ஒரே உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்று கூறுவார்கள். தமிழரசுக் கட்சிக்கு இது ஒரு பிரச்சினையாக மாறியிருக்கிறது.
தமிழரசுக் கட்சியில் தலைமை பதவிக்கு போட்டியிட்ட சுமந்திரன், சிறிதரன் ஆகிய இரண்டு பேருமே இப்போது எதிரும் புதிருமாக மாறி இருக்கிறார்கள்.
தலைமைத் தெரிவின்போது தொடங்கிய பிரச்சினை, இப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் அரசியல் ரீதியாக வீழ்த்துகின்ற போராக மாறியிருக்கிறது.
பாராளுமன்றத் தேர்தலில் இந்த இரண்டு பேருமே, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள்.
சிறிதனை எப்படியாவது தேர்தலில் போட்டியிடாமல் தடுப்பதற்கு சுமந்திரன் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து பார்த்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது, கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டார் என அவர் மீது குற்றம்சாட்டி- அதனால் அவரை போட்டியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தார். ஆனால் சுமந்திரனின் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.
இப்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியில், சுமந்திரன், சிறிதரன் ஆகிய இரண்டு பேர் முக்கியமான வேட்பாளர்களாக இருக்கின்றனர்.
ஆனால் அவர்கள் இரண்டு பேருக்குமே பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி இருக்கிறது.
ஏனென்றால் தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கி தொடர்ச்சியான உடைகளை சந்தித்து வந்திருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்ட போதே, 2020இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை மாத்திரம் இலங்கை தமிழரசுக் கட்சி பெற்றது.
ஆனால் இந்த முறை தனித்தே போட்டியிடுவது அதன் ஒரு பலவீனம்.
யாழ்ப்பாண மாவட்டத்தில், மாம்பழம் சின்னத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி தவராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் அதிருப்தியாளர்கள், சுயேட்சை குழுவாக போட்டியிடுகிறார்கள்.
மற்றொரு பக்கம், தமிழரசுக் கட்சியில் போட்டியிட இடமளிக்கப்படாத சசிகலா ரவிராஜ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியிலும், இன்னொரு தரப்பு தமிழ் மக்கள் கூட்டணியுடனும் இணைந்து போட்டியிடுகின்ற நிலையும் உள்ளது.
இதனால் தமிழரசுக் கட்சியின் வாக்குகள் இப்பொழுது துண்டு துண்டாக உடைந்திருக்கிறது. தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களின் மத்தியிலேயே இந்த பிளவு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அடிப்படையில், தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்து வந்தவர்களில் கணிசமானவர்கள் வேறு கட்சிகளுக்கு ஆதரவளிக்க தொடங்கியிருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக ஐந்து கட்சிகள் இணைந்து போட்டியிடுவதால் அவர்களின் ஆதரவாளர்கள், தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
அது தவிர கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து வந்த பெருமளவிலானோர், பல்வேறு சுயேட்சை குழுக்களாக போட்டியுடன் இறங்கி இருக்கிறார்கள்.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள அந்த சுயேட்சைக் குழுக்கள் , 500, 1000 வாக்குகளை பிரித்தாலும், தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியை அது கடுமையாகப் பாதிக்கும்.
இவ்வாறான சூழலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு எத்தனை ஆசனங்கள் கிடைக்கும் என்பதை திட்டவட்டமாக கூற முடியாத நிலையே காணப்படுகிறது.
இரண்டு ஆசனங்கள் கிடைத்தால், சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் பாராளுமன்றம் செல்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
சுமந்திரன் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில்,மாத்திரமே, வேட்பாளர் தெரிவுகளை மேற்கொண்டிருந்தார். இது அப்பட்டமான உண்மை.
அதேபோல, சிறிதரன் இந்த வியூகத்தைப் புரிந்து கொண்டு, தனது வெற்றியை உறுதிப்படுத்துவதில் மாத்திரம் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
இரண்டு பேருமே ஒருவரை ஒருவர் வீழ்த்துவதில் கவனம் செலுத்துகின்ற நிலையில், யாருமே கட்சிக்கு மூன்றாவது ஆசனம் கிடைக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை.
தமிழரசுக் கட்சிக்கு ஒரு ஆசனம் மட்டும், கிடைக்கின்ற நிலை ஏற்பட்டால், அது யாருக்கு கிடைக்கும்?
ஒப்பிட்டளவில் சிறிதரனுக்கு, கிளிநொச்சியிலும் தீவகத்திலும் தென்மராட்சியிலும் அதிகளவு வாக்குகளை கிடைக்கக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன.
அதேவேளை, சுமந்திரனுக்கு வாக்காளர்கள் மத்தியில் அதிகளவு எதிர்ப்புகள் காணப்படுகின்றன.
சுமந்திரன் மீதான வெறுப்பினால், தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்கும் வாக்காளர்கள், வேறு கட்சிகள், வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தால், ஒரு குறிப்பிட்டளவு கட்சி வாக்குகள் மாத்திரமே, தமிழரசுக் கட்சிக்கு கிடைக்கும்.
அவ்வாறான வாக்குகள், சுமந்திரனுக்கு சாதகமானதாக இருக்கலாம். ஏனென்றால் சுமந்திரனுக்கு எதிரான வாக்குகள், ஒட்டுமொத்தமாக தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேறினால், அதன் பாதிப்பு சிறிதரனுக்கு அதிகமாக இருக்கும்.
அதேவேளை, ஒரு ஆசனம் கிடைக்கின்ற நிலை ஏற்பட்டால், தனது வெற்றியை உறுதி செய்வதற்கு சிறிதரன், தன்னை மட்டும் பிரபலப்படுத்தும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார்.
தனது இலக்கத்திற்கு மாத்திரம் வாக்களிக்குமாறு, அவர் ஆதரவாளர்களிடம் கேட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
இதற்கு எதிராக தமிழரசுக் கட்சியினாலோ அல்லது வேறு எவரினாலோ எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால், ஒரு வேட்பாளர் தான் விரும்பினால் மாத்திரம் இன்னொரு வேட்பாளருக்காக வாக்கு சேகரிக்க முடியும்.
சிறிதரனின் பிரசாரம் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்களை தோற்கடியுங்கள், என்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
அவரது இந்த பிரசாரத்தினால் சுமந்திரன் கடுமையான பின்னடைவை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
அதேவேளை, கட்சிக்கு ஒரு ஆசனம் கிடைக்கின்ற நிலை ஏற்பட்டால், அதனை சிறிதரன் கைப்பற்றினாலும் கூட, அவரால் பாராளுமன்ற உறுப்பினராக நீடிக்க முடியாத நிலை ஏற்படலாம், என்ற ஒரு புதிய பிரச்சினையும் கிளப்பப்படுகிறது.
தமிழரசுக் கட்சியின் அதிருப்தியாளர்களான சிரேஷ்ட சட்டத்தரணி தவராசா மற்றும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோரே, இந்த விடயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சிறிதரன் வெற்றி பெற்றாலும் கூட, ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டதற்காக அவரை கட்சியிலிருந்து இடைநிறுத்துகின்ற அல்லது நீக்குகின்ற தீர்மானம் எடுக்கப்படலாம் என்றும்- அவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டால் சிறிதரனின் பதவி வறிதாகலாம் என்றும் இவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதற்கு சாத்தியம் இல்லாமல் இல்லை. தமிழ் அரசுக் கட்சி ஏற்கனவே கட்சியின் தீர்மானத்தை மீறி போட்டியிட்டதாக அரியனேத்திரன் மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு விளக்கம் கேட்டு,கடிதம் அனுப்பி இருக்கிறது.
இதன் மூலம் எந்த நேரத்திலும் அவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகள் பாயலாம்.
கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கும் மருத்துவர் சத்தியலிங்கம் சுமந்திரனுக்கு சார்பானவர் என்பதால், அவரைக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படலாம்.
அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் சிறிதரன் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கின்ற நிலை ஏற்படும் அல்லது தன் மீதான நடவடிக்கைக்கு எதிராக அவர் உயர்நீதிமன்றம் செல்ல வேண்டி இருக்கும்.
அப்படி ஒன்று நடந்தால், அடுத்த நிலையில் இருக்கக் கூடிய சுமந்திரன் பாராளுமன்றத்துக்குள் சென்று விடுவார்.
சட்டத்தரணி தவராசா,
இதனை தமிழரசுக் கட்சியின் அதிருப்தியாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். சுமந்திரன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாராளுமன்றம் செல்வதை தடுக்க வேண்டுமானால், தமிழரசுக் கட்சிக்கு யாரும் வாக்களிக்க கூடாது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இதன் மூலம் தமிழரசுக் கட்சியின் வாக்கு வங்கியை உடைப்பதற்கு அவர்கள் முற்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
சிறிதரன்
பாராளுமன்ற தேர்தலில் சிறிதரனின் வாக்குகளின் மூலம் சுமந்திரன் வெற்றி பெறுகின்ற நிலை ஏற்படக் கூடாது என்பது அதிருப்தியாளர்களின் கருத்தாக உள்ளது.
இந்த பிரசாரம் வாக்காளர்கள் மத்தியில் எந்தளவுக்கு கொண்டு செல்லப்படுகிறது, எந்த அளவுக்கு அவர்களிடம் கவனத்தை பெறுகிறது என்பது முக்கியமானது.
ஏனென்றால், இது சுமந்திரனுக்கு மாத்திரமன்றி சிறிதரனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். அதைவிட தமிழ் அரசுக் கட்சிக்கு அது சிக்கலை தோற்றுவிக்கும்.
ஒரே உரையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது, இருக்கவும் கூடாது. அவ்வாறு வைத்திருப்பதால், வாள்களை வைத்திருப்பவருக்குத் தான் ஆபத்து. இப்போது இரண்டு வாள்களை ஒரே உறையில் வைத்திருக்கும் தமிழரசுக் கட்சிக்கு பொதுத் தேர்தல் தீர்வு ஒன்றைத் தருமா?
– கபில்-