நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பிலும் சரி, இலங்கை தமிழரசுக் கட்சி என்ற அடிப்படையிலும் சரி, பரபரப்பாக பார்க்கப்பட்டது, சிறிதரன்-சுமந்திரனுக்கு இடையிலான போட்டிதான்.
அவர்களுக்கு இடையில், சில மாதங்களுக்கு முன்னர், கட்சியின் தலைமைப் பதவி தொடர்பான போட்டி உருவாகியிருந்தது. கட்சியின் தலைமைப் பதவிக்கு இடம்பெற்ற வாக்கெடுப்பில் சிறிதரன் வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால், நிர்வாக தெரிவு தொடர்பாக எழுந்த சிக்கல்கள் காரணமாக, அந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது, இப்போது கட்சியின் தலைவர் யார் என்ற கேள்விக்கு யாராலும் சரியான பதிலைக் கொடுக்க முடியாது.
கட்சித் தலைவர் தெரிவுக்குப் பின்னர் இரண்டு பேருக்கும் இடையில் தொடர்ச்சியான முரண்பாடுகளும் ,போட்டிகளும் நிலவி வந்தன.
2020 பாராளுமன்றத் தேர்தலின் போது, சுமந்திரனும் சிறிதரனும் இணைந்து பிரசாரம் செய்திருந்தார்கள். சுமந்திரனுக்கு ஆதரவாக சிறிதரன் வாக்கு சேகரித்திருந்தார்.
ஆனால் இந்த முறை நிலைமை அவ்வாறு இருக்கவில்லை.
ஒரு உறைக்குள் ஒரு வாள் தான் இருக்க முடியும் என்ற அடிப்படையில், போட்டி மிக தீவிரமாக இருந்தது. ஒருவரை வீழ்த்தி மற்றவர் வெல்வது என்பதில் தெளிவாக இருந்தார்கள்.
சிறிதரனை போட்டியிடுவதில் இருந்து தடுப்பதற்கு, சுமந்திரன் ஆரம்பத்திலேயே முயற்சித்தார். அவர் வேட்பாளராவதைத் தடுப்பதற்கு முயன்றார். அது முடியாத போது, அவரை தோற்கடிப்பதற்கான வியூகங்களை வகுத்திருந்தார்.
அவ்வாறு வகுக்கப்பட்ட வியூகம் தான் ஒன்றுக்கு 7 என்ற அடிப்படையிலானது.
அதாவது, தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் பட்டியலில் பெயரிடப்பட்ட ஒன்பது பேரில், இருவர் மாத்திரம் தனித்து நிற்கக் கூடிய வகையில், அதிலும் சிறிதரனை தனிமைப்படுத்தும் வகையில், அந்த வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சி இதனை மறுத்தாலும் நிராகரித்தாலும் அது தான் உண்மை. இது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
சிறிதரனுடன் கூட்டு சேர முன்வராதவர்கள் அல்லது கூட்டு சேர சாத்தியமற்றவர்கள் அல்லது சுமந்திரனுக்கு ஆதரவானவர்களாகவே, அந்த எட்டு பேரும் இருந்தார்கள்.
தேர்தலில் ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்படுவதற்கு, கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள் மாத்திரம் போதாது. கட்சிக்கு கிடைக்கும் வாக்குகள், எத்தனை ஆசனங்கள் என்பதையே தீர்மானிக்கும்.
கட்சியில் அதிகபட்ச விருப்பு வாக்குகளை பெறுபவர் தான் வெற்றி பெறுபவராக இருப்பார். கடந்த காலங்களில், சிறிதரன் அதிகபட்ச விருப்பு வாக்குகளை பெற்று வந்திருக்கிறார். இது அவரை தோற்கடிக்க திட்டமிட்டவர்களுக்கு ஒரு சவாலான விடயமாக இருந்தது.
கிளிநொச்சியை மையப்படுத்தி சிறிதரன் உருவாக்கியிருக்கின்ற ஆதரவுத் தளம் தமிழரசுக் கட்சிக்கு பலமாக இருக்கிறது.
அப்படியிருந்தும், சிறிதரனை அந்த ஆதரவு களத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு, அந்தக் கட்சியிலேயே முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது துரதிஷ்டம்.
வேட்பாளர் பட்டியலில், சிறிதரன் உள்ளடக்கப்பட்டதற்கு காரணம், கட்சியின் நிலைமை மோசமாக இருந்தமை தான். கட்சி ஆசனங்களை பெற வேண்டுமானால், கிளிநொச்சியில் சிறிதரன், மூலம் பெறக் கூடிய வாக்குகள் அவசியமென உணரப்பட்டிருந்தது.
அதேவேளை சிறிதரனை தோற்கடிப்பதற்காக அவருக்கு வாக்குகளை சேகரித்துக் கொடுக்க வாய்ப்பு இல்லாதவர்கள் வேட்பாளர்கள் ஆக்கப்பட்டார்கள்.
இதன் மூலம் சிறிதரனுக்கு ஏனைய வேட்பாளர்களின் மூலம் கிடைக்கக் கூடிய வாக்குகள் தடுக்கப்பட்டன.
மற்றொரு பக்கம், சுமந்திரனுக்கு ஆதரவை சேகரித்துக் கொடுக்க கூடியவர்கள் உள்வாங்கப்பட்டதால், அவர் தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பியிருந்தார்.
ஆனால். அவர் எதிர்பார்த்தது போன்று தேர்தல் முடிவுகள் அமையவில்லை அவர் கட்சிக்கு மூன்று ஆசனங்களை எதிர்பார்த்திருந்தார். ஆனால், ஒன்றே ஒன்றுதான் கிடைத்தது.
இதனால் யாரோ ஒருவர் மட்டும் தான் தெரிவாக முடியும் என்ற நிலை ஏற்பட்டது. சுமந்திரனுக்கும் சிறிதரனுக்கும் இடையில், தெரிவுக்கான வாய்ப்பு 50 க்கு 50 ஆக சுருங்கியது.
அடுத்து விருப்பு வாக்குகள் எண்ணப்பட்ட போது, வழக்கம் போலவே சிறிதரன் முன்னிலையில் இருந்தார். கிளிநொச்சிச் தொகுதி வாக்காளர்கள் அவரை கைவிடவில்லை.
அங்கு, சுமார் 60 ஆயிரம் வாக்காளர்களில் 44 சதவீதம் பேர், அதாவது 23,293 வாக்காளர்கள் தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்திருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏனைய தொகுதிகள் அனைத்திலும் தமிழரசுக் கட்சி பின்னடைவு கண்டிருந்த நிலையில், கிளிநொச்சி தொகுதியின் வாக்குகள் தான், மோசமான பின்னடைவில் இருந்து காப்பாற்றியது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு சராசரியாக, 19.47 சதவீத வாக்குகள் கிடைத்த போதும், கிளிநொச்சி தொகுதியில் அதைவிட இரண்டு மடங்கிற்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன.
இது சிறிதரனால் கிடைத்த வாக்குகள்,அவருக்காக அளிக்கப்பட்ட வாக்குகள். கடந்த முறை சிறிதரனுக்கு கிடைத்த விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 35, 884.
அப்போது, யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகள் 112 ,967. அதாவது, கட்சிக்கு கிடைத்த வாக்குகளில், கிட்டத்தட்ட 31.76 சதவீதம் பேர் சிறிதரனுக்கு வாக்களித்திருந்தனர்.
இந்த முறை யாழ். மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக் 63,327 வாக்குகளை பெற்ற நிலையில், சிறிதரனுக்கு 32,833 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. இது 51.84 சதவீதமாகும்.
கடந்த முறையை விட சுமார் 3,000 வாக்குகள் குறைவாகவே சிறிதரனுக்கு கிடைத்திருக்கின்ற போதும், கட்சிக்கு கிடைத்த வாக்குகளுடன் ஒப்பீடு செய்யும் போது, அவர் தனது வாக்கு வாங்கியை சுமார் 20 சதவீதத்தினால் அதிகரித்திருக்கிறார்.
அதேபோல சுமந்திரனை பொறுத்தவரையில், கடந்த முறை 27,834 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். இது கட்சிக்கு கிடைத்த வாக்குகளில் சுமார் 24. 63 சதவீதமாகும்.
இந்த முறை அவருக்கு 15,039 விருப்பு வாக்குகளே கிடைத்திருக்கின்றன. அவர் சுமார் 12,000 க்கு அதிகமான வாக்குகளை இழந்திருக்கிறார்.
கட்சிக்கு இம்முறை கிடைத்த வாக்குகளுடன் ஒப்பீடு செய்யும்போது அவருக்கு, 23.74 சதவீத வாக்குகளே கிடைத்திருக்கின்றன.
கட்சிக்கு கிடைத்த வாக்குகளின் அடிப்படையில், கடந்த முறையை விட, இந்த முறை அவருக்கு சுமார் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளே குறைந்திருக்கின்றது,
கூட்டமைப்பாக இருந்த போது, பெற்ற வாக்குகளை விட, சதவீத ரீதியாக சிறிதரன் அதிக வாக்குகளை பெற முடிந்திருக்கிறது. அதேவேளை, சுமந்திரன் கணிசமான வாக்குகளை இழக்க நேரிட்டாலும், சதவீத ரீதியாக அது கணிசமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
சிறிதரன் தனது இலக்கத்தை மாத்திரம் முன்னிலைப்படுத்தி செய்த பிரசாரம் அவருக்கு வெற்றியை கொடுத்து இருக்கிறது.
தமிழரசுக் கட்சியின் வாக்குகள் அதிகரித்திருந்தால் இரண்டாவது ஆசன மூலம் சுமந்திரன் தெரிவாகியிருப்பார்.
தமிழரசுக் கட்சியின் வாக்குகள் குறிப்பிட்ட அளவை தாண்டாமல் இருந்தது, அவர்களுக்கு இரண்டாவது ஆசனத்தை கிடைக்காமல் தடுத்தது மாத்திரமன்றி, சுமந்திரனுக்கான வாய்ப்பையும் தட்டிப் பறித்திருக்கிறது.
சுமந்திரனை பொறுத்தவரையில் சிறிதரனை தனிமைப்படுத்தி வைத்திருப்பதன் மூலம், ஏனைய தான் உட்பட ஏழு பேரின் ஆதரவின் மூலமும் தன்னால் முதல் இடத்துக்கு வர முடியும் என்று நம்பியது அவருக்கு குழிபறித்திருக்கிறது.
அவர் தெரிவு செய்த வேட்பாளர்கள், தன்னை ஆதரிப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தினாரே தவிர, கட்சிக்காக வாக்குகளை திரட்ட கூடியவர்களாக தெரிவு செய்யவில்லை.
அவர் தெரிவு செய்த பெண் வேட்பாளர்களினாலோ, ஏனையவர்களாலோ சொந்தமாக, 5000 வாக்குகளைத் திரட்ட முடியாதவர்களாகவே இருந்தனர். இது சுமந்திரனுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு முக்கிய காரணம்.
இந்த தேர்தலில் வாக்கு ரீதியாக பலமானவர் யார் என்பது தெளிவாகி விட்டது. கடந்த காலங்களிலும் இந்த தெளிவு இருந்த போதும், ஒரு பெரும் போட்டிக்கு பின்னர் – பெரும் இழப்புகளுக்குப் பின்னர் இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தமிழரசுக் கட்சிக்குள் வரக்கூடிய தலைமைத்துவ போட்டி மீண்டும் இருவருக்கும் இடையிலான மோதலாக உருவெடுக்குமேயானால், ஒருவரை ஒருவர் விலக்கி வைக்கும் நிலைக்கு தள்ளப்படுமேயானால், தமிழரசுக் கட்சியின் வாக்குகள் இன்னும் மோசமாக பிளவுபட்டு சிதைவுறும் நிலையையே ஏற்படுத்தும்.
– கபில்-