ஜனாதிபதி தேர்தலின் பின்னர் வட,கிழக்கில் ஏற்பட்டுள்ள அநுர அலைக்குள் தமிழ் மக்கள் சிக்கிக்கொள்ளாது அதனை அகற்றி, தமிழரசுக்கட்சிக்கே தமது பெரும்பான்மை ஆதரவினை வழங்க வேண்டும்.
அதன் மூலமாகவே பேரம்பேசும் பலத்துடன் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியும் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வீரகேசரிக்கு பாராளுமன்றத் தேர்தல் சம்பந்தமாக வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி: நீங்கள் மூன்றாவது தடவையாக நேரடியான தேர்தலில் போட்டியிடுகின்றீர்கள், போருக்குப் பின்னரான 15 ஆண்டுகளில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுகின்றது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ராஜபக்ஷக்களும் அரங்கில் இல்லை. இப்புதிய சூழலைக்கொண்டுள்ள களம் எப்படியிருக்கின்றது?
பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக நாங்கள் செயற்பட்டாலும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தான் தேர்தலுக்கு முகங்கொடுத்து வந்திருந்தோம். ஆகவே தமிழ் மக்கள் வீட்டுச்சின்னத்துக்கே ஆணை வழங்கி வந்திருக்கின்றார்கள். அதனை அவர்கள் தொடருவார்கள். அந்த நம்பிக்கை எமக்குள்ளது.
ராஜபக்ஷக்களைப் பொறுத்தவரையில், அரசியல் அரங்கிலிருந்து முற்றாக வெளியேற்றிவிட்டோம் என்றுகூற முடியாது.
திரும்பத்திரும்ப தலையெடுக்கக் கூடியவர்கள். மூன்று வருட இடைவெளியின் பின்னர் 2018 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ராஜபக்ஷக்கள் தலையெடுத்ததன் நீட்சியாகவோ 2019இல் கோட்டாபய ஆட்சிக்கு வந்திருந்தார்.
அந்தவைகயில், சிங்கள தேசிவாத, கடும்போக்க பௌத்தவாத தரப்பினர் முற்றாக நீங்கியுள்ளனர் என்று கருதமுடியாது. ஆனால் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் ரணில்விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணியினர் தேசிய வாதத்தினை கொண்டிருக்கவில்லை.
ஆகவே பாராளுமன்றத் தேர்தலின் பின்னரும் அந்நிலைமை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பும், அது இனப்பிரச்சினைக்க சுமூகமான தீர்வொன்றைக் காணக்கூடிய சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையும் எமக்குள்ளது.
கேள்வி: கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா பதவி விலகியுள்ளார். தெரிவு செய்யப்பட்ட தலைவர் சிறிதரனுக்கு நீதிமன்றம் தடைக்கட்டளை வழங்கியுள்ளது. கட்சியின் முக்கியஸ்தர்கள் வெளியேறியுள்ளனர். இந்த நிலைமைகள் தமிழரசுக்கட்சிக்கு தேர்தலில் எவ்வளவு தூரம் சவால் மிக்க சூழலை ஏற்படுத்துகிறது?
பதில்: ஒவ்வொரு தேர்தல்களிலும் ஆசனஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பதால் வெவ்வேறு காரணங்களைக் கூறிக்கொண்டு கட்சியில் இருந்து வெளியேறுவது வழக்கமான விடயமாகும்.
தந்தை செல்வாவின் காலத்தில் அவரின் மூளை என்று வர்ணிக்கப்பட்ட வி.எஸ்.நாகநாதன் அவ்வாறு வெளியேறி ஊர்காவல்துறை தொகுதியில் சுயாட்சிக்கழகம் என்ற பெயரில் போட்டியிட்டார்.
ஆனால் இம்முறை அவ்வாறு கட்சியின் மூளை என்று கூறக்கூடிய அளவுக்கு வெளியேறியவர்களில் யாருமில்லை. அது தேர்தலில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
அடுத்து கட்சியின் தலைவர் மாவை.சேனதிராஜா இராஜினாமாச் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்னமும் பொதுச்செயலாளருக்கு உத்தியோக பூர்வமாக கடிதம் அனுப்பி வைக்கப்படவில்;லை. அதேநேரம் எமது தேர்தல் விஞ்ஞாபனத் தயாரிப்பில் சேனாதிராஜா பங்கேற்றுள்ளார்.
அவர் அண்மைய காலத்தில் சுகவீனமடைந்துள்ளதால் அந்தப்பணிகளை முடிக்குமாறு என்னை நேரில் அழைத்துக் கூறியுள்ளார்.
அதேபோன்று கட்சியின் புதிய நிருவாகத்தெரிவுக்கு நீதிமன்றம் தடைக்கட்டளை வழங்கியுள்ளது.
மனுதாரரின் கோரிக்கையை ஏற்று அதற்குரிய நிவாரணத்தை வழங்குவதற்கு நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். விரைவில் அந்த விடயம் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளது. ஆகவே, மேற்படி விடயங்கள் தேர்தலில் எவ்விதமான தாக்கத்தினையும் ஏற்படுத்தாது.
கேள்வி: வேட்பாளர் நியமனத்தின் போது கட்சியின் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்பட்டவர்கள், எம்.பியாக இருந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்கள் போன்றவர்களுக்கு ஆசன ஒதுக்கீடு செய்யப்படாது என்று தீர்மானம் எடுத்ததாக அறிவித்திருந்தபோதும் மாவட்டத்துக்கு மாவட்டம் மேற்படி நிபந்தனைகளில் மாறுபட்ட நிலைமைகள் காணப்படுகின்றவே?
பதில்: ஒரு விதியைக் கடைப்பிடிக்கின்றபோது, விதிவிலக்குகளும் இருப்பது வழக்கமானது. அவ்வாறு காணப்படுகின்ற போது தான் விதியை நடைமுறைப்படுத்த முடியும்.
கேள்வி: நீங்கள் ஒருதரப்பை மையப்படுத்தி விதிவிலக்கு என்று கூறினாலும், பிறிதொரு தரப்பு அதனை பாரபட்சமாகவே கருதுகின்றதல்லவா?
பதில்: கட்சியின் தீர்மானத்தினை எதிர்த்து செயற்பட்ட சிறிதரனுக்கு ஆசன ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று நான் நேரடியாகவே தெரிவித்தேன். அவ்வாறு வழங்கினால் எனக்கு அதில் உடன்படு இல்லை என்பதையும் கூறுவேன் என்றும் குறிப்பிட்டேன்.
எனினும் நியமனக்குழுவின் சிரேஷ் உறுப்பிரான சி.வி.கே.சிவஞானம் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அவ்விதமான தீர்மானம் எடுக்கக் கூடாது என்றும் அதனால் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படும் என்றும் கூறினார்.
அத்துடன் இருவரும் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதனை நியமனக் குழுவில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். கட்சியின் தீர்மானத்துக்கு நான் கட்டுப்பட்டேன்.
அதுபோன்று தான் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து தோல்வி கண்ட எழுவருக்கு ஆசன ஒதுக்கீடு வழங்குவதில்லை என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால் சிறிநேசனக்கு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனையும் பெரும்பான்மையாவர்கள் ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு தான் தீர்மானங்கள் சில தருணங்களில் விதிகளுக்கு அப்பாற்பட்டதாக காணப்படுகின்றன.
கேள்வி: கட்சியின் தீர்மானங்களில் நீங்கள் செல்வாக்குச் செலுத்துவதாக குற்றம் சாட்டும் தரப்பினர் உங்களின் முற்கூட்டிய திட்டமிடல்களுடன் தான் காய்நகர்த்தப்படுவதாக குற்றம் சாட்டுகின்றார்கள். நீங்கள் நீண்டகால திட்டமிடல்களுடன் வியூங்களை வகுக்கின்றீர்களா?
பதில்: அப்படியல்ல. நான் தீர்மானங்கள் எடுக்கின்றபோது நியாயமான விடயங்களை குறிப்பிடுகின்றேன். அதற்கே ஆதரவு அளிக்கப்படுகின்றது. தவறான விடயங்களை கூறியிருந்தால் அவை தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டிருக்காது. ஆகவே என்னால் முன்மொழியப்படுகின்ற விடயங்கள் சரியென்று தானே அர்த்தப்படுத்தப்படுகின்றது.
கேள்வி: யாழ்.தேர்தல் மாவட்டத்தின் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் சிறிதரன், இளங்கோவன் தவிர்ந்த ஏனைய அறுவரும் உங்களுடைய தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக களமிறங்கப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?
பதில்: என்னுடைய தேர்தல் வெற்றியை யாரும் உறுதி செய்ய வேண்டியதில்லை. கடந்த தேர்தலில் எனது சக வேட்பாளர்களே எனக்கு எதிராக பிரசாரம் செய்தார்கள். அவர்கள் அனைவரும் தோல்வி கண்டார்கள்.
நான் வெற்றி பெற்றிருந்தேன். சிறிதரன் எனக்கு எதிராக பிரசாரம் செய்யவில்லை. அவரும் வெற்றி பெற்றிருந்தார். எனவே எனக்கு விருப்பு வாக்கு சேகரிக்க ஏனைய வேட்பாளர்கள் அவசியமில்லை.
கேள்வி: ஆனால், பிரசாரக் கூட்டங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கூட உங்களை மையப்படுத்தியே ஐந்து வேட்பார்களின் பிரசாரங்கள் காணப்படுகின்றதே?
பதில்: கட்சியில் நானும் சிறிதரனுமே சிரேஷ்ட உறுப்பினர்களாக இருக்கின்றோம். அதனால் வேட்பாளர்கள் சிலர் என்னை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்றார்கள். சிலர் சிறிதரனை முன்னிலைப்படுத்துகின்றர்கள்.
அத்துடன் அவர்கள் அனைவரும் பாராளுமன்ற தேர்தல் அரசியலுக்கு புதியவர்கள். முதற்தடவையாக போட்டியிடுகின்றார்கள். அதுமட்டுமன்றி தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களை அவதானிக்கும் எமது மக்களுக்கு தமிழரசுக்கட்சியின் மீது புதிதாக நம்பிக்கையொன்று ஏற்பட்டுள்ளது.
கேள்வி: தற்போது சுமந்திரனுக்கும், சிறிதரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் எப்படியிருக்கிறது?
பதில்: முழுமையாக நிறைவுக்கு வந்துவிட்டது என்று நான் கூறப்போவதில்லை. இருவரினதும் ஆதரவாளர்கள் வாதப்பிரதிவாதங்களைச் செய்கின்றார்கள். தேர்தல்காலத்தில் அந்த விடயங்களை தவிர்க்குமாறு நாம் அவர்களிடத்தில் கேட்டுக்கொண்டுள்ளோம். அத்துடன் நாமும் ஒருவரையொருவர் தாக்கி பிரசாரங்களில் ஈடுபடுவதில்லை.
ஆனால் ஜனநாயகச் சூழலில் மாறுபட்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட வேண்டும். போட்டிகள் இருக்க வேண்டும். அது தான் ஆரோக்கியமானதொரு நிலைமையாக இருக்கும். இதனை எமது சமூகத்தில் ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை.
கேள்வி: ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சிவ்வாவின் அதிகாரப்பகிர்வு சம்பந்தமான கருத்து, அரசாங்கத்தின் பொறுப்புக் கூறல் சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானம் ஆகியவற்றுக்கு அப்பால் தேசிய இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக அந்தத் தரப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளீர்களா?
பதில்: ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் வட,கிழக்கில் அநுர ஆதரவு அலையொன்று காணப்படுகின்றது. அந்த நிலைமை மிகவும் ஆபத்தானது என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் அதிகாரத்தினை மக்கள் எமக்கே வழங்க வேண்டும்.
அநுர அலையை அடியோடி அகற்ற வேண்டும். தமிழரசுக்கட்சியை ஒரு அணியாக, பேரம்பேசும் சக்தியாக அனுப்புவதன் ஊடாகவே தமது இலக்குகளை அடைய முடியும். அதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
-நேர்காணல்: ஆர்.ராம்-