அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து தொழிலதிபர் பில்கேட்ஸ் ரூ. 420 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தல் தேதி நெருங்கியுள்ளதை அடுத்து அங்கு பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தொழிலதிபர் பில்கேட்ஸ் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்து, ரூ.420 கோடி நன்கொடை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நன்கொடை குறித்த தகவலை பில்கேட்ஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், செய்தியாளர் சந்திப்பில் பேசிய பில்கேட்ஸ், நன்கொடை குறித்து எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. தொழிலதிபர் பில்கேட்ஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

“இந்தத் தேர்தல் வித்தியாசமானது. நான் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும் வேட்பாளர்களை ஆதரிக்கிறேன். நான் நீண்ட காலமாக பல்வேறு அரசியல் தலைவர்களுடன் பயணித்துள்ளேன்” இவ்வாறு தொழிலதிபர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸின் முன்னாள் மனைவியான மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ், கமலா ஹாரிஸை ஆதரிக்கும் பிரசாரக் குழுக்களுக்கு அதிகளவில் நன்கொடைகள் வழங்கியுள்ளார். கமலா ஹாரிசுக்கு இதுவரை 50 க்கும் மேற்பட்ட பில்லியனர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல், தொழிலதிபர் எலான் மஸ்க் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply