அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பெற்ற குழந்தையை ஃபேஸ்புக் மூலம் விற்க முயற்சி செய்த 21 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜூனிபர் பிரைசன் என்ற அந்த பெண், “Birth Mothers Looking for Adoptive Parent(s)” என்ற ஃபேஸ்புக் பக்கத்தில், தனக்குப் பிறக்கப்போகும் ஆண் குழந்தையை நீதிமன்ற ஆவணங்களின் படி, தத்தெடுக்க விருப்பமுள்ளவர்களைத் தேடுவதாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து குடும்பத்தினருடனும் பேசியிருக்கிறார். அப்படிப் பேசுகையில் குழந்தைக்கு கைமாறாக தனக்குப் பணம் வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பிரைசன் இதுப்போல பலரிடம் சொல்லி வைத்திருக்கிறார். மருத்துவமனையில் சந்தித்த ஒரு தம்பதி குழந்தையைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் இவர் பணம் கேட்டதால் பின்வாங்கிவிட்டனர்.

அவர்களிடம் “உங்களுக்கு குழந்தை 200 டாலர் மதிப்புகூட பெறவில்லையா?” எனக் கோபப்பட்டுள்ளார்.

குழந்தையை விற்று கிடைக்கும் பணத்தில் ஒரு அப்பார்ட்மெண்ட் அல்லது கார் வாங்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து தனது உறவினருடன் விவாதித்துள்ளார்.

இறுதியாக வில்லியம்ஸன் என்ற பெண் பிரைசன் பிரசவத்துக்குச் செல்லும்போது உடன் இருந்து, சில நாட்கள் கவனித்துக் கொண்டுள்ளார். பிரைசன் உடல்நிலை மோசமாக இருந்ததால் உடன் இருந்து பார்த்துக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார் வில்லியம்சன்.

வில்லியம்சன் சட்ட ஆவணங்களில் முறைப்படி கையெழுத்துப் பெற்று குழந்தையை வாங்கியுள்ளார். அதைத் தொடர்ந்து, குழந்தைக்கு நல்ல வீடு கிடைத்ததாக பிரைசன் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து பலரும் வில்லியம்ஸன் பணம் கொடுத்து குழந்தையை வாங்கிவிட்டதாக எண்ணி அவரைத் தொடர்புகொண்டு திட்டியிருக்கின்றனர். இதுகுறித்து குழந்தை பாதுகாப்பு சேவை மையத்துக்கு தகவல் அளித்துள்ளார் வில்லியம்ஸன். இறுதியாக அவர்கள் பிரைசனைக் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் மற்றொரு மாகாணத்தில் 1000 டாலர் பணம் மற்றும் சில பீர் கேன்களுக்காக குழந்தையை விற்க முயன்ற தம்பதி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply