படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து மஸ்க்கின் அந்தஸ்தும் செல்வமும் இன்னும் உயரும் என்று தெரிகிறது
ஈலோன் மஸ்க் குறித்து தினமும் ஏதேனும் ஒரு தலைப்புச் செய்தி வருவது என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
எக்ஸ் எனும் சமூக ஊடகத் தளம் (முன்னர் ட்விட்டர்), டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர், உலகின் நம்பர் 1 பணக்காரர். தனது சமூக ஊடகத் தளத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, பல தரப்பட்ட தலைப்புகளில் தனக்கு இருக்கும் கருத்துகளை உலகிற்கு தெரியப்படுத்துபவர்.
அவர் தனது நிறுவனமான நியூராலிங்க் மூலம் மனித மூளையில் பொருத்தக்கூடிய சிப் குறித்த சோதனைகளை மேற்கொண்டார்.
எக்ஸ் தளத்தை ஒரு ‘சூப்பர் ஆப்’-ஆக (Super App) மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறார். செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று முன்னர் அவர் எச்சரித்த போதிலும், வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு உலகில் தனது இருப்பை உறுதிப்படுத்த முயற்சி செய்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் (2024) டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து மஸ்க்கின் அந்தஸ்தும் செல்வமும் இன்னும் உயரும் என்று தெரிகிறது. மஸ்க் இந்தத் தேர்தலில் ஒரு முக்கியமான, ஆனால் அதேசமயம் சர்ச்சைக்குரிய ஒரு வகையில் பங்காற்றினார்.
டிரம்ப் – மஸ்க் உரையாடல்: கமலா ஹாரிஸ், புதின், கிம் ஜாங் உன் பற்றி என்ன பேசினார்கள்?
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், அடுத்து அமையவிருக்கும் தனது நிர்வாகத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்ட அரசாங்க செயல்திறன் மேம்பாட்டுத் துறையை (Department of Government Efficiency- Doge) வழிநடத்த ஈலோன் மஸ்க்கையே தேர்ந்தெடுத்துள்ளார்.
‘அதிகப்படியான விதிமுறைகள் மற்றும் வீணான செலவுகளைக் குறைக்கவும், கூட்டாட்சி முகமைகளை மறுசீரமைக்கவும்’, அமெரிக்க நிர்வாகத்திற்கு இந்த துறை (Doge) உதவும்’ என்று டிரம்ப் கூறினார்.
இந்த விஷயத்தில் ஈலோன் மஸ்குக்கு ஏற்கனவே அனுபவம் உண்டு, ட்விட்டர் (தற்போது எக்ஸ்) தளத்தை வாங்கிய பிறகு, அவர் பலரை வேலையை விட்டு நீக்கினார்.
படக்குறிப்பு, ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பு படிக்க கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட மஸ்க், குறுகிய காலத்திலேயே அங்கிருந்து வெளியேறினார்
ஈலோன் மஸ்க் எங்கு பிறந்தார்?
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘சிலிக்கான் பள்ளத்தாக்கு’ உலகிற்குள் நுழைந்ததில் இருந்தே, 53 வயதான ஈலோன் மஸ்க், தனது வணிக செயல்களால் பொதுமக்களை வசீகரித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவின் பிரிட்டோரியாவில் பிறந்த ஈலோன் மஸ்க், தனது சகோதரருடன் வீடுவீடாகச் சென்று ‘வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் ஈஸ்டர் முட்டைகளை’ விற்றவர். 12 வயதில் தனது முதல் கணினி விளையாட்டை உருவாக்கினார்.
அவரது பெற்றோரின் விவாகரத்து, பள்ளியில் பிற மாணவர்களால் வம்புக்கு இழுக்கப்பட்டது (Bullying), ஆஸ்பெர்கர் சிண்ட்ரோம் (Asperger Syndrom) காரணமாக சமூகத்தில் தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் இருந்த சிரமம், என தான் குழந்தைப் பருவத்தில் மிகவும் கஷ்டப்பட்டதாக அவர் விவரித்தார்.
அவர் இளம் பருவத்தில், கல்லூரி படிப்பிற்காக வீட்டை விட்டு வெளியேறி, கனடாவிற்கும் பின்னர் அமெரிக்காவிற்கும் சென்றார். அங்கு அவர் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் மற்றும் இயற்பியல் படித்தார்.
2010-ம் ஆண்டு மேரி கிளேர் என்ற இதழில் எழுதிய கட்டுரையில், “பணக்காரராக ஆவதற்கு முன்பே, ‘இல்லை’ எனும் பதிலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனிதராகவே மஸ்க் இருந்தார்” என்று அவரது முதல் மனைவி ஜஸ்டின் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். கல்லூரியில் படித்த போது இவரை சந்தித்து காதல் வயப்பட்ட ஈலோன் மஸ்க், 2000-வது ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
“போட்டி மனப்பான்மையும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற ஆர்வமும் தான் வணிகத்தில் அவர் மிகப்பெரிய வெற்றி பெற காரணம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் அப்படித்தான். எங்களது திருமண நிகழ்வில் நடனமாடும் போது கூட ‘இந்த உறவில் நான்தான் ஆல்பா’ (Alpha- அதிகாரம் செலுத்தக் கூடியவர்) என அவர் என்னிடம் கூறினார்” என்று ஜஸ்டின் நினைவுகூர்ந்தார்.
படக்குறிப்பு, மஸ்க்கின் மிக சமீபத்திய வணிக முயற்சிகளில், அக்டோபர் 2022இல் சமூக ஊடக தளமான ட்விட்டரை (தற்போது எக்ஸ்) கையகப்படுத்தியது அடங்கும்
ஈலோன் மஸ்க் உலகின் முதல் பணக்காரரானது எப்படி?
ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் இயற்பியல் பட்டப்படிப்பு படிக்க கிடைத்த வாய்ப்பை ஏற்றுக்கொண்ட ஈலோன் மஸ்க், குறுகிய காலத்திலேயே அங்கிருந்து வெளியேறினார். பிறகு 1990களில் இணையம் தொடர்பான நிறுவனங்களின் வளர்ச்சியின் (Dotcom Boom) போது இரண்டு தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களை நிறுவினார்.
இவற்றில் ஒன்று வலை மென்பொருள் நிறுவனம், மற்றொன்று ஆன்லைன் நிதி நிறுவனம். அந்த நிதி நிறுவனம் தான் PayPal என்றானது. பின்னர் இது 2002இல் ஈபேக்கு (eBay) நிறுவனத்திற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது.
அவர் தனது பணத்தை ஒரு புதிய ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இல் முதலீடு செய்தார். குறைவான செலவை முதன்மையாகக் கொண்டு, நாசாவுக்கு மாற்றாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை எடுத்துச் செல்வதே அவரது லட்சியமாக இருந்தது.
ஒரு புதிய மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவிலும் தனது பணத்தை முதலீடு செய்தார், 2008இல் அதன் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றார்.
இரண்டு நிறுவனங்களும் சில சமயங்களில் நிதிச் சரிவை சந்தித்த போதும், தங்கள் தொழில்களை மேம்படுத்தியதற்காக பெயர்போனவை.
அவரது மிக சமீபத்திய வணிக முயற்சிகளில், அக்டோபர் 2022இல் சமூக ஊடக தளமான ட்விட்டரை (தற்போது எக்ஸ்) கையகப்படுத்தியதும் அடங்கும்.
தளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் குழுவின் ஊழியர் எண்ணிக்கையை குறைத்தது உட்பட, அவர் மேற்கொண்ட ட்விட்டர் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் சர்ச்சையை கிளப்பின.
பிறகு நிறுவனத்திற்கு ‘எக்ஸ்’ (X) என புதிய பெயரிட்டார். புதிய பிரீமியம் சந்தாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன, அதாவது வருமானத்திற்காக விளம்பரத்தை மட்டுமே நம்பியிருக்காது அந்த தளம் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
மஸ்க்கின் நீண்ட கால லட்சியம் எக்ஸ் தளத்தை பலவிதமான சேவைகளை வழங்கும் ஒரு ‘சூப்பர் ஆப்’-ஆக (Super App) மாற்ற வேண்டும் என்பது தான். இருப்பினும், இதுவரை நிறுவனத்தின் மதிப்பு அவர் முதலீடு செய்த 44 பில்லியன் டாலர்களிலிருந்து வெறும் 19 பில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
‘உள்ளுணர்வுகளைப் பின்பற்றி நடப்பவர்’
மஸ்க் கடந்த பிப்ரவரி மாதத்தில், OpenAI நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்தார்
அவர் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையிலும் பல லட்சியங்களைக் கொண்டுள்ளார். ChatGPTஇன் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் ஆரம்பகால முதலீட்டாளராக மஸ்க் இருந்தார். பிறகு 2023இல் ‘பிரபஞ்சத்தின் உண்மையான தன்மையைப் புரிந்துகொள்ளும்’ நோக்கத்தில், ‘xAI’ எனும் தனது சொந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கினார்.
மஸ்க் கடந்த பிப்ரவரி மாதத்தில், OpenAI நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்தார். தனது உதவியால் உருவான அந்த நிறுவனம், மைக்ரோசாஃப்டில் இணைந்ததன் மூலம் அதன் இலாப நோக்கற்ற தன்மைகளை கைவிட்டதாக அவர் கூறினார்.
“அவர், நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை முன்பே திட்டமிடக் கூடிய ஒரு நபர் கிடையாது என்பது என் கருத்து. அவர் தனது உள்ளுணர்வுகளைப் பின்பற்றி நடப்பவர்” என்று பத்திரிகையாளர் கிறிஸ் ஸ்டோகல்-வாக்கர் கூறுகிறார்.
எழுத்தாளர் ஆஷ்லீ வான்ஸ், 2015ஆம் ஆண்டு, ஒரு சுயசரிதையில், “‘அதிக ஈகோ’ மற்றும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவர்” என்று மஸ்க்கை வர்ணித்தார். அதேசமயம், மஸ்க் ஒரு மோசமான நடனக் கலைஞர் மற்றும் பொது மேடையில் பேசுவதில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டவர் என்றும் விவரித்தார்.
பிரிட்டிஷ் நடிகை தலுலா ரிலே என்பவரிடமிருந்து இரண்டு முறை விவாகரத்து பெற்றது உட்பட அவர் பெற்ற மூன்று விவாகரத்துகள் குறித்தும், தனது தவறுகள் பற்றியும் ஈலோன் மஸ்க் வெளிப்படையாக பேசியுள்ளார்.
“எனது பாவங்களை நீங்கள் பட்டியலிட்டால், நான் பூமியின் மிக மோசமான நபரைப் போல தெரிவேன். ஆனால் நான் சரியாகச் செய்த விஷயங்களோடு ஒப்பிட்டால், அந்தத் தவறுகளுக்கு பின்னால் உள்ள அர்த்தம் புரியும்.” என்று மஸ்க் 2022இல் ஒரு (TED) நேர்காணலில் கூறினார்.
ஈலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு என்ன?
இந்த முரண்பாடுகள் அனைத்தும் மஸ்க்கின் குணாதிசயத்தின் ஒரு பகுதியாகத் தோன்றுகின்றன. அது நிச்சயமாக செல்வத்தைக் குவிப்பதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை.
உலக கோடீஸ்வரர்களின் செல்வத்தைக் குறித்த தகவல்களை சேகரிக்கும் ப்ளூம்பெர்க்கின் குறியீட்டின்படி, மஸ்க் தான் உலகின் மிகப்பெரும் பணக்காரர் ஆவார்.
அவரது தற்போதைய நிகர மதிப்பு சுமார் 290 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 24.5 லட்சம் கோடி ரூபாய்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டிரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து டெஸ்லாவின் பங்கு விலையுடன் அவரது செல்வமும் உயர்ந்தது.
இது பெரும்பாலும் டெஸ்லாவில் உள்ள அவரது பங்குகளின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டது, அந்த நிறுவனத்தில் அவர் 13%க்கும் அதிகமான பங்குகளை வைத்திருக்கிறார். நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்து, தொடர்ச்சியான லாபத்தை வழங்கத் தொடங்கியதால், 2020ஆம் ஆண்டில் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்தது (சிலர் நியாயமற்ற முறையில் என்று கூறுகிறார்கள்).
ஆனால் 2022ஆம் ஆண்டின் இறுதியில் பங்குகள் சரிந்தன, சிலர் இந்த வீழ்ச்சிக்கு ‘ட்விட்டர்’ நிறுவனத்தை மஸ்க் கைப்பற்றியது தான் காரணம் என குற்றம் சாட்டினர். இருப்பினும் டெஸ்லாவின் பங்குகள் பின்னர் சரிவிலிருந்து மீண்டன.
ஈலோன் மஸ்க் டிஜிட்டல் நாணயங்கள் பக்கமும் தன் கவனத்தைச் செலுத்துகிறார். சுரங்கப்பாதைகள் கட்டமைக்கும் நிறுவனமான ‘தி போரிங் கம்பெனி’ மற்றும் மனித மூளை குறித்த தொழில்நுட்ப ஆய்வுகளை செய்யும் நியூராலிங்க் உள்ளிட்ட பல சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
ஈலோன் மஸ்க், தான் வெறுமனே பணம் சம்பாதிப்பதற்காக வணிகத்தில் ஈடுபடவில்லை என்று அடிக்கடி கூறி வருகிறார். சமீபத்தில் ட்விட்டர் கையகப்படுத்திய போதும் இதை அவர் மீண்டும் தெரிவித்தார்.
“சமூக நலன் அல்லது மனிதநேயம் போன்ற சில காரணங்களின் அடிப்படையில், அந்த வணிகங்கள் மிக முக்கியமானவை என்று உணர்ந்தால் மட்டுமே ஈலோன் மஸ்க் அவற்றில் ஈடுபடுகிறார்.” என்று அவரின் நண்பரும் டெஸ்லா முதலீட்டாளருமான ரோஸ் கெர்பர் கூறுகிறார்.
ஈலோன் மஸ்க் டிரம்பை ஆதரித்தது ஏன்?
டிரம்ப் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சிக்குப் பிறகு, அவருக்கு மஸ்க் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளித்தார்
மஸ்க், 2002ஆம் ஆண்டில் அமெரிக்க குடியுரிமை பெற்றார். தன் மீது அரசியலை முத்திரை குத்தும் முயற்சிகளை அவர் நீண்ட காலமாகவே எதிர்த்து வந்தார். தன்னை “‘ஒரு பாதி ஜனநாயகவாதி’ (Half Democrat), ‘பாதி குடியரசுக் கட்சிக் ஆதரவாளர்’ (half-Republican)”, ‘அரசியல் ரீதியாக மிதமான கொள்கை உடையவன்’ மற்றும் ‘சுயாதீனமானவன்’ என்று விவரித்தார்.
பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜோ பைடனுக்கு வாக்களித்ததாக அவர் கூறினார், அவர்கள் அனைவரும் ஜனநாயகக் கட்சியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் அவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் பக்கம் சாய்ந்தார். 2024இல் டிரம்ப் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சிக்குப் பிறகு, அவருக்கு மஸ்க் அதிகாரப்பூர்வமாக ஆதரவு அளித்தார். டிரம்பின் பிரசாரத்தின் முன்னணி ஆதரவாளராகவும், அதில் செல்வாக்கு செலுத்துபவர்களில் ஒருவராகவும் மாறினார்.
பொருளாதாரம், குடியேற்றம் மற்றும் துப்பாக்கி கட்டுப்பாடு உட்பட பல பிரச்னைகளில் ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாட்டை அவர் விமர்சித்தார்.
ஜனநாயகக் கட்சியின் ஆட்சி மீண்டும் அமைந்தால் அமெரிக்க அரசியலமைப்பின் முதல் திருத்தத்தில் பொறிக்கப்பட்டுள்ள ‘பேச்சு சுதந்திரம்’ என்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றும் மஸ்க் மீண்டும் மீண்டும் கூறினார்.
டிரம்பின் பிரசாரத்தின் முன்னணி ஆதரவாளராகவும், அதில் செல்வாக்கு செலுத்துபவர்களில் ஒருவராகவும் மஸ்க் இருந்தார்
தேர்தலுக்கு முன்னதாக அவர் பல குடியரசுக் கட்சி பேரணிகளில் தோன்றினார். டிரம்பை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்க உதவும் ‘ஒரு அரசியல் நடவடிக்கைக் குழுவுக்கு’ நிதியளிக்க மில்லியன்கணக்கான டாலர்களைத் திரட்டினார். மேலும் எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகள் மூலம் டிரம்புக்கு ஆதரவாக அடிக்கடி குரல் கொடுத்தார்.
ஈலோன் மஸ்க்கின் ‘அமெரிக்கா சூப்பர் பிஏசி’ எனும் அரசியல் நடவடிக்கைக் குழு, தேர்தல் பிரசாரத்தின் இறுதி வாரங்களில் முடிவைத் தீர்மானிக்கும் ‘ஸ்விங்’ மாகாணங்களில் வாக்காளர்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் ‘1 மில்லியன் டாலர்’ நன்கொடையை வழங்கியது.
ஆனாலும் இது அவரது முதல் அரசியல் சர்ச்சையுடன் ஒப்பிடும் போது, பெரிய விஷயமில்லை.
பிரிட்டனில், ஆகஸ்ட் மாதத்தில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்ற போது, “பிரிட்டன் ‘உள்நாட்டுப் போரின்’ விளிம்பில் இருப்பதாக அவர் கூறியது உட்பட, உலகெங்கிலும் உள்ள நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை அவர் பகிர்ந்தார்.
மஸ்க் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை யுக்ரேனுக்கு வழங்கியிருந்தாலும் கூட, ரஷ்ய கடற்படையின் ஒரு பெரிய பிரிவிற்கு தாயகமாக இருக்கும் செவஸ்டபோலில் ஸ்டார்லிங்கை செயல்படுத்துவதற்கான அவசர கோரிக்கையை யுக்ரேன் விடுத்த போது, அதை அவர் நிராகரித்தார். இது விமர்சனங்களை எழுப்பியது
அமெரிக்காவில், கலிபோர்னியாவின் விதிமுறைகள் மற்றும் அதிக வரிகள் குறித்து புகார் தெரிவித்த மஸ்க், டெக்சாஸுக்கு குடிபெயர்ந்தார். அவருக்கு தொழிற்சங்க அமைப்பாளர்களுடன் மோதல் ஏற்பட்டது. பிறகு 2020இல், கொரோனா பெருந்தொற்று ஊரடங்குகளை ‘பாசிச நடவடிக்கைகள்’ என்று கண்டித்தார்.
டெஸ்லா நிறுவனம் காலநிலை மாற்றம் போன்ற முக்கிய மனித குல பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதால், தனது வணிகங்களை ஒரு மனிதநேய நோக்கத்துடனே அணுகுவதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் உலகில் ‘போதுமான மக்கள்’ இல்லாமல் போகக்கூடும் என்று மஸ்க் கூறியுள்ளார்
செயற்கை நுண்ணறிவு மீதான ஆர்வம்
செயற்கை நுண்ணறிவு துறையில் அவருக்கு பெரும் ஆர்வம் உள்ள போதிலும், அதிபுத்திசாலித்தனமான ஏஐ தொழில்நுட்பங்கள் மனித குலத்தின் எதிர்காலத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பது குறித்து கவலை தெரிவிக்கும் மிக முக்கியமான நபர்களில் ஒருவராகவும் அவர் உள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் குறைந்து வரும் பிறப்பு விகிதம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, எதிர்காலத்தில் உலகில் ‘போதுமான மக்கள்’ இல்லாமல் போகக் கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
ஈலோன் மஸ்க்கிற்கு, அவரது முதல் மனைவி மூலமாக ஆறு குழந்தைகளும், கனடிய பாடகி கிரிம்ஸ் மூலமாக மூன்று குழந்தைகளும், ஷிவோன் ஜிலிஸ் மூலமாக மூன்று குழந்தைகளும் என 12 பிள்ளைகள் உள்ளனர்.
ஜிலிஸ் மூலமாக அவருக்கு இரட்டையர்கள் பிறந்ததைத் தொடர்ந்து, “மக்கள் தொகை குறைந்து வருவதைத் தடுக்க, என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.” என்று மஸ்க் ட்வீட் செய்திருந்தார்.
லிவ் மக்மோஹன் தந்த கூடுதல் விவரங்கள் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, பிபிசி செய்தி-