பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, தமிழ்த் தேசியக் கட்சிகள் சில, தேசிய மக்கள் சக்தியின் மீது தமது முழுப்பலத்தையும் கொண்டு, எதிர்ப்பு பிரசாரத்தை முன்னெடுத்திருந்ததைக் கவனித்திருக்க முடியும்.

தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்த ஒரு முக்கியமான கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியைக் குறிப்பிடலாம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம் .ஏ .சுமந்திரன் பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மிகத் தீவிரமான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார்.

அவரது அந்தப் பிரசாரங்கள், ஜனாதிபதி தேர்தலின்போது அவர் முன்வைத்த கருத்துக்கள், செய்த பிரசாரங்களில் இருந்து வேறுபட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரும் கூட, அவர் வெளியிட்ட கருத்துக்களில் இருந்து அது முரண்பட்டதாக இருந்தது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில், சுமந்திரனின் ஒரே இலக்கு தமிழ்ப் பொது வேட்பாளரைத் தோற்கடிப்பதாகவே இருந்தது.

சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தாலும் கூட, அநுரகுமார திசாநாயக்கவை தனக்குப் பிடித்தமான வேட்பாளர் எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது கட்சியின் கொள்கைகள் முன்னேற்றகரமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதுமாத்திரமின்றி தேர்தல் முடிந்த பின்னர், தமிழ்ப் பொது வேட்பாளரை- குறை மதிப்பிற்கு உட்படுத்தும் வகையில்- அவர் பெற்ற 2 26,000 வாக்குகளை மலினப்படுத்தும் வகையில் -இன்னொரு கருத்தையும் குறிப்பிட்டிருந்தார்.

தமிழரசுக் கட்சி ஆதரவளிப்பதற்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட மூன்று பிரதான சிங்கள வேட்பாளர்களும், வடக்கு கிழக்கில் 82 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறார்கள் என்றும், அது தமிழ் மக்கள் தமது கட்சிக்கு அளித்திருக்கின்ற அங்கீகாரம் என்றும், ஒன்று வாதத்தை முன் வைத்தார்.

அதாவது சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க , அநுரகுமார திசாநாயக்க ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் கிடைத்த வாக்குகள் என்பது, தமிழரசு கட்சியுடன் ஒத்திசைந்து செல்வதாக அவர் நியாயப்படுத்தினார்.

வடக்கு, கிழக்கில் தமிழ் பொது வேட்பாளருக்கு வெறுமனே 14 சதவீத வாக்குகள் தான் கிடைத்தன என்று கூறுவதற்காக, அவர் தோற்கடிக்கப்பட்டு விட்டார் -அவரை முன்னிறுத்தியவர்கள் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்பதற்காகவே, தேசிய மக்கள் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளையும், தமக்கு கொள்கைக்கு கிடைத்த வாக்குகளாக அவர் அடையாளப்படுத்தினார்.

அப்போது அநுரகுமார திசாநாயக்கவுக்கு கிடைத்த வாக்குகளை கொண்டாடிய சுமந்திரன், பாராளுமன்றத் தேர்தலில் வேறொரு நிலைப்பாட்டை எடுத்தார்.

ஏனென்றால், பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தை கைப்பற்றி விடக் கூடிய ஆபத்தை அவர் எதிர்கொண்டிருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் கட்சிக்கு 27 ஆயிரம் வாக்குகள் மாத்திரம் கிடைத்திருந்தன. அது அதிகரித்து, ஒரு ஆசனத்தை பெறுகின்ற அளவுக்கு சென்று விட்டால், அதன் பாதிப்பு தமிழரசுக் கட்சிக்கும் இருக்கும். அதைவிட சுமந்திரனுக்கும் அது தனிப்பட்ட முறையில் சவாலாகவும் இருந்தது.

தேசிய மக்கள் சக்தி இந்த முறை யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தை எடுத்து விடக் கூடிய அளவுக்கு பலம் பெற்று விடுமா என்ற சந்தேகம், எல்லா தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும், இருந்தது.

மாற்றத்தை ஆதரித்த ஒரு மக்கள் கூட்டம், அவ்வாறான ஒரு எதிர்பார்ப்பை கொண்டு இருந்தது. பல்கலைக்கழகத்திற்கு உள்ளேயும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு அணி உருவாகியது.

இது தமிழ்த் தேசிய வாக்குகளை உடைத்து சிதைத்து விடும் என்ற சிக்கல் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஈ.பி.டி.பி. போன்ற கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றியிருக்கின்றன.

தமிழ்க் கட்சி என்ற அடிப்படையில், ஈ.பி.டி.பிக்கு ஆசனம் கிடைத்தது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியோ, சிறிலங்கா சுதந்திர கட்சியோ ஆசனங்களை பெற்ற போது அது வேறுபட்ட நோக்கில் பார்க்கப்பட்டது.

இந்த இரண்டுமே சிங்களப் பேரினவாதச் சிந்தனை கொண்ட கட்சிகள். சிங்கள பேரினவாத தலைமைத்துவங்களினால் வழிநடத்தப்பட்ட கட்சிகள் .

அப்படிப்பட்ட கட்சிகளுக்கு தமிழ் மக்களின் ஆதரவு கிடைத்தபோது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் பலவீனப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டது.

தெற்கில் உள்ள சிங்கள பேரினவாத கட்சிகள் ஒவ்வொரு முறை வெற்றி பெறுகின்ற போதும், இவ்வாறான ஒரு தோற்றம் அவதானிக்கப்பட்டாலும், தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து அதனை முறியடிக்க அல்லது தோற்கடிக்க முயற்சிக்கவில்லை.

அந்தக் கட்சிகளுக்கு ஆசனங்கள் கிடைத்ததற்கு, அவற்றின் கொள்கையோ, தலைமைத்துவம் மீதான நம்பிக்கையோ, வேட்பாளர்களின் மீதான கவர்ச்சியோ காரணம் எனக் கூற முடியாது.

சலுகை அரசியலை உச்சகட்டமாக பயன்படுத்தியே, அந்த கட்சிகள் ஆசனங்களை பெற்றுக் கொள்ளுகின்ற நிலை காணப்பட்டது.

வேலைவாய்ப்பு, அரசியல் சலுகைகள், வேறு எதிர்பார்ப்புகள் போன்றவற்றின் காரணமாக வாக்களித்தவர்கள் தான், சிங்கள தேசியவாத கட்சிகளை யாழ்ப்பாணத்தில் பிரதிநிதித்துவம் செய்கின்ற நிலையை ஏற்படுத்தினார்கள்.

அவ்வாறானவர்களுக்கு தமிழ்த் தேசியக் கொள்கை மீது பற்று இருக்கவில்லை. அவர்கள் சலுகையின் பால் ஓடிக்கொண்டே இருப்பவர்கள். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தவர்கள்.

இந்தமுறை பாராளுமன்றத் தேர்தலில், சலுகை அரசியலை முன்னெடுத்தவர்களுக்கு ஒரு சிக்கலான சூழல் உருவாகி இருக்கிறது.

அவர்கள் இப்போது ஆட்சியிலும் இல்லை. இந்த முறை ஆட்சிக்கு வரக்கூடிய சாத்தியமும் இல்லை.

அதனால், எந்த நம்பிக்கையிலும் அவர்களுக்கு வாக்களிக்க கூடிய அல்லது வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணம், சலுகை அரசியலுக்கு அடிபணிந்த வாக்காளர்களிடம் காணப்படவில்லை.

அதேவேளை, சலுகை அரசியலுக்கு வாக்களித்தவர்கள், தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்கக் கூடிய நிலையும் இருக்கவில்லை.

ஏனென்றால் தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து சலுகை அரசியலை எதிர்பார்க்க முடியாது. அவர்களிடம் வேலைவாய்ப்பு, அரச நியமனங்கள், ஏனைய சலுகைகள் வசதிகளை பெறுவதற்காக வாக்குகளை அளிக்க முடியாது.

எனவே சலுகை அரசியலுக்கு வாக்களித்தவர்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்புவதற்கு சாத்தியங்கள் குறைவு என்று கணிக்கப்பட்டது. அப்படியானால் தேசிய மக்கள் சக்தியை நோக்கி யார் திரும்புவார்கள் என்று கேள்வி வருகிறது.

இந்த இடத்தில் தான் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு ஒருவித பதற்றம் ஏற்பட்டது . தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் காணப்பட்ட ஒற்றுமையீனம், பிளவுகள், பிரச்சினைகள் போன்ற பலவீனங்களினால் அந்தக் கட்சிகளிடமிருந்து தமிழ் வாக்காளர்கள் விலகிச் செல்ல தொடங்கினார்கள்.

விரக்தியும் வெறுப்பும் அவர்களிடம் அதிகரித்திருந்த சூழலில், ஒன்றில் வாக்களிப்பில் இருந்து விலகியிருக்க தீர்மானிப்பார்கள். அல்லது வேறொரு தரப்புக்கு வாக்களிக்க முற்படுவார்கள்.

அவர்கள் முன் தேசிய மக்கள் சக்தி மாற்றம் என்ற கவர்ச்சி பதாகையை தாங்கிக் கொண்டு நிற்கின்ற போது, அதன் பக்கம் சாய்ந்து விடக் கூடிய ஆபத்து இருப்பதை தமிழ்த் தேசியக் கட்சிகள் உணர்ந்திருந்தன.

அதனால் தான் இந்த பாராளுமன்ற தேர்தலின் போது, தேசிய மக்கள் சக்திக்கு எதிராக கடுமையான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

அது கிட்டத்தட்ட கடந்த காலங்களில்,ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட- ஒன்றுபட்ட எதிர்ப் பிரசாரத்திற்கு இணையாகவே காணப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியை நோக்கி செல்லுகின்ற வாக்குகள், அந்த கட்சி வடக்கில் காலூன்றுவதற்பு வழியமைத்து விடக்கூடிய ஆபத்தை தமிழ் தேசிய கட்சிகள் உணர்ந்திருந்தன.

சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி போன்ற கட்சிகள் வடக்கில் காலூன்றினாலும், அவற்றினால், தமிழ் மக்களின் கட்சிகள் அல்லது தமிழ் மக்களால் ஆதரிக்கப்படும் கட்சி அல்லது தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி என்ற விம்பத்தை உருவாக்க முடியவில்லை.

அதனால் அவை நிரந்தரமாக வடக்கில் ஆசனங்களை வெல்லக் கூடிய நிலை இருக்கவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தியை பொறுத்தவரையில், அதன் நிலைப்பாடு ஆபத்தானது.

அது தமிழ் தேசிய வாக்குகளை அபகரித்து தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் ஒரே கூட்டுக்குள் கொண்டு வருகிறோம் என்ற போர்வையில், தமிழ்த் தேசியத்தை அழித்து விடும் என்ற அபாயத்தை உருவாக்கியது.

இதனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்கள் வாக்குகளையும் ஆசனங்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், இருப்பிற்காகவும் எதிர்ப்பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டி இருந்தது.

இந்த விடயத்தில் சுமந்திரன் அதிகளவில் கரிசனை கொண்டதற்கு காரணம்,யாழ்ப்பாணத்தில் தமிழரசுக் கட்சி முதன்மையான கட்சியாக வருமா என்ற கேள்வி இருந்தது.

யாழ்ப்பாணத்தில் அந்த கட்சி பிரதான கட்சியாக வெற்றி பெற்றால் தான், சுமந்திரனின் ஆசனம் உறுதி செய்யப்படும் என்ற சூழலும் காணப்பட்டது.

எனவே, அவர் தனது இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு எப்படியாவது தேசிய மக்கள் சக்தியுடன் முரண்பட்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முரண்பாடு உண்மையானதா- நிரந்தரமானதா?

– கார்வண்ணன்

Share.
Leave A Reply