என்ன வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கேட்க உதவி இயக்குனர் ஒருவர் கேட்டதை நினைத்து எம்.ஜி.ஆர் தனது தலையில் அடித்துக்கொண்டார். அந்த உதவி இயக்குனர் இப்போது மிகப்பெரிய இயக்குனர்.
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென தனி பாதை வகுத்து வெற்றி கண்ட எம்.ஜி.ஆர் தனது இளம் வயதில் பல வறுமையான சூழ்நிலையை கண்டுள்ளார்.
அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தபோது தன்னால் முடிந்த அனைவருக்கும் உதவி செய்துள்ளார். குறிப்பாக தன்னை பார்க்க வரும் யாரும் சாப்பிடாமல் இருக்க கூடாது என்ற கொள்கையை கடைபிடித்தவர் தான் எம்.ஜி.ஆர்.
தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சிறுவயது முதல் ஒரு நாடக நடிகராக இருந்து 1936-ம் ஆண்டு வெளியான சதிலீலாவதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து பல தடைகளை சந்தித்த அவர், சிறுசிறு வேடங்களில் நடித்து 2-வது நாயகனாக உயர்ந்தார். இதில் ஒரு சில படங்களில் வில்லன் கேரக்டரிலும் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார்.
அதன்பிறகு ஹீரோவாக அறிமுகமான எம்.ஜி.ஆர் வெற்றிகளை குவித்தார்.
ஒரு கட்டத்தில் தனது திரை வாழ்க்கை இறங்கு முகத்தில் சென்றபோது தானே தயாரிப்பாளர் இயக்குனராக மாறி நாடோடி மன்னன் என்ற படத்தை எடுத்து பெரிய வெற்றியை கண்டு தனது திரை வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொண்டவர் தான் எம்.ஜி.ஆர். சினிமாவில் தனது படங்கள் தொடர்பான முடிவுகளை தானே எடுக்கும் வல்லமையுடன் வலம் வந்த எம்.ஜி.ஆர், சிறுவயதில் தந்தையை இழந்து தனது தாயுடன் வசித்து வந்துள்ளார்.
அதன்பிறகு பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு நாடகங்களில் நடிக்க தொடங்கிய எம்.ஜி.ஆர் பின்னாளில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார்.
ஒரு கட்டத்தில் தி.மு.க.வில் இருந்து விலகி அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர், தொடர்ந்து 3 முறை தமிழ்நாட்டில் முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார்.
தான் திரைத்துறையில் இருக்கும்போதும், அரசியலில் முதல்வர் ஆனபோதும், உதவி செய்வதையும் மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதையும் எம்.ஜி.ஆர் தொடர்ந்து வந்தார்.
முதல்வராக இருக்கும்போது, ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு படம் பார்க்க சென்றுள்ளார். அப்போது எம்.ஜி.ஆர் அங்கே வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் மக்கள் கூட்டம் கூடியுள்ளது.
படம் முடிந்து வெளியே வந்த எம்.ஜி.ஆர், மக்கள் அனைவரிடமும் நலம் விசாரித்து பேசிக்கொண்டே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த ஏ.வி.எம். நிறுவனத்தின் உதவி இயக்குனர் ஒருவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத அந்த உதவி இயக்குனர் என்ன அய்யா என்று கேட்க, என்ன வேண்டும் என்று எம்.ஜி.ஆர் மீண்டும் கேட்டுள்ளார்.
அப்போது அந்த உதவி இயக்குனர், உங்கள் வீட்டில் இருந்து வரும் சிக்கன் நெய் ரோஸ்ட் வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை கேட்ட எம்.ஜி.ஆர் தலையில் அடித்துக்கொண்டு, அவன் அவன் என்னென்னமோ கேட்கிறான்.
இவன் நெய் ரோஸ்ட் கேட்கிறான் என்று சிரித்துக்கொண்டே சென்றுள்ளார். மறுநாள், காலை 11 மணிக்கு எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்து ஒரு ஹாட் கேரியரில், சிக்கன் ரோஸ்ட் அந்த உதவி இயக்குனருக்கு வந்துள்ளது. இதை அந்த உதவி இயக்குனரே ஒரு மேடையில் கூறியுள்ளார்.
அந்த உதவி இயக்குனர் வேறு யாரும் இல்லை ரஜினிகாந்த் கமல்ஹாசன் ஆகியோரை வைத்து அதிக படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தான்.