ஐந்தரை வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படவில்லை என்ற விவகாரம் நாட்டில் மீண்டும் பேசுபொருளாகியுள்ள ஒரு காலகட்டத்தில், ‘கிழக்கு மாகாணத்தின் அறுகம்பையில் தாக்குதல் நடத்தப்படலாம்’ என்ற அபாய அறிவிப்பு இன்னுமொரு அச்ச உணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.

புதிய ஜனாதிபதி பொறுப்பேற்று, மக்கள் மத்தியில் பொதுவாக கொஞ்சம் நம்பிக்கையும் நிம்மதியும் துளிர்விடுவதற்கான களநிலைமைகள் உருவாகி வருகின்ற நிலையில், அறுகம்பையில் தாக்குதல் நடக்கலாம் என்ற எச்சரிக்கையும், மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத்திற்கு குண்டு வைக்கப் போவதாக மறுநாள் வந்த அச்சுறுத்தலும், இந்நாட்டிற்குள் யாருக்கோ குழப்பம் தேவைப்படுகின்றது என்பதையே குறிப்புணர்த்துகின்றது.

இலங்கை என்பது பல உலக நாடுகளின் அதிகாரப்போட்டிக்கான ஆடுகளமாக மாறி பல வருடங்களாகிவிட்டது.

ஆனால், உள்நாட்டில் கடந்த காலத்தில் சில ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் அடிப்படைவாத, பயங்கரவாத குழுக்களும் இதற்குத் துணை போயிருக்கின்றன என்பதைத்தான் ஜீரணிக்க முடியாதுள்ளது,

1915ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை இலங்கையில் ஏதோவொரு குழப்பத்தை யாரோ ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.

சுதந்திரத்திற்குப் பின்னர் இது இன, மத வாதங்களை அடிப்படையாக கொண்ட முரண்பாடாக மாறியது. ‘பிச்சைக்காரனின் புண்ணைப்போல’ இந்த நாட்டை வைத்திருப்பதற்காக, எப்போதும் ஏதாவது சதிமுயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன என்பதை நாம் அனுபவத்தில் கண்டுள்ளோம்.

ஆனால், துரதிஷ்டவசமாக மூவின மக்களும் எதிர்கொண்ட உரிமை மீறல்கள், நாட்டில் இடம்பெற்ற அநீதங்கள், கொலைகள், கடத்தல்களுக்கு எதிராக சரியான முறையில் நீதி நிலைநாட்டப்படவில்லை என்பதுதான் சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ,கத்தோலிக்க மக்களின் வரலாற்றுக் கவலையாகும்.

இவற்றுள், அப்பாவிக்; கத்தோலிக்க மக்களை இலக்குவைத்து 2019 இல் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப் பிந்த்pயதும், மிகப் பிரதானமானதும் எனலாம்.

இது தேர்தல் காலம் உதய கம்மன்பில வெளியிட்ட தகவல்களை மையப்படுத்தி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் மீண்டும் அரசியல், சமூக அரங்கில் பேசுபொருளாகியிருக்கின்றது.

மீண்டும் கோப்புகள், நபர்கள், குற்றச்சாட்டுக்கள், உண்மை பொய்கள் பற்றிய அறிக்கைகள் பறக்கின்றன.

இவ்வாறான, ஒரு காலகட்டத்திலேயே கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அறுகம்பை பகுதியில் உள்ள இஸ்ரேலியர்களுக்குச் சொந்தமான கட்டிடத்தை அல்லது இஸ்ரேலியர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடதப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளதாக முதலில் அமெரிக்க தூதரகமும், பின்னர் அரசாங்கமும் அறிவித்துள்ளன. இந்தியாவுக்கு இந்த தகவல் முதலே தெரியும் என்றும் கூறப்படுவது கவனிப்பிற்குரியது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இஸ்ரேல் எனப் பல நாடுகள் அறுகம்பையில் இருந்து தமது பிரஜைகளை வெளியேறுமாறு எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணைகளை நடத்தியுள்ளதுடன் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது பற்றிய தகவல் இலங்கைப் புலனாய்வு பிரிவுக்கு பல நாட்களுக்கு முன்னரே கிடைத்திருந்ததாகவும், (இதனை பகிரங்கப்படுத்தி மக்களை குழப்பாமல்) அரசாங்கம் சத்தமின்றி பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும். ஆனால் குறிப்பிட்ட ஒரு நாட்டின் தூதரகம் அதனை பகிரங்கப்படுத்தி விட்டதாகவும் கூறப்படுகின்றது.

எது எவ்வாறிருப்பினும். அறுகம்பையில் அல்லது கிழக்கு மாகாணத்தில் எதுவும் அசப்பாவிதம் இடம்பெறுவதற்கு முன்னர்,

இப்படியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தமைக்காகவும், உடனடியாக விசாரணைகளை நடத்தியமைக்காகவும், அதேபோன்று கைது செய்யப்பட்டவர்களின் இன, மத அடையாளத்தை அரசாபங்கம் வெளியிடாமல் பொறுப்புடன் நடந்து கொண்டமைக்காகவும் அரசாங்கத்தை பாராட்ட வேண்டும்.

இந்த விடயம் பாரதூரமானது. நீதிமன்ற நடவடிக்கை, சட்டம் ஒழுங்கு, இராஜதந்திர உறவுகள், பாதுகாப்பு சிக்கல் ஆகியவற்றுடன் பின்னிப் பிணைந்ததாகவும் உள்ளது.

எனவே இவ்விடயத்தை இக்கட்டுரை தேவையில்லாத கோணத்தில் ஆராயப் போவதில்லை. இது ஏற்படுத்தியுள்ள சமூக தாக்கம் பற்றியே பேச விளைகின்றது என்பதை கருத்திற் கொள்ளவும்.

அறுகம்பே விவகாரமானது சமூகத்தில் ஒருவித அச்சத்தையும், ஏதோ நடக்கப் போகின்றதோ என்ற மனக் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் முஸ்லிம்கள் செறிவாகவும், தமிழர்கள், சிங்கள மக்கள் கணிசமாகவும் வாழ்வது மட்டுமன்றி வெளிநாட்டவர் வந்து செல்கின்ற சுற்றுலா தலமாகவும் அறுகம்பே இருப்பதால் இது பற்றி எழுதுவது நமது பொறுப்பாகின்றது.

பொத்துவில் என்பது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதியாகும். அதிலிருந்து ஐந்து கிலோ மீற்றர் தொலைவில் உல்லை, சின்ன உல்லை மற்றும் அறுகம்பை பிரதேசங்கள் அமைந்துள்ளன.

இங்கு வெளிநாட்டவரின் ஹோட்டல்கள் காணப்படுவதுடன், அலைச் சறுக்கலுக்கு பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலாமாகவும் உள்ளது

இந்நிலையில், அறும்பை, சின்ன உல்லை ஹபாஸா பள்ளிவாசல் வீதியில், முஸ்லிம் ஒருவரிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக கூறப்படும் காணியில்,; இஸ்ரேலிய யூத வழிபாட்டு தலமொன்றை அமைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

‘சபாட் ஹவுஸ் யூத சனசமூக நிலையம்’ என இதற்கு பெயரிடப்பட்டிருந்ததாகவும், இது இஸ்ரேலியர்கள் அதிகம் வருகை தரும் இடமாக காணப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

இந்த இடத்தையும் அதனைச் சூழவுள்ள இஸ்ரேலியல்களையும் இலக்குவைத்தே தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையைப் பொறுத்தவரை இது உண்மையில் மிகவும் ஆபத்தான நிலைமையாகும். இலங்கை மக்கள ஏற்கனவே பல இன முரண்பாடுகளையும், பயங்கரவாத தாக்குதல்களையும் எதிர்கொண்டு இழப்புக்களைச் சந்தித்து, இன்னும் நீதிக்காக் ஏங்கி நிற்கின்ற காலத்தில், அதுபோன்ற தாக்குதல்களை மீண்டும் நடாத்த யாராவது திட்டமிடுவார்களாயின், அதற்கெதிராக அரசாங்கம் கடுமையான நடவடிககை எடுக்க வேண்டும். மக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இஸ்ரேல் யாருக்கு நண்பனாக இருந்தாலும். யாருக்கு எதிரியாக இருந்தாலும், அவர்கள் சண்டையிடுவதற்கான இடமாக அல்லது அவர்களை இலக்கு வைத்து தாக்குதல ;நடத்துவதற்கான களமாக இலங்கை மண்ணை பயன்படுத்த யாரும் இடமளிக்கக் கூடாது.

இந்த விடயத்தில் இப் பகுதியில் வாழும் முஸ்லிமகள் மிகவும் விழிப்புடனும் பொறுப்புடனும் நடந்து கொண்டு, பாதுகாப்பையும் தேச நலனையும் உறுதிப்படுத்த எந்த நேரத்தில் தயாராக இருக்க வேண்டும்.

இந்த விவகாரத்திற்கு இன்னுமொரு பக்கமும் உள்ளது. அதாவது இலங்கையில் ஏற்கனவே இந்தியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த நாடுகள் தமது நலனை உறுதிப்படுத்த போட்டி போடுகின்றன. இந்தப் பட்டியலில் இஸ்ரேலும் இணைகின்றதா என்ற சந்தேகத்தையே அறுகம்பை சம்பவம் ஏற்படுத்துகின்றது.

எந்த மதத்தைச் சேர்ந்தவருக்கும் அடிப்படை உரிமை இருக்கின்றது. ஆனால், முஸ்லிம்கள் வாழும் பிரதேசத்தில் வெளிநாட்டவர் மாற்று மத மையமொன்றை நடாத்தி வருவதும், அதனை மையப்படுத்தியதாக நமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலும் ஏற்படுவது இலங்கையராகிய நமக்கு தேவையற்ற தலையிடி என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.

அதேநேரம், அமெரிக்க ஆதவுடனான இஸ்ரேலின் உலக ஆக்கிரமிப்பின் வரலாற்றையும், அது தந்து கொண்டிருக்கின்ற அழிவுகளையும், யூதர்கள் ஆக்கிரமித்த நிலப்பரப்புக்களுக்கு என்ன நடந்தது என்பதையும் இவ்விடத்தில் அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இந்த அச்சுறுத்தலின் பின்னணி என்ன? இலங்கையில் பிரச்சினை ஏற்படுவது இனங்கள் – மதங்களுக்கு இடையில் முரண்பாட்டை தூண்டிவிட யாருக்காவது தேவையாக இருக்கின்றதா? என மக்களுக்கு பல கேள்விகள் எழுகின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியை சீர்குலைக்க, , சுற்றுலாத்துறையை நாசமாக்க, முஸ்லிம்களை இலக்குவைக்க அல்லது இஸ்ரேலின், அமெரிக்காவின் அரசியல் நலனுக்காக அல்ல வேறு சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்காக சதித்திட்டடங்கள் தீட்டப்படுகின்றதா என்பதை துரிதகதியில் விசாரிக்க வேண்டும்.

முன்னைய அரசாங்கங்களைப் போலன்றி, அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் இவ்விடயத்தை மிகக் கவனமாக கையாண்டு, உண்மையை வெளிக் கொணரும் என்ற மக்களின் நம்பிக்கை வீண்போகக் கூடாது.

-ஏ.எல். நிப்றாஸ்-

Share.
Leave A Reply