வைத்திய பரிந்துரைக்கு அமைய பயன்படுத்தக்கூடிய மற்றும் மருந்தகங்களில் மாத்திரமே விற்பனை செய்யக்கூடிய பல வகையான அழகுசாதனப் பொருட்களை, கொழும்பு, புறக்கோட்டையில் உள்ள அழகு சாதனக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, சருமத்தை வெண்மையாக்குவதற்காக சில நுகர்வோர் அவற்றை கொள்வனது செய்வது தெரியவந்துள்ளது.
புறக்கோட்டையில் உள்ள அழகு சாதன கடைகளில் நேற்று நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது பல வகையான அழகுசாதனப் பொருட்களை நுகர்வோர் விவகார அதிகார சபை கைப்பற்றியுள்ளது.
தீக்காயங்களினால் ஏற்படும் தழும்புகளை அகற்றுவதற்காக இவை பயன்படுத்தப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
எனினும், இந்த அழகுசாதனப் பொருட்களை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பெற முடியும் எனவும் அவற்றை பதிவு செய்யப்பட்ட மருந்தகங்களில் மட்டுமே விற்க முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால் பல்வேறு நபர்கள் தமது சருமத்தை வெண்மையாக்குவதற்காக இவ்வாறான அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முனைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் சஞ்சீவ வீரசிங்க, (சுற்றிவளைப்புக்கள் மற்றும் விசேட விசாரணைகள்),
“வெள்ளையாக ஆக வேண்டும் என்ற ஆசை அதிகம் உள்ளது. இளம்பெண்கள் மட்டுமின்றி ஆண் பிள்ளைகளும் இந்த அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இது உடலுக்கு நல்லதல்ல. புறக்கோட்டையில் உள்ள 16 கடைகளில் இந்த அழகுசாதன பொருட்கள் கிடைத்துள்ளன.”