ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான மோதல் கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த சில முக்கியமான மாற்றங்களால், சர்வதேச அரங்கில் முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ரஷ்யா-யுக்ரேன் மோதல் அதன் 1000 வது நாளைக் கடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில், மேற்கத்திய நாடுகள் யுக்ரேனுக்கு வழங்கும் ஆயுதங்களின் என்ணிக்கையை கணிசமாக உயர்த்தியுள்ளன. அதே சமயம் ரஷ்யா அணுஆயுத தாக்குதல் பற்றிய அச்சுறுத்தல்களை விடுத்தது.

கடந்த வார நிகழ்வுகளும் அவற்றின் தாக்கங்களும் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன

யுக்ரேனை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சிக் காலம் முடிவுக்கு வர சில வாரங்களே இருக்கும் நிலையில், அவர் ரஷ்யா – யுக்ரேன் போரில் அமெரிக்கா கடைபிடித்து வந்த கொள்கையில் முக்கிய மாற்றத்தை அறிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியான தகவலின்படி, ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளைத் தாக்க நீண்ட தூர `ATACMS’ ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்கா யுக்ரேனுக்கு அனுமதி அளித்ததாகக் கூறப்பட்டது.

இந்த நடவடிக்கை அமெரிக்காவின் ஒரு பெரிய கொள்கை மாற்றத்தை பிரதிபலித்தது. இதற்கு முன்னதாக, அமெரிக்கா கொடுத்த நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவின் உட்பகுதிக்குள் தாக்குதல் நடத்த யுக்ரேனுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை.

கடந்த பல மாதங்களாக தனது எல்லைக்கு அப்பால் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்துவதற்கு யுக்ரேன் முன்வைத்த கோரிக்கைகளையும் பைடன் நிர்வாகம் நிராகரித்து வந்தது. தற்போது அமெரிக்க அதன் கொள்கையை மாற்றி கொண்டு, யுக்ரேனுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்கா அனுமதி அளித்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியான சில மணி நேரத்தில், ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் யுக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை(ATACMS) ஏவியது.

ரஷ்யாவின் கூற்றுப்படி, பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் யுக்ரேன், அமெரிக்கா வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகளை(ATACMS) பயன்படுத்தியது. 6 ஏவுகணைகள் ஏவப்பட்டன. அதில் ஐந்து ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஒன்று சேதமடைந்தது.

இந்த வாரத்தில் ரஷ்யா – யுக்ரேன் போர் 1000வது நாளை எட்டியது

பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் சிலர் கூறிய தகவலின்படி, எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதில் இரண்டு இடைமறிக்கப்பட்டன.

ஏவுகணைகளின் எண்ணிக்கை உறுதியாக தெரியவில்லை என்றாலும்கூட, ரஷ்யா – யுக்ரேன் மோதலின் ஒரு பகுதியாக அமெரிக்கா தயாரித்த ஏவுகணைகள் முதன்முறையாக ரஷ்ய எல்லையைத் தாக்கியது ஒரு வரலாற்றுத் தருணமாக கருதப்படுகிறது.

அதன்பின்னர் புதன்கிழமை, யுக்ரேன் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய இலக்குகளை நோக்கி , பிரிட்டன் வழங்கிய ஸ்டோர்ம் ஷேடோ (Storm Shadow) என்ற ஏவுகணைகளை செலுத்தியது. அங்கு சுமார் 600 சதுர கிமீ (232 சதுர மைல்) ரஷ்ய பகுதி யுக்ரேன் படைகளின் வசமுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வாரத்தின் பிற்பகுதியில், பைடன் யுக்ரேனில் கண்ணிவெடிகளைப் (anti-personnel landmines) பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் யுக்ரேனின் ஆயுத பலத்தை மேலும் அதிகரித்தார்.

கண்ணிவெடிகள் ரஷ்யா-யுக்ரேன் போரில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் மிகவும் எளிமையான, சர்ச்சைக்குரிய, அதே சமயம் போரில் மிகவும் பயனுள்ள ஒரு அயுதம்.

யுக்ரேனின் கிழக்கு போர் முனையில் இந்த கண்ணிவெடிகள் பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. அவற்றின் பயன்பாடு ரஷ்யாவின் முன்னேற்றத்தை தாமதப்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.

ஆக, மூன்று விரைவான முடிவுகளுடன், யுக்ரேனுக்கான அதன் ஆதரவு மறைந்துவிடப் போவதில்லை என்பதை மேற்கத்திய நாடுகள் இந்த உலகிற்கு உணர்த்தியுள்ளன.

 

ரஷ்யாவின் பதிலடி

யுக்ரேனின் ராணுவ வலிமையை அதிகரிக்க மேற்கத்திய நாடுகள் இந்த வாரம் நடவடிக்கை எடுத்த நிலையில், ரஷ்யா அதற்கு பதிலடி கொடுக்க முற்பட்டது.

ரஷ்யா-யுக்ரேன் போரின் 1000வது நாளான செவ்வாயன்று, புதின் ரஷ்யாவின் அணுசக்தி கொள்கையில் மாற்றங்களைச் செய்தார்.

அந்த அணுசக்தி கொள்கை, ரஷ்யா அணு ஆயுதத்தைப் எப்போது பயன்படுத்தலாம் என்று முடிவு செய்வதற்கான வரையறைகளை அளிக்கிறது.

அதன்படி, அணுசக்தி இல்லாத நாட்டின் தாக்குதலின் பின்னணியில், அணுசக்தி கொண்ட நாடு இருந்தால் அது, ரஷ்யா மீதான கூட்டுத் தாக்குதலாகக் கருதப்படும் என்று அந்த கொள்கை கூறுகிறது.

அடுத்த நடவடிக்கையாக, யுக்ரேனின் நீப்ரோ நகரை தாக்க ரஷ்யா ஒரு புதிய வகை ஏவுகணையை பயன்படுத்தியது. அதன் பெயர் “ஓரேஷ்னிக்” (Oreshnik). இது ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்றும், “இந்த ஏவுகணையை எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பாலும் இடைமறிக்க முடியாது” என்றும் புதின் கூறினார்.

இந்த போரை கவனித்து வரும் பெரும்பாலான வல்லுநர்களின் கருத்துப்படி, இந்த புதிய ஏவுகணை பற்றிய அறிவிப்பு ஒரு எச்சரிக்கையை அனுப்பும் நோக்கிலானது. அதாவது, ரஷ்யா விரும்பினால் இந்த புதிய ரக ஏவுகணையில் அணு ஆயுதத்தை பொருத்தி ஏவ முடியும்.

 

ரஷ்யாவின் மிரட்டலுக்கு அஞ்சாமல் மேற்கு நாடுகள் யுக்ரேனை ஆதரிப்பது ஏன்?

நீப்ரோ நகரில் “ஓரேஷ்னிக்” ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு ஆயிரக்கணக்கானோர் வசிப்பிடங்களை விட்டு வெளியேறினர்

ரஷ்யா தரப்பில் இருந்து வரும் இதுபோன்ற எச்சரிக்கைகள், ஒரு காலத்தில் மேற்குலகில் தீவிர கவலையை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது அப்படி இல்லை.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா-யுக்ரேன் மோதல் தொடங்கியதிலிருந்து, புதின் அடிக்கடி அணுசக்தி ஆயுதங்களை தொடர்பான “சிவப்பு கோடுகளை” வரையறுத்து வந்துள்ளார். அவற்றை மேற்கு நாடுகள் மீண்டும் மீண்டும் கடக்கின்றன.

மேற்கத்திய தலைவர்கள் ரஷ்யாவின் அணுசக்தி அச்சுறுத்தல்களை பெரிதாக எடுத்து கொள்ளாததற்கு மற்றுமொரு முக்கிய காரணம் `சீனா’.

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தை குறைக்கும் முயற்சிகளில் ரஷ்யாவிற்கு சீனா ஒரு முக்கிய பங்காளியாக மாறியுள்ளது.

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால் சீனாவின் எதிர்வினை ரஷ்யாவுக்கு பாதகமாக இருக்கும் என மேற்கு நாடுகள் நம்புகின்றன. இதனால் அணுஆயுதத்தைபயன்படுத்துவது தொடர்பாக புதின் விடுக்கும் அச்சுறுத்தல்கள் நிஜமாக சீனா அனுமதிக்காது என மேற்குலகம் நம்புகிறது.

 

உலகளாவிய மோதலா?

வியாழன் மாலை ஒரு தொலைக்காட்சி உரையில், ரஷ்ய அதிபர் புதின், “இந்த மோதல் உலகளாவிய தன்மையின் கூறுகளைப் பெற்றுள்ளது” என்று எச்சரித்தார்.

இந்த கூற்றை போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் எதிரொலித்தார். அவர் “உலகளாவிய மோதலின் அச்சுறுத்தல் மிகவும் தீவிரமானது மற்றும் உண்மையானது” என்று கூறியுள்ளார்.

ரஷ்யா – யுக்ரேன் மோதலில், அமெரிக்காவும் பிரிட்டனும் தற்போது முன்னெப்போதையும் விட தீவிரமாக பங்கெடுத்துள்ளன. அதே நேரத்தில் ரஷ்யாவுடன் இணைந்து போரிட வட கொரிய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பது, மற்றொரு அணுசக்தி நாடு இந்த மோதலுக்குள் நுழைவதை உறுதிப்படுத்துகிறது.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் வியாழனன்று, “அணு ஆயுதப் போருக்கான அச்சுறுத்தல் முன்னெப்போதும் இந்தளவுக்கு அதிகமாக இருந்ததில்லை” என்று கூறினார். வடகொரியாவுக்கு எதிரான கொள்கைக்காக அவர் அமெரிக்காவை சாடினார்.

ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் வடகொரியப் படைகள் ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்டு வருவதாக நம்பப்படுகிறது

வெளியேறும் பைடன், ஆட்சிக்கு வரும் டிரம்ப்

அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப், வரும் ஜனவரி 20 அன்று அதிகாரப்பூர்வமாக வெள்ளை மாளிகைக்குள் அடி எடுத்து வைக்கிறார்.

பரப்புரையின் போது, ​​”24 மணி நேரத்திற்குள்” ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதாக டிரம்ப் சபதம் செய்தார்.

துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜேடி வான்ஸ் போன்ற அவருக்கு நெருக்கமானவர்கள், டிரம்ப் என்ன செய்வார் என்பதை பற்றி மேலோட்டமாக சுட்டிக்காட்டியுள்ளனர். யுக்ரேன், டான்பாஸ் மற்றும் கிரைமியா பிரதேசங்களை ரஷ்யாவுக்கு விட்டுக்கொடுத்து, சமரசம் செய்ய வேண்டி இருக்கலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது பைடன் நிர்வாகத்தின் நிலைப்பாட்டிற்கு எதிரானது. பைடன் நிர்வாகத்தின் தற்போதைய துரிதமான செயல்பாடுகள், டிரம்ப் பதவிக்கு வருவதற்கு முன்பு முடிந்தவரை யுக்ரேனுக்கு அதிக உதவிகளை வழங்கும் அதன் விருப்பத்தை சுட்டிக்காட்டுகின்றன.

டொனால்ட் டிரம்ப் பதவிக்கு வருவதால் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று ஜெலென்ஸ்கி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்

ரஷ்யா – யுக்ரேன் போர் புது வடிவம் பெறுகிறதா?

யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி , 2025-ஆம் ஆண்டில் ராஜதந்திர வழிமுறைகள் மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர யுக்ரேன் விரும்புவதாக அண்மையில் கூறினார்.

யுக்ரேனின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா இந்த வாரம் பிபிசியிடம் பேசுகையில், ” டிரம்பின் ஒரே உந்துதல் அவரது சக்தி மற்றும் அதிகாரத்தை நிரூபிப்பதாக இருக்கும். முந்தைய அதிபர் பைடன் சரி செய்யத் தவறிய பிரச்னைகளை அவர் சரிசெய்யும் திறனை காட்டவும் நினைப்பார்” என்றார்.

“ஆப்கானிஸ்தானில் கிடைத்த தோல்வியால் பைடன் நிர்வாகத்தின் வெளியுறவுக் கொள்கை பற்றிய பிம்பத்தை பாதித்தது. நீங்கள் கூறுவது போன்ற நிலையை டிரம்ப் ஏற்றுக்கொண்டால், யுக்ரேன் அவரது ஆட்சிக்கான ஆப்கானிஸ்தானாக மாறும், அதேபோன்ற மோசமான விளைவுகளுடன்..” என்று குலேபா கூறினார்.

“ஆகவே, அவர் அதை செய்யமாட்டார் என்று நம்புகிறேன்.” என்று அவர் தெரிவித்தார்.

இந்த வார நிகழ்வுகள், போர் கட்டுப்பாட்டை மீறி எல்லை கடந்து போவதற்கான தொடக்கமாக இல்லாமல் போகலாம். அதே சமயம் யுக்ரேன் – ரஷ்யா மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான எதிர்கால பேச்சுவார்த்தைகள் மற்றும் நிலைப்பாட்டை முன்னெடுக்கும் ஒரு தொடக்கமாக அமையலாம்.

 

Share.
Leave A Reply