பலஸ்தீனர்களை இஸ்ரேல் நடத்தும் விதத்தை “நாஜி ஜேர்மனி” மற்றும் “நிறவெறி” ஆகியவற்றுடன் ஒப்பிட்டுள்ளார் இஸ்ரேலிய இராணுவத்தின் வடக்கு கட்டளை பிரிவின் முன்னாள் தலைவர் அமிராம் லெவின்.

இஸ்ரேலிய இராணுவம் பலஸ்தீன மக்கள் மீதான குடியேற்றவாசிகளின் வன்முறையை காண்பிக்கிறது. இராணுவம் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பேற்கும் நிலையை ஏற்படுத்தலாம் என்று அவர் கூறுகின்றார்.

இஸ்ரேலிய வனொலி ஒளிபரப்பொன்றில் பேசிய கேன் அமிராம் லெவின், ‘57 ஆண்டுகளாக அங்கு ஜனநாயகமே இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு மொத்தமாக நிறவெறியே நிலவுகிறது என்று மேற்குக் கரையில் நிலவும் நிலைமையைக் குறிப்பிட்டு லெவின் கூறினார்.

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும், ஜேர்மன்,சவுதி, எகிப்து, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் என்பன பலஸ்தீன மக்கள் மீதான ஓராண்டு கால இஸ்ரேலிய கோரதாண்டவத்துக்கு ஆதரவளித்து வருகின்றன.

காசாவில் இனப்படுகொலை தொடங்கிய ஓராண்டு நிகழ்வு அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோரின் சுருக்கமான, பாசாங்குத்தனமான மற்றும் முற்றிலும் தவறான தகவல்களைக் கொண்ட அறிக்கைகளால் நினைவு கூறப்பட்டது.

இருவரும் வெளியுறவுத்துறையிலிருந்து தமக்கு வழங்கப்பட்ட வழமையான பலஸ்தீனம் பற்றிய தவறான தகவல்களை அடிப்டையாகக் கொண்டு, அமெரிக்க கூட்டானமை ஊடகங்களில் முழுமையான நம்பிக்கை கொண்டு தமது கருத்துக்ளை எதிரொலித்தனர்.

பைடன்

ஹமாஸ் போராளிகளின் தாக்குதல் “ஹோலோகாஸ்டுக்குப் பிறகு யூத மக்கள் முகம் கொடுத்த மிக மோசமான நாள்” என்று பைடன் குறிப்பிட்டுள்ளார். பாரிய அளவிலான கற்பழிப்புகள் பற்றிய எந்த வகையிலும் நிரூபிக்கப்படாத கூற்றுக்களை மேற்கோள் காட்டிய ஹாரிஸ், “அந்த நாளில் ஹமாஸ் செய்தது முற்றிலும் தீமையானது. அது மிருகத்தனமானது மற்றும் வேதனையானது” என்று கூறினார்.

உண்மையில் ஹோலோகாஸ்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது கடந்த ஆண்டில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகளில் தான் உள்ளது. முதலில் காசாவில், பின்னர் மேற்குக் கரைக்கும், இப்போது லெபனானுக்கும் அது விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

உலக சோஷலிச இணையத்தின்படி, காசாவில் குண்டு வீச்சுகள், முற்றுகை, பட்டினி மற்றும் நோய் ஆகியவற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 186,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த எண்ணிக்கை இப்போது 200,000 க்கும் அதிகமாக இருக்கலாம் என எண்ணப்படுகின்றது. இதனை பிரித்தானிய மருத்துவ வெளியீடான ‘தி லான்செட்டால் ‘ உம் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் அரசின் நவீனகால குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக ஹோலோகாஸ்டின் நினைவுளை, தொடர்ச்சியாக அவர்கள் கொண்டு வந்தபோதிலும் உணமையில் இஸ்ரேல் தான் நாசிக்களின் காட்டுமிராண்டித்தனமான முறைகளை வெளிப்படையாக பிரதி எடுத்து செயல்படுத்துகின்றது.

ஹிட்லரின் ஆட்சியின் மிகவும் மோசமான பாரிய படுகொலைச் செயல்கள் இடம்பெற்ற பின், 1942 இல் செக் நாட்டின் புரட்சி போராளிகளால் கெஸ்டாபோ தலைவர் ரெய்ன்ஹார்ட் ஹைட்ரிச் கொல்லப்பட்ட பிறகு, ஜேர்மன் படைகள் லிடிஸ் கிராமத்தை குறிவைத்து சுற்றி வளைத்து 173 செக் ஆண்களைக் கைது செய்து மொத்தமாக தீரத்துக் கட்டினர்.

நடைமுறையில் இஸ்ரேல் படைகள் கடந்த ஆண்டு முதல் காசாவில் ஒவ்வொரு நாளும் மூன்று லிடிஸ் சம்பவங்களை நடத்தி வருகின்றன.

இங்கு அதை விட,மோசமாக குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என எவரும் விட்டு வைக்கப்படவில்லை. காசாவில் நடந்த பாரிய படுகொலைகள் பற்றிய கொடூரமான தன்மைகளையும் அளவையும் குறைத்து மதிப்பிடுவதில் அர்ப்பணிப்போடு செயற்படும் அமெரிக்க உத்தியோகபூர்வ வட்டாரங்களிலோ அல்லது ஊடகங்களிலோ அத்தகைய ஒப்பீடுகள் எதுவும் நடப்பதில்லை.

காசாவில் பலஸ்தீனர்களின் எழுச்சி அமைதியான இஸ்ரேலிய குடிமக்களை ஆத்திரமூட்டி படுகொலை செய்வதாகவே முன்வைக்கப்படுகிறது. இதற்கு முந்தைய 70 ஆண்டுகால பாரிய அளவிலான பலவந்த வெளியேற்றம், சியோனிச பயங்கரவாதம், மற்றும் காசாவில் 2.3 மில்லியன் மக்களுடன் அந்த மக்களை தமது சொந்த வாழ்விடத்துக்குள்ளேயே கைதிகளாக்கி மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலயை உருவாக்கியமை ஆகியவற்றைப் பற்றி எந்த குறிப்பும் அவர்களிடம் இல்லை.

கமலா ஹாரிஸின் கூற்றுப்படி, “யூத வரலாற்றின் நீண்ட, வழமைக்கு மாறான வளைவுகள், படுகொலைகள் மற்றும் தப்பெண்ணம்,கொடூரக் கொலைகள் மற்றும் பிரிவினை ஆகியவற்றால் நிறைந்துள்ளது” என்கிறார்.

இது உண்மை என்றால், பிரி த்தானிய ஏகாதிபத்தியத்தின் ஒடுக்குமுறை, சியோனிச காலனித்துவம் மற்றும் நாடற்ற அகதிகளாக பல தசாப்தங்களாக வாழும் பலஸ்தீன மக்களின் நிலை உள்ளிட்ட பலஸ்தீன மக்களின் “நீண்ட வரலாற்றின் விளைவு” பற்றி அவரால் என்ன கூற முடியும்?

சியோனிச சார்பு பத்தி எழுத்தாளரும் வொஷிங்டன் போஸ்ட்டின் துணை ஆசிரியருமான ரூத் மார்கஸ், “இஸ்ரேல் இப்போது சர்வதேச ரீதியாக ஒதுக்கப்பட்ட ஒரு பிரிவு என்பதை விட குறைந்த அனுதாபம் கொண்ட ஒரு பிரிவாக அப்பட்டமாக தன்னை மாற்றிக்கொண்டுள்ளது.

உண்மையில் உலக மக்களின் கருத்து பலஸ்தீன மக்கள் பக்கம் பெருமளவில் திரும்பி உள்ளது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள யூத மக்களில், குறிப்பாக மாணவர்களில் கணிசமான பகுதியினர் இதில் அடங்குவர்.

அவர்கள் சியோனிஸ்டுகள் மற்றும் இஸ்ரேலிய பாசிசவாதிகளால் குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக பெரும் அளவில் ஹோலோகாஸ்டின் முட்டாள்தனமான அரசியல் கருத்துக்கள் பயன்படுத்தப் படுவதை வெறுக்கின்றார்கள்.

மத்திய கிழக்கில் ஏகாதிபத்தியத்தின் ஈட்டி முனையாகவே சியோனிச ஆட்சி அமைந்துள்ளது.

அமெரிக்காவும் ஒரு சர்வதேச ரீதியாக ஒதுக்கப்பட்ட தேசமாகவே கருதப்படுகின்றது. காரணம் பலஸ்தீனத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் சகித்துக் கொள்ள முடியாத பரிமாணங்களிலான படுகொலைகளுக்கு அதுவும் ஒரு பிரதான காரணம் என்று உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினரால் கருதப்படுகின்றது.

அமெரிக்க அரசாங்கம், நேட்டோவில் உள்ள அதன் நட்பு நாடுகளுடன் இணைந்து, பாரிய அளவிலான படு கொலைகளுடன் வெளிப்படையாக தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

இவர்கள் மிகவும் வெளிப்படையாக பாரிய அளவில் படுகொலைகளைப் புரிபவர்களை காப்பாற்றிக் கொண்டி ருக்கின்றனர்.

ஒக்டோபர் 7 ஆம் திகதி வெளியிடப்பட்ட பிரவுன் பல்கலைக்கழகத்தின் யுத்தங்களுக்கான செலவுத் திட்டத்தின் ஆய்வின்படி, கடந்த ஆண்டு இஸ்ரேலின் போர்கள் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா குறைந்தது 22.8 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது.

பதுங்கு குழிளை தகர்க்கும் குண்டுகள், துல்லியமான வழிகாட்டப்பட்ட ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள், பிற ஆயுதங்கள் மற்றும் எரிபொருள் கொள்வனவுக்காக பணம் உட்பட கிட்டத்தட்ட 18 பில்லியன் டொலர்கள் இராணுவ உதவி வடிவில் செலவிடப்பட்டுள்ளது.

இது 1959 முதல் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட மொத்த அமெரிக்க இராணுவ உதவியை 251.2 பில்லியன் டொலர்களாக காட்டுகின்றது

இது தவிர மத்தியதரைக் கடல், செங்கடல் மற்றும் அரேபிய கடல் பகுதிகளில் நிலை நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படைப் படை அணிகளின் அளவைப் பொறுத்து, கடந்த ஆண்டில் அமெரிக்க துருப்புக்கள் 34,000 முதல் 51,000 வரையில் இருந்த பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்காக மேலும் 4.86 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்கா முழுவதையும் அடிமைப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பல தசாப்த கால முயற்சியின் ஒரு பகுதியாகவே இப்போது மத்திய கிழக்கில் தலைவிரித்தாடும் போர்அமைந்துள்ளது.

2001இல் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு, 2003இல் ஈராக் படையெடுப்பு மற்றும் லிபியாவிலும் சிரியாவிலும் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே இது அமைந்துள்ளது.

இதற்கிடையில், ஹோலோகாஸ்ட் காரணமாக பெரும்பாலான யூதர்களின் ஆதரவை மட்டுமே சியோனிச திட்டத்தால் பெற முடிந்துள்ளது என்கிறார் பத்தி எழுத்தாளர் ஜோசப் மசாத்ஸ். ஆனால் காசாவில் இனப்படுகொலையின் போது இஸ்ரேல் முன்வைக்கும் அதன் சொந்த தற்காப்பு வாதம் இனி எடுபடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

லெபனான், சிரியா, யெமன், ஈராக் மற்றும் ஈரான் ஆகிய அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய சியோனிச ஆக்கிரமிப்பின் விரிவாக்கத்தை ஹமாஸ் தெளிவாக எடுத்துரைத்துள்ளது. இது பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கும், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியானஅமைதி மற்றும் பாதுகாப்புக்கும் உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதையும் ஹமாஸ் மீண்டும் நினைவூட்டி உள்ளது

-லத்தீப் பாரூக்-

Share.
Leave A Reply