மக்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது.

வட கொரியா வழங்கும் ஷெல் குண்டுகள், ஏவுகணைகள்

வட கொரியா ரஷ்யாவிற்கு மூன்று மில்லியன் ஷெல் குண்டுகளை வழங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு (DIA) 2024ஆம் ஆண்டு மே மாதம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ரஷ்யா – யுக்ரேன் போரில் முன்வரிசையில் இரு தரப்பினரும் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம் பீரங்கி. இது எதிரி நாட்டின் காலாட்படை முன்னேறித் தாக்குதல் நடத்துவதில் இருந்தும், அவர்களின் ஆயுதங்களிடம் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.

சமீபத்திய மாதங்களில், யுக்ரேனைவிட ரஷ்யாவிடம் 5 மடங்கு அதிகமான ஷெல் குண்டுகளின் இருப்பு காணப்படுவதாக ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனம் எனப்படும் பிரிட்டனை சேர்ந்த ஒரு திட்டக் குழு கூறியுள்ளது.

கடந்த 2023அம் ஆண்டு கிழக்கு யுக்ரேனில் அதிக பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம் என்றும் அந்தத் திட்டக்குழு கூறியுள்ளது.

யுக்ரேனில் உள்ள கார்கிவ் பகுதியில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியதில் பயன்படுத்தப்பட்ட இரண்டு வகையான குறுகிய தூர இலக்குகளைத் தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளின் சிதைவைக் கண்டுபிடித்ததாகவும், அவை வட கொரியாவால் தயாரிக்கப்பட்டவை என்றும் யுக்ரேனிய உளவுத்துறை அதிகாரிகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவித்தனர்.

அதில் ஒன்று KN-23/ஹ்வாசாங்-11 ஏவுகணை என்று யுக்ரேனின் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இது 400 கிலோமீட்டர் முதல் 690 கிலோமீட்டர் வரை தாக்கக்கூடிய குறுகிய தூரம் தாக்கும் ஒரு ஏவுகணை. இதனால் 500 கிலோ எடையுள்ள வெடிபொருட்களையும் சுமந்து செல்ல முடியும்.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் வட கொரியாவுடன் பாலிஸ்டிக் ஏவுகணைகள் தொடர்பான வர்த்தகத்திற்கு ரஷ்யாவுக்கு ஐ.நா அனுமதி அளித்துள்ளது. வடகொரியா ரஷ்யாவிற்கு 50 ஏவுகணைகளை அனுப்பியுள்ளதாக யுக்ரேன் உளவுத்துறை கூறுகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஐ.நா பாதுகாப்பு சபையின் கூட்டத்தில், யுக்ரேன் மீது நடத்தப்பட்ட குறைந்தது 9 வான் தாக்குதல்களில் வட கொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

ரஷ்ய படையில் வட கொரிய வீரர்களா?

கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து ரஷ்யாவும் வடகொரியாவும் ஆயுத விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்ததாகவும், 2023ஆம் ஆண்டு வட கொரியா ரஷ்யாவிற்கு சோதனைக்காக ஆயுதங்களை அனுப்பியதாகவும் அமெரிக்க பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு கூறுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி யுக்ரேன் மீது ரஷ்யா தாக்கத் தொடங்கியதாகவும் அது கூறுகிறது.

“இஸ்கண்டர் போன்ற குறுகிய தூரம் தாக்கும் ஏவுகணைகளைவிட ஹ்வாசாங்-11 ஏவுகணைகள் ரஷ்யாவிற்கு மலிவானவை. செலவுகளைக் கணக்கிட்டு ரஷ்யா இதைச் செய்துள்ளது” என்கிறார் முனைவர் மெரினா மிரோன்.

மேலும், இரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகளுடன் ஆயுத ஒப்பந்தங்கள் மேற்கொள்வது மூலம் ரஷ்யா தனக்கு நட்பு நாடுகள் இருப்பதையும், அது தனிமைப்படுத்தப்படவில்லை என்பதையும் மேற்குலகுக்கு காட்டுகிறது.

ஹ்வாசாங்-11 போன்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள் அவற்றின் இலக்கை நோக்கி மிக அதிக வேகத்தில் செல்வதால் அதை இடைமறிப்பது கடினம்.

ஆனால் வட கொரியாவில் இருந்து பெறப்பட்ட இந்த ஏவுகணைகளைக் கொண்டு யுக்ரேன் இலக்குகளைத் தாக்க ரஷ்யா தவறிவிட்டது. ஏனெனில் அவை மின்னணு பிழைகள் காரணமாகத் திட்டமிடப்பட்ட பாதைகளில் செல்லவில்லை என்று யுக்ரேனின் உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பவில்லை என்று வடகொரியா கூறுகிறது, வடகொரியாவில் இருந்து ஆயுதங்கள் எதையும் பெறவில்லை என்று ரஷ்யா கூறுகிறது.

ரஷ்ய படைகளுடன் வடகொரிய வீரர்கள் இருப்பதைக் கண்டதாக யுக்ரேனிய உளவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

கிழக்குப் பகுதியில் ரஷ்ய ராணுவ பயிற்சித் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஆறு வட கொரிய அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் மூவர் காயமடைந்ததாகவும் யுக்ரேன் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதாக கடந்த அக்டோபர் 3ஆம் தேதியன்று யுக்ரேனின் செய்தித்தாள்களில் வெளியான செய்திகள் கூறுகின்றன.

யுக்ரேனில், ரஷ்ய படையில் வட கொரிய வீரர்கள் சண்டையிடுவதாக ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் “முழுமையான முட்டாள்தனம்” என்று கூறி மறுப்பு தெரிவித்தார்.

சீனாவில் ரஷ்யாவின் டிரோன் தொழிற்சாலையா?

ரஷ்யாவுக்கு அதிகளவிலான ஆயுதங்களை வழங்கி, அதன் ராணுவ நடவடிக்கைகளுக்கு சீனா உதவி வருவதாக, நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஒருமித்த குரலில் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் பயன்பாடுகளைக் கொண்ட, அதேவேளையில் ஆயுதங்களை உருவாக்கவும் பயன்படுத்தவல்ல, கணினி சிப்கள் போன்ற ‘இரட்டைப் பயன்பாடுள்ள’ பொருட்களை சீனா வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏவுகணைகள், டிரோன்கள், ராக்கெட்டுகள் போன்ற ஆயுதங்களைத் தயாரிக்கப் பயன்படும் ‘உயர் முன்னுரிமை’ கொண்ட இரட்டை பயன்பாட்டுத் தயாரிப்புகளை ஒவ்வொரு மாதமும் சீனா ரஷ்யாவிற்கு அனுப்பி வருவதாக அமெரிக்காவில் இருந்து இயங்கும் சர்வதேச அமைதிக்கான கார்னெகி எண்டோவ்மென்ட் கூறுகிறது.

தனது மொத்த இயந்திரக் கருவிகளில் 70% (ஆயுத உறைகள் தயாரிக்கப் பயன்படுத்தலாம்), மைக்ரோ மின்னணு தயாரிப்புகளான சிப்கள், செமி கண்டக்டர்களில் 90% ஆகியவற்றை ரஷ்யாவிற்கு விற்பனை செய்வதாக கார்னெகி எண்டோவ்மென்ட் கூறுகிறது.

அந்த அமைப்பு 2023இல், ரஷ்யா அதன் அனைத்து உயர் முன்னுரிமை வாய்ந்த இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களில் 89 சதவிகிதத்தை சீனாவில் இருந்து இறக்குமதி செய்ததாகக் கூறுகிறது. போருக்கு முன்பாக, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் அவற்றில் பெரும்பாலானவற்றை வழங்கி வந்ததாகவும் கார்னெகி அமைப்பு குறிப்பிடுகிறது.

யுக்ரேன் போர் விவகாரத்தில் தாம் நடுநிலை வகித்ததாகக் கூறி, ஆயுதங்களை உருவாக்க ரஷ்யாவுக்கு உதவுவதை சீனா மறுத்துள்ளது. சீனா ரஷ்யாவிற்கு ஆபத்தான உபகரணங்களை வழங்கவில்லை எனவும், தான் விற்கும் உதிரிபாகங்களில் கவனமாக இருந்ததாகவும் சீனா கூறியுள்ளது.

இதற்கிடையே, கார்பியா-3 என்ற புதிய வகை நீண்ட ஆளில்லா விமானத்தைத் தயாரிப்பதற்காக ரஷ்யா சீனாவில் ஒரு தொழிற்சாலையை அமைத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.

ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, அப்படி எந்தவொரு திட்டத்தைப் பற்றியும் தான் அறிந்திருக்கவில்லை என்றும் டிரோன் ஏற்றுமதியில் கடுமையான கட்டுப்பாடுகளைத் தனது அரசு கொண்டுள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது.

-எழுதியவர், ஜெரிமி ஹோவெல்
பிபிசி உலக சேவை-

Share.
Leave A Reply