யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் கொந்தகளிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (20) காலை 07.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய-கிழக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் கடற்படையினர் இது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டலத்தில் நாளை (21) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பின்னர், இந்த அமைப்பு வடமேற்கு நோக்கி நகர்ந்து ஒக்டோபர் 23ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மிக பலத்த காற்றும் (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோமீற்றர்) வீசக்கூடும் என்றும் அந்த கடற்பரப்புகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மன்னாரிலிருந்து காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை: காங்கேசந்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.