இலங்கையிலுள்ள இஸ்ரேல் நாட்டவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரண்டு நபர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாக நேற்று தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அமெரிக்க தூதரகம் விடுத்த அவசர எச்சரிக்கை

அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நேற்று காலை அவசர எச்சரிக்கையை வெளியிட்டிருந்தது.

அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமது ஊழியர்கள் மற்றும் இலங்கையில் வாழும் அமெரிக்க பிரஜைகளை அறுகம்பை பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அந்த அறிக்கையில் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டிருந்தது.

மீள் அறிவிப்பு விடுக்கப்படும் வரை அறுகம்பை பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘அறுகம்பை பகுதியில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் விடுத்த அறிவிப்பு’

அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை பகுதி மற்றும் இலங்கை தென் மற்றும் மேற்கு கரையோர பகுதிகளில் உள்ள தமது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள இஸ்ரேல் பிரஜைகளுக்கு இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு தலைமையகம் நேற்றைய தினம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

சுற்றுலா தளங்கள் மற்றும் கரையோரப் பகுதிகளை மையமாகக் கொண்டு கிடைக்கப் பெற்ற தகவல்களைக் கருத்தில் கொண்டே இஸ்ரேஸ் தேசிய பாதுகாப்பு தலைமையகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதேவேளையில், இலங்கைக்கு விஜயம் செய்யும்போது அவதானத்துடன் செயற்படுமாறு பிரிட்டன், தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

மேலும், தமது நாட்டு பிரஜைகளை அவதானத்துடன் இருக்குமாறு இலங்கைக்கான ரஷ்ய தூதரகம், ஆஸ்திரேலிய தூதரகம் ஆகியன அறிவித்துள்ளன.

இலங்கை போலீசாருக்கு முன்னதாகவே கிடைத்த புலனாய்வு தகவல்

வெளிநாட்டு பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அக்டோபர் மாதம் 7ஆம் தேதி புலனாய்வுத் தகவல் கிடைத்ததாக பதில் போலீஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

”கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே பாதுகாப்பு சபையில் நாம் மிகவும் ஆழமாகக் கலந்துரையாடியிருந்தோம். அதற்கான ஆலோசனைகள் எமக்குக் கிடைத்தன. அந்த ஆலோசனைகளின் பிரகாரம், வெளிநாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு, குறித்த பகுதிகளில் பாதுகாப்பு, மதத் தலங்களின் பாதுகாப்பு விசேட பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பலப்படுத்தப்பட்டது.

போசார், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஊடாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. புலனாய்வு அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். நேற்றைய தினம் முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.

மேலும், புலனாய்வுத் தகவல் சரியாகக் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்பு சபைக் கூட்டம் இணைய வழியாக நடத்தப்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

“முப்படைத் தளபதிகள், புலனாய்வுப் பிரதானிகள், பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதி செயலாளர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஆகியோர் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.

வெளிநாட்டுப் பிஜைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அனைத்து தூதரகங்களையும் நாம் தெளிவூட்டியுள்ளோம்” என பதில் போலீஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவிக்கிறார்.

இலங்கையிலுள்ள இஸ்ரேல் பிரஜைகள்

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு பிரஜைகளில் இஸ்ரேல் நாட்டு பிரஜைகளும் குறிப்பிடத்தக்க அளவு காணப்படுகின்றனர்.

இந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் வரை 14,87,808 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்த நிலையில், அவர்களில் 21,610 பேர் இஸ்ரேல் பிரஜைகள் என சுற்றுலாத்துறை அதிகார சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இறுதி இரண்டு மாதங்களில் இஸ்ரேல் பிரஜைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. அறுகம்பை பகுதியில் இஸ்ரேல் நாட்டு பிரஜைகள் தங்கியுள்ள கட்டடம் ஒன்று உள்ளதாகவும், அந்த கட்டடத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது என போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவிக்கிறார்.

இந்த நிலையில், குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

”அறுகம்பை பகுதியில் இஸ்ரேல் நாட்டு பிரஜைகளால் கட்டடமொன்று கட்டப்பட்டுள்ளது. ஒரு மண்டபத்தைப் போன்றதொரு கட்டடம். அறுகம்பை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகள் இஸ்ரேல் நாட்டு பிரஜைகளின் கவனத்தை ஈர்த்த பகுதிகளாகும். கடல் சார் விளையாட்டுகளில் அவர்கள் அதிக விருப்பம் கொண்டுள்ளனர்” என அவர் கூறுகின்றார்.

”இஸ்ரேல் நாட்டு பிரஜைகளுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல் கிடைத்திருந்தது. கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பாக பிரதி போலீஸ் மாஅதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம், வீதி சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, நபர்கள், வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன” எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

தாக்குதல் தொடர்பில் இந்தியா தகவல் வழங்கியதா?

அறுகம்பை பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் நாட்டு பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக இந்திய புலனாய்வுத் துறை இலங்கைக்கு தகவல் வழங்கியுள்ளதாக இலங்கையின் உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தகவலானது, அக்டோபர் 19ஆம் தேதிக்கும், 23ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படக்கூடும் என இந்திய புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கியுதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை இரண்டு பேர் நடத்தவுள்ளதுடன், அதில் ஒருவர் இராக்கில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் அந்தப் புலனாய்வுத் தகவலை மேற்கோள்காட்டி உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த விடயம் தொடர்பில் போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மாஅதிபர் நிஹால் தல்துவவிடம் வினவினோம்.

”அது தொடர்பிலான தகவல் என்னிடம் இல்லை. இந்தப் புலனாய்வுத் தகவல் வெளிநாடு ஒன்றிலிருந்து கிடைத்ததா அல்லது எமது புலனாய்வுப் பிரிவிற்குக் கிடைத்ததா என்பதைக் கூற முடியாது. எனினும், பதில் போலீஸ் மாஅதிபருக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, கிழக்கு மாகாண பிரதி போலீஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தப் பகுதியிலுள்ள ஹோட்டல்களில் இஸ்ரேல் பிரஜைகள் வேலை செய்து வருவதாக பொத்துவில் பிரதேச செயலக பிரிவின் நிர்வாக அதிகாரி எம்.எம்.எம்.சுபைர், பிபிசி சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த ஹோட்டல்களில் இந்த பிரஜைகளுக்கு இலவச உணவு வழங்கப்படுவதுடன், அவர்களின் ஊடாக சுற்றுலாப் பயணிகள் ஹோட்டல்களுக்கு வரவழைக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

அத்துடன், இஸ்ரேல் நாட்டு பிரஜைகளால் இந்தப் பகுதியிலுள்ள சில கட்டடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், குறித்த பகுதியில் மத ஸ்தலம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்தத் தகவலை பிபிசி சிங்கள சேவையால் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை.

நாட்டின் பல பகுதிகளில் கடும் பாதுகாப்பு

அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படக்கூடும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அறுகம்பை, பொத்துவில், காலி, மாத்தறை, எல்ல உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணிக்கும் இடங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாட தேவாலயங்களில் பெரிய குழுக்களில் மக்கள் திரண்டிருந்த நிலையில் கொழும்பு நகரைச் சுற்றிப் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. மூன்று தேவாலயங்கள், மூன்று சொகுசு விடுதிகள் உள்படப் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Share.
Leave A Reply