இவ்வருடம் (2024) ஒக்ரோபர் மாதம்1ஆம் திகதி முதல் சீன மக்கள் தமது ‘மக்கள் சீன குடியரசு’  என்ற புதிய சீனத்தின் 75ஆவது பிறந்த தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இன்றைய சோசலிச சீனாவின் தோற்றம் 1949 ஒக்ரோபர் 1ஆம் திகதி நிகழ்ந்தது. அதன்
தோற்றத்தை சீன மக்களின் மாபெரும் தலைவர் மாஓ சேதுங் அவர்கள் 1949
ஒக்ரோபர் 1ஆம் திகதி உலகத்தின் முன் பிரகடனம் செய்தார்.

சீனாவின் வரலாறு உலகிலுள்ள மற்றைய நாடுகளின் வரலாறை விட சற்று வித்தியாசமானது. இன்றைய உலக நாடுகளில் சீனாவுக்கு மட்டுமே 5,000 ஆண்டு வரலாறு எழுத்தில் உள்ளது.

மனித குலம் முதலில் வாழத் தொடங்கிய நாடுகளில் சீனமும் ஒன்று என்பதை தற்பொழுது அந்நாட்டில் மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன.

சீனாவுக்கு தொன்மையான ஒரு வரலாறும் நாகரீகமும் இருந்தபோதிலும், அது பல நூறு
ஆண்டுகளாக குறை வளர்ச்சி நிலையிலேயே இருந்து வந்துள்ளது.

ஒரு பக்கத்தில் இயற்கையின் பல்வகைப்பட்ட சீற்றங்கள் அந்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தன. இன்னொரு பக்கம் அந்நாட்டில் மிகவும் பிற்போக்கான நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு முறையைக் கட்டிக்காத்த கொடுங்கோல் மன்னர்களும் யுத்தப் பிரபுக்களும் அந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக  இருந்தனர்.

இந்த உள்நாட்டுக் காரணிகளை விட, காலத்துக்காலம் அந்நிய ஏகாதிபத்தியவாதிகள் சீனாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்து தமக்குள் கூறுபோட்டு வைத்திருந்தனர்.

இந்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களில் பல விதமான மேற்கத்தைய ஏகாதிபத்திய
நாடுகள் உள்ளடங்கி இருந்தன.

இறுதியாக சீனாவுக்கு அருகில் உள்ள யப்பான் சீனாவின் பெரும் பகுதியை
ஆக்கிரமித்துக் கொண்டது.

இந்த அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகள் சீனாவின் வளர்ச்சிக்கு குறுக்காக நின்ற
இன்னொரு சக்திகளாகும்.

சீனா பரப்பளவில் ஏறத்தாழ மேற்கு ஐரோப்பா அளவு விஸ்தீரணம் கொண்டது. அது முழுக்க முழுக்க பின்தங்கிய விவசாய நாடாகவே இருந்தது.

பெரும்பாலான விவசாயிகள் நிலமற்ற அடிமை விவசாய கூலிகளாகவே இருந்தனர்.
இந்த அடிமை முறைக்கு எதிராக காலத்துக்காலம் பல கிளர்ச்சிகள்
நடைபெற்ற போதிலும், அவை எல்லாமே மன்னர்களாலும் நிலப்பிரபுக்களாலும்
கொடூரமாக ஒடுக்கப்பட்டன.

இருந்தாலும்1911 ஆம் ஆண்டு கோமின்டாங் கட்சியின் தலைவராக இருந்த டாக்டர்
சன் யாட் சன் அவர்களால் மிகப்பெரும் புரட்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டு
வரலாற்றில் முதல் தடவையாக வெற்றி பெற்றது.

இது சீன வரலாற்றில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாக கணிக்கப்படுகிறது.
சன் யாட் சன் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைப்பு, விவசாயிகள் தொழிலாளர்களுக்கு ஆதரவு, சோவியத் யூனியனுடன் நட்புறவு என்ற மூன்று முற்போக்கு கொள்கைகளைப்
பின்பற்றினார்.

சுன் இ சியன் -Sun Yat-sen

1921 யூலை 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு பக்கத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்க மக்களுக்காகப் போராடிக்கொண்டு, மறுபக்கத்தில் சன் யாட் சன் முன்னெடுத்த தேசியக் கொள்கைகளையும் ஆதரித்து வந்தது.

Chiang Kai-shek

இத்தகைய ஒரு சூழ்நிலையில் சன் யாட் சன் மரணிக்க கோமின்டாங் கட்சியின் தலைமைக்கு சியாங் கே ஸேக் என்ற தீவிர வலதுசாரி வந்தார்.

அவர் மக்களுக்கு எதிராகவும், ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவாகவும்
செயல்பட்டதுடன், கம்யூனிஸ்ட்டுகளுடன் முரண்பட்டு அவர்களுக்கு எதிராக உள்நாட்டு
யுத்தத்தையும் ஆரம்பித்தார்.

இந்த உள்நாட்டு மோதல் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு 1935இல்
யப்பானிய ஏகாதிபத்தியம் சீனாவின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது.

இந்த நிலைமையில், தமக்கிடையிலான மோதலை நிறுத்திக் கொண்டு, தேசத்தைப்
பாதுகாப்பதற்காக யப்பானை ஐக்கியப்பட்டு எதிர்த்துப் போராட முன்வருமாறு சியாங்கே ஸேக்கிடம் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்திய போதிலும், அவர் அதனை
ஏற்க மறுத்ததால், வேறு வழியின்றி சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒரு புறம் யப்பானிய
ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடிக்கொண்டு, மறுபுறம் சியாங்கே
ஸேக்( Chiang Kai-shek) அரசையும் எதிர்த்துப் போராட வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தொடர் போராட்டம் காரணமாக 1945 இல் யப்பான் தோற்கடிக்கப்பட்டு சீனாவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருந்தபோதும், சியாங்கே ஸேக்கின் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிரான போர் நிறுத்தப்படவில்லை. அதன் காரணமாக 1945 முதல் 1949 வரை சியாங்கே
ஸேக் அரசுக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இடையில் நேரடிப் போர் நடைபெற்றது.

இந்தப் போரில் அமெரிக்கா உட்பட சகல மேற்கத்தைய நாடுகளும் சியாங் அரசுக்கு சகல வழிகளிலும் உதவி புரிந்தன.

இருந்தபோதும், கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி போராட்டத்தை உறுதியாக முன்னெடுத்ததால், இறுதியாக சியாங்கின் 90 இலட்சம் படைகளும்
அழிக்கப்பட்டு, அவன் தோற்கடிக்கப்பட்டு, நாட்டை விட்டுத் தப்பியோடி தாய்வான் தீவில் அடைக்கலம் புகுந்து அங்கு அமெரிக்காவின் ஆதரவுடன் பொம்மை
அரசொன்றை அமைத்துக் கொண்டான்.

(சியாங் இறந்த பின்னரும் கூட அமெரிக்கா இன்றுவரை தாய்வான் தீவில் உள்ள பிற்போக்கு பொம்மை அரசை ஆதரித்து வருவதுடன், அந்த அரசை சீனாவுக்கு எதிராகத் தூண்டியும் வருகின்றது)

1949 ஒக்ரோபர் 1ஆம் திகதி சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உதயமான புதிய சீனா, மாஓ தலைமையில் சோசலிசப் புரட்சியையும் நிர்மாணத்தையும் முன்னெடுத்து, ஒரு பலம் வாய்ந்த சோசலிச நாடாக உருவாகியது.

அடிப்படை சோசலிச கட்டுமானத்தை உருவாக்கிக் கொண்ட சீனா, அதன் பின்னர் பலவிதமான அரசியல் பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு, இன்று ஒரு நவீன
சோசலிச நாடாக வளர்ச்சி பெற்றுள்ளது.

இன்றைய சீனா, உலகின் முதல்தரமான பொருளாதார – இராணுவ சக்தியாக உள்ள அமெரிக்காவுக்கு அடுத்த இரண்டாவது சக்தியாக உலக அரங்கில்
வளர்ச்சி பெற்றுள்ளது.

விரைவில் அது அமெரிக்காவை கடந்து முன்னேறிவிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றைய உலகின் முழுப் பொருளாதாரத்திலும் சீனாவின் பங்கு 30 சத வீதம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சீனா தனது 140 கோடி மக்கள் தொகை முழுவதையும் வறுமைக் கோட்டுக்கு வெளியே வெற்றிகரமாக கொண்டு வந்துள்ளது.

இன்றைய உலகில், உலக சமாதானத்தினதும், வளர்ச்சியினதும் அச்சாணியாக சீனா திகழ்கின்றது. அதன் காரணமாக, அமெரிக்கா தலைமையிலான உலக ஏகாதிபத்திய அமைப்புக்கு எதிரான உலகின் அடக்கியொடுக்கப்பட்ட நாடுகளினதும் மக்களினதும் பரந்துபட்ட ஐக்கிய முன்னணிக்கு சீனாவே இன்று தலைமைச் சக்தியாகத் திகழ்கின்றது.

ஒரு காலத்தில் ‘ஆசியாவின் நோயாளி’ என மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளால் எள்ளி நகையாடப்பட்ட சீனா, இன்று ‘உலகின் அதிசயம்’ என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது.

19ஆம் 20ஆம் நூற்றாண்டுகள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நூற்றாண்டுகளாக இருந்தன. அதற்கு அடுத்து வந்த நூற்றாண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நூற்றாண்டாக இருந்தது.

இனி வரப்போகும் நூற்றாண்டு ஏகாதிபத்தியங்கள் இல்லாத ஒரு நூற்றாண்டாக, சீனாவினதும் ஏனைய உலக நாடுகளதும் நூற்றாண்டாக இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இவற்றையும் பார்யிடுங்கள் சீனப் புரட்சி 1949

Share.
Leave A Reply