100 பில்லியன் டாலர் சொத்து ஒருபோதும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வந்ததில்லை.  தொண்டு  நன்கொடை வழங்குவதில் ஆர்வம்

இந்திய தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 ஆவது வயதில் கடந்த 9 ஆம் திகதி காலமானார். இவர் டாடா குழும நிறுவனங்களின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.

இவருக்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. ரத்தன் டாடா எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார். வளர்ப்பு நாய்கள்தான் அவருக்கு உயிராகும். அவர் தனது வீட்டில் ஜேர்மன் வகையைச் சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார்.

மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான் அது போன்று சொத்து எழுதி வைப்பது வழக்கம். ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள சொத்தில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார்.

டிட்டோ வளர்ப்பு நாயை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தத்து எடுத்துக்கொண்டார். ரத்தன் டாடாவிடம் அதே பெயரில் வேறு ஒரு நாய் இருந்தது. அந்த நாய் இறந்ததை தொடர்ந்து புதிதாக தத்து எடுத்த நாய்க்கு அதே பெயர் சூட்டி வளர்த்து வந்தார். இந்த டிட்டோவை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க சொத்து எழுதி இருக்கிறார்.

இது தவிர ரத்தன் டாடாவிற்கு கடைசி வரை சமையல்காரராக இருந்த ராஜன் ஷா மற்றும் ரத்தன் டாடாவிற்கு சேவை செய்து வந்த சுப்பையா ஆகியோருக்கும் தனது உயிலில் சொத்து எழுதி வைத்திருக்கிறார். சுப்பையாவிற்கும், ரத்தன் டாடாவிற்கும் இடையே 30 ஆண்டு பந்தம் இருந்தது. ரத்தன் டாடா வெளிநாடுகளுக்கு சென்றால் சுப்பையாவிற்கு உடைகள் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம்.

இது தவிர ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனுவிற்கும் உயிலில் சொத்து எழுதி இருக்கிறார். சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனை ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார். அத்தோடு சாந்தனுவின் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்திலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார்.

ரத்தன் டாடா தனது வாழ்நாளில் பெற்ற விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் எதிர்கால தலைமுறைக்காக பாதுகாக்கப்படும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. 100 பில்லியன் டாலர் கொண்ட டாடா குரூப் நிறுவனங்களின் தலைவராக ரத்தன் டாடா இருந்த போதிலும் தனக்கென தனிப்பட்ட முறையில் சொத்துகளை பெரிய அளவில் வைத்துக்கொண்டதில்லை. எனவேதான் ரத்தன் டாடா பெயர் ஒருபோதும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வந்ததில்லை. எப்போதும் தொண்டு மற்றும் நன்கொடை வழங்குவதில் ஆர்வம் கொண்ட ரத்தன் டாடாவின் சொத்துகள் அனைத்தும் இனி சேவைக்காக பயன்படுத்தப்படும்.

Share.
Leave A Reply