தமிழ்த்தேசிய அரசியல் வடக்கில் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசு(2), காங்கிரஸ் (1), ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு(1), இணைந்து நான்கு ஆசனங்களை பெற்றுள்ளன.

கிழக்கில். இதற்கு மாறாக மக்கள் பெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். தமிழரசு மட்டும் தனித்து ஐந்து ஆசனங்கள். இந்த முடிவு தமிழ்த்தேசிய அரசியலின் காப்பாளர்கள் யார்? என்ற கேள்வியை எழுப்புகிறது.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பாருங்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பழம்பெரும் தமிழரசுக்கட்சி வரலாற்றில் முதல் தடவையாக தென்னிலங்கை கட்சி ஒன்றினால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

என்.பி.பி. அளிக்கப்பட்ட வாக்குகளில் வெறும் 25 வீதத்தை பெற்று ஆறு ஆசனங்களில் 50 வீதமான மூன்று ஆசனங்களை பெற்றிருக்கிறது.

அளிக்கப்பட்ட 60 வீதமான வாக்குகளில் அரைவாசிக்கும் குறைவாகவே என்.பி.பி பெற்ற வாக்குகள் உள்ளன.ஆனால் தமிழரசுக்கட்சி (19.5) , அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (8.6), சுயேட்சை குழு 17 (8.6) வீத வாக்குகளை பெற்று மிகுதி மூன்று ஆசனங்களில் தலா ஒரு ஆசனத்தை பெற்றுள்ளன.

இந்த மூன்றும் பெற்ற வாக்குகள் 36.7 வீதம். இத்துடன் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு (சங்கு) பெற்ற (6.9) வாக்குகளையும் சேர்த்தால் இது 43. 6 வீதம். விகிதாசார தேர்தல் முறை சார்ந்த போனஸ் ஆசன ஒதுக்கீட்டின் அரசியல் சட்ட இருட்டறை.

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் நோக்கினால் என்.பி.பி. பெற்ற 80, 830 வாக்குகளோடு ஒப்பிடுகையில் மற்றைய மூன்று ஆசனங்களையும்,  ஆசனமற்ற சங்கு பெற்ற வாக்குகளும் சுமார் 1, 40,000க்கும் அதிகமானவை.

இந்த அடிப்படையில் நோக்கும்போது மக்கள் தமிழ்த்தேசிய அரசியலை , உரிமைக்கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள் என்று நாட்டில் வீசிய என்.பி.பி. அலையின் தாக்கத்தினால் ஏற்பட்ட இந்த விளைவைக்கொண்டு சொல்ல முடியாது. ஏனெனில் கிழக்கில் மக்கள் தமிழ்த்தேசியத்தை காப்பாற்றியிருக்கிறார்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை கட்சி ஒன்று இந்த வெற்றியை பெறுவதற்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்த்தேசிய அரசியலில் ஏற்பட்ட பின்னடைவு ஒரு முக்கியமான காரணம். அதேவேளை இணக்க அரசியல், அபிவிருத்தி பேசிய ஈ.பி.டி.பி, அங்கயன் அணி, மற்றும் தென்னிலங்கை கட்சிகளையும் அவர்கள் தமிழ்த்தேசிய கட்சிகளை விடவும் மிக மோசமாக நிராகரித்துள்ளனர், என்பதும் மறுப்பதற்கில்லை.

தமிழரசுக்கட்சியின் கோரிக்கையின் பேரில் சஜீத் பிரேமதாசவுக்கும், ஈ.பி.டி.பி.யின் கோரிக்கையின் பேரில் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் கொள்கை அடிப்படையிலானதல்ல என்பதையும் இந்த முடிவு காட்டுகிறது.

என்.பி.பி.யின் தேர்தல் கால நடவடிக்கைகளும், வாக்குறுதிகளும் நீண்ட காலமாக தமிழ்த்தேசிய, மற்றும் இணக்க மற்றைய தென்னிலங்கை கட்சிகளின் மீதான நம்பிக்கையை இழக்கச்செய்து புதிய ஒரு வாய்ப்பை என்.பி.பி. க்கு வழங்கிப்பார்க்க முன்வந்ததன் ஒரு விளைவு.

எதிர்காலத்தில் தமிழ்த்தேசிய கட்சிகள் இழந்த நம்பிக்கையை எப்படி மீளப்பெறப்போகின்றன என்பதும், வழங்கிய வாக்குறுதிகளை என்.பி.பி. எவ்வாறு காப்பாற்றப்போகிறது என்பதுமே யாழ்ப்பாணத்தில் இந்த கட்சிகளின் இருப்பை தீர்மானிப்பதாக அமையும்.

ஆனால் யாழ். தமிழ்த்தேசிய கோட்டைக்குள் என்.பி.பி. நடாத்தியிருக்கின்ற இந்த ஊடுருவல் தாக்குதல் தமிழ்த்தேசிய அரசியலின் தற்காலிக நிராகரிப்பு என்று கொண்டாலும் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றல்ல.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த்தேசிய அரசியல் மூன்றாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது.

தமிழரசுக்கட்சி சுமார் 30,000 வாக்குகளையும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சுமார் 21,000 வாக்குகளையும் பெற்று தலா ஒரு கதிரையை பிடித்துள்ளன.

ஆறு ஆசனங்களில் என்.பி.பி. இரண்டு, ஐக்கிய மக்கள் சக்தி ஒன்று, சிறிலங்கா தொழிற்கட்சி ஒன்று என மற்றைய நான்கு ஆசனங்களையும் பெற்றுள்ளன.

இறுதி யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னி நிர்வாக மாவட்டங்களான மன்னார், வவுனியா, முல்லைத்தீவில் இது தமிழ்த்தேசிய அரசியல் தோல்வியாக தோன்றினும் இங்கு வன்னியின் சிங்கள, முஸ்லீம், மலையக மக்களின் வாக்காளர் பங்களிப்பு இந்த தேசிய கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவானது சகல எதிர்பார்ப்புக்களையும் நிராகரித்து தமிழ்த்தேசிய அரசியல் நிலைப்பாட்டிற்கு மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்களா ? என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது.

பிறந்த வீட்டில் தோற்ற தமிழரசு வளர்ந்த வீட்டில் வெற்றி பெற்றுள்ளது. 98,975(33.8) வாக்குகளை வழங்கி மூன்று ஆசனங்களுக்கு வழிவகுத்ததன் மூலம் இலங்கையின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் என்.பி.பி. வகித்த முதன்மை நிலையை மக்கள் தமிழரசுக்கட்சிக்கு வழங்கி சாதனை படைத்திருக்கிறார்கள்.

இந்த சாதனையும், என்.பி.பி.யின் புதுவரவும், கவர்ச்சியும் ரி.எம்.வி.பி. யின் ஆசன இழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

என்.பி.பி. தமிழ்த்தேசிய அரசியல் மீதான வெறுப்பை வடக்கு கிழக்கில் அறுவடை செய்துள்ள நிலையில், மட்டக்களப்பில் அது சாத்தியப்படவில்லை.

ஆனால் ஊழலுக்கு எதிராகவும், ரணில் -ராஜபக்ச ஆட்சியின் பங்காளராகவும் மட்டக்களப்பில் என்.பி.பி பிள்ளையானை 55,498 (19.3) வாக்குகளை பெற்று தோல்வியடையச்செய்துள்ளது.

கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளில் ரி.எம்.வி.பி. சுமார் 50 வீதத்திற்கும் அதிகமாக இழந்து 31, 286(10.9) வாக்குகளை மட்டுமே பெற்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தனியாக மட்டக்களப்பு மாவட்டத்தை மட்டும் முதன்மைப்படுத்திய ரி.எம்.வி.பி.க்கு எதிர்காலம் குறித்த ஒரு பெரும் சவாலாக இது இருக்கப்போகிறது. என்.பி.பி, தமிழரசுக்கட்சி அலைக்கு மத்தியிலும் முஸ்லீம் காங்கிரஸ் 40,139 (14.0) வாக்குகளை பெற்று தனது பிரதிநித்துவத்தை காப்பாற்ற முடிந்துள்ளது.

திருகோணமலையில் என்.பி.பி., எஸ்.ஜே.வி. யினால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட தமிழரசுக்கட்சி 34,168 (17.0) வாக்குகளை பெற்று ஒரு இடத்தை பெற்றுள்ளது.

எனினும் இது கடந்த தேர்தலிலும் மூன்றாவது இடத்தில் சம்பந்தர் தலைமையில் பெற்ற வாக்குகளை விடவும் (39,570 /18.5 %) சுமார் 5,000 வாக்குகள் குறைவானது. அதுவும் சங்கு அணியுடன் போட்டி தவிர்ப்பு செய்து ஓரணியில் போட்டியிட்டதனாலேயே திருகோணமலையில் தமிழ்ப்பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட்டுள்ளது. இல்லையேல் இது சாத்தியப் பட்டிருக்கவாய்ப்பில்லை.

அம்பாறையில் வீடும், சங்கும் தனித்து போட்டியிட்ட போதும் தமிழரசுக்கட்சி 33,632 (9.27) வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளது அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு ஒரு நற்செய்தி. சங்கு, படகு, கார் , சைக்கிள் வீணை போன்றவை அங்கு போட்டியிட்ட போதும் தமிழரசுக்கட்சியின் வெற்றியை அவற்றால் தடுக்க முடியவில்லை.

இவை தேசிய பட்டியல் வாக்குச் சேகரிப்பை இலக்காகக்கொண்டே போட்டியிட்டன. தமிழரசுக்கட்சி கடந்த தேர்தலில் இழந்த பிரதிநிதித்துவத்தை இம்முறை பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் தமிழரசு, கருணா தரப்பு போட்டி பலமாக இருந்ததால் தமிழர் வாக்குகள் ஏற்க்குறைய சமமாக பிரிக்கப்பட்ட நிலையில் வெற்றி பெறமுடியவில்லை.

இம்முறையும் தமிழ் வாக்காளர்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் தமிழரசு பெற்ற வாக்குகள் குறைவானவையே. காஸ் சிலிண்டர் 33,544 (9.24) வாக்குகளை பெற்றுள்ளது. ஆக, 80 வாக்குகளே தமிழரசுக்கட்சியின் வெற்றியை தீர்மானித்துள்ளன. இல்லையேல் 2020 கதையே 2024 கதையாகவும் இருந்திருக்கும்.

மொத்தத்தில் என்.பி.பி. அலையில் தமிழ்த்தேசிய அரசியல் அள்ளுண்டு போய்விட்டது என்று சொல்லுவதற்கு இந்த தேர்தல் முடிவுகள் மட்டும் போதுமானவை அல்ல.

என்.பி.பி.யின் எதிர்கால செயற்பாடும்,வாக்குறுதிகளும், இனப்பிரச்சினைக்கான தீர்வு அணுகுமுறைகளுமே அதனை தீர்மானிப்பதாக அமையும். ஒப்பீட்டளவில் பிராந்திய, சிறிய முஸ்லீம் கட்சிகளை விடவும் குறிப்பாக அம்பாறையில் அதாவுலாலாவின் மக்கள் காங்கிரஸ் (மயில்) 33, 911(9.34) வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் ஈ.பி.டி.பி, ரி.எம்.வி.பி. என்பனவற்றால் அதனை சாதிக்க முடியவில்லை.

தேசிய பட்டியல் கணிப்பீடு தமிழரசுக்கட்சிக்கு ஒரு ஆசனத்தை ஒதுக்கியுள்ளது. தமிழரசு வடக்கு கிழக்கில் பெற்ற ஏழு ஆசனங்கள் இத்துடன் எட்டாகியுள்ளது . இதில் மூன்று மட்டக்களப்பு (3), அம்பாறை(1), திருகோணமலை (1) , ஐந்து ஆசனங்கள். பாராளுமன்ற குழுவில் கிழக்குமாகாண உறுப்பினர்களே அதிகம் 5+2=7 ( 7:5)

தமிழரசுகட்சிக்கு வடக்கு கிழக்கில் கிடைத்த மொத்த வாக்குகள் 2,57,000.

இதில் வடக்கில் 93,000. மட்டக்களப்பில் மட்டும் தமிழரசு பெற்ற 96,975 வாக்குகளையும் விடவும் இவை குறைவானவை. மொத்தமாக கிழக்கில் தமிழரசு 1,62, 000 வாக்குகளை பெற்றுள்ளது. வடக்கு தமிழர்கள் அநுர அலையில் அள்ளுண்டு போன நிலையில் தமிழ்த்தேசிய அரசியலின் காவலர்களாக கிழக்கு தமிழ் மக்களே உள்ளனர்.

இந்த நிலையில்…….!

தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற குழுத்தலைவர் பதவி கிழக்கிற்கு – சாணக்கியனுக்கு வழங்கப்படுமா…?

தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியலுக்கு காரணம் கிழக்கு மக்கள் அந்த ஆசனம் கிழக்கிற்கே வழங்கப்படுமா?

தமிழரசுக்கட்சிக்கு கிழக்கு தலைமை தாங்குமா ….?

இந்த கேள்விக்கான பதிலே என்.பி.பி. பேசிய மாற்றத்திற்கான அரசியலை நெல்லுக்கிறைத்த நீராய் புல்லுக்கும் அங்கு புசியச்செய்யும்.

— அழகு குணசீலன் —

Share.
Leave A Reply