அமெரிக்காவில், அரசின் சிறப்புத் திறன் துறையை எலான் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி வழிநடத்துவார்கள் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், அமைச்சரவை மற்றும் அரசு துறைகளை கட்டமைத்து வருகிறார். அந்த வகையில், தேர்தல் பரப்புரையின் போது அறிவித்த, அரசாங்க சிறப்புத் திறன் துறையை உருவாக்கியுள்ள டிரம்ப், அதன் தலைவர்களாக எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமியை நியமித்துள்ளார். அரசாங்கத் துறைகளை சீரமைப்பது, தேவையற்ற செலவுகளை குறைப்பது, அதீத கட்டுப்பாடுகளை தளர்த்துவது ஆகியவற்றை கவனித்து, அரசு நிர்வாகத்திற்கு இவர்கள் உதவுவார்கள் என்று டிரம்ப் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு தேவையற்ற செலவு ஏற்படுத்தும் பலருக்கு இம்முடிவு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை வெளியில் இருந்து வழிநடத்த உள்ள இவர்கள், வெள்ளை மாளிகையுடன் இணைந்து நிதிநிலையை கவனித்துக் கொள்வதுடன், இதுவரை அரசு காணாத புத்தாக்க திட்டங்களை செயல்படுத்துவார்கள் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

2026 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதியை, இலக்காக நிர்ணயித்துள்ள டிரம்ப், அதற்குள் அமெரிக்கா பொருளாதாரத்தை தாராளமயமாக்கி, ஊழல் மற்றும் தேவையற்ற செலவினங்களை குறைக்க இவர்கள் உதவுவார்கள் என்று கூறியுள்ளார்.

Share.
Leave A Reply