வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசிய நலன் மீதான அக்கறை குறைந்து கொண்டே வருவதாக அவதானிகளது கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

தமிழர்களிடமுள்ள ஒற்றுமையில்லாமை அல்லது ஒற்றுமைப்படாமையினை சிங்களப் பேரினவாதம் தனது பிரித்தாளும் சூழ்ச்சிமூலம் வெளியில் கொண்டுவந்து பல விடயங்களை வரலாற்றில் சாதித்திருக்கிறது.

அதற்கு அவர்கள் சில சுயநல சிந்தனைகளைத் தூண்டிவிடுவது, நெருக்குதல்களை உருவாக்குவது, வரப்பிரசாதங்கள் என்ற அடிப்படையில் வெகுமதிகளை வழங்குதல் என பல வழிகளைப் பயன்படுத்திவந்தனர்.

இப்போதும் அதனையே செய்து வருகின்றனர். இவற்றுக்கு அடிமையாகும் தமிழர்களை என்னவென்று சொல்வது. அதற்கு வெறுமனே சிங்களவர்களின் அரசியலை மாத்திரம் காரணமாகச் சொல்லிவிட முடியாதது. குற்றஞ்சாட்டவும் முடியாது.

தனிப்பட்ட நலன்களுக்காகவும், தனிப்பட்ட வெற்றிகளுக்காகவும், வசதி, வாய்ப்புகளுக்காகவும் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுப் பயன்படுத்தும் ஒரு விரும்பத்தகாத அரசியல் செயற்பாடே நடைபெற்றுவருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவந்தன. அதனாலும் தமிழ்த் தேசிய நலனில் மக்களுக்கிருந்த அக்கறை குறைந்து வந்திருக்கிறது.

மட்டக்களப்பில் சனிக்கிழமை நடைபெற்ற இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வில் கருத்துத் தெரிவித்துள்ள அக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன்,

தமிழ்த் தேசிய பரப்பில் கொலை செய்யாதவர்கள், கடத்தல் செய்யாதவர்கள், காட்டிக் கொடுக்காதவர்கள், இலங்கை தமிழரசுக் கட்சி சின்னத்தில் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

ஏனைய கட்சிகளில் இவ்வாறான தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

அவரது கருத்து தேர்தல் மேடைகளில் மக்களை தம்முடைய எதிர்காலம் குறித்துச் சிந்திக்கச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லையானாலும், தன்னுடைய கட்சியின் இயலாமையினால்கூட இவ்வாறான கருத்து வெளிப்பட்டிருக்கலாம் என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழர்களின் தாய்க் கட்சி என்று சொல்லப்படும் கட்சியின் ஒரு மாவட்டத்துக்கான தலைமை வேட்பாளருடைய கருத்துக்கள் தமிழ் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக இருக்கவேண்டும் என்பது முக்கியமானது.

தமிழ்த் தேசிய அரசியல் என்பது வெறுமனே சீராகவும் எந்தவொரு விமர்சனங்களுக்கும், விலகல்கள், பிளவுகள், பிரிதல்கள், காட்டிக்கொடுப்புகள், பிரித்தெடுத்தல்கள், கட்சி மாறல்களுக்கும் உட்படாத ஒன்றல்ல. தம்முடைய வெற்றிவாய்ப்பினை அதிகரித்துக் கொள்வதற்காக சேறு பூசும் அரசியல் தமிழ்த் தேசியத்தில் மாத்திரமல்ல, பெரும்பான்மைக் கட்சிகளிலும் காணப்படுகின்ற ஒன்றே.

இருந்தாலும், இவ்வாறான கருத்துக்கள் வளர்ந்து வருகின்ற நாகரீக அரசியலுக்கு ஏற்றதல்ல. இவ்வாறான கருத்துக்கள் தமிழர் அரசியலில் அக்கறை கொண்டவை என்று கூறவும் முடியாது.

இம்முறை, வடக்கு கிழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈரோஸ் ஜனநாயக முன்னணி, ஈ.பி.டி.பி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய கட்சிகள் பிரதானமாகப் போட்டியிடுகின்றன.

இக் கட்சிகளில் போட்டியிடுபவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் தமிழ் மக்களுடைய நலன் சார்ந்தே அரசியலை நடத்துகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தாமாக வெளியேறிய இலங்கைத் தமிழரசுக் கட்சியானது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியாக உள்ள கட்சிகளுடன் எந்தவிதத்திலும் உடன்பாட்டுக்கு வராது வடக்குக் கிழக்கில் திருகோணமலை தவிர ஏனைய தேர்தல் மாவட்டங்களில் தனித்தே போட்டியிடுகின்றது.

இறுதி நேரத்தில் அம்பாறையில் இணைந்து போட்டியிடுதல் என்ற நிலைப்பாட்டினை ஏற்றுக் கொள்ளாது தனித்தே வேட்பு மனுவினைச் சமர்ப்பித்திருக்கின்றனர்.

ஒத்துவராத தன்மையும், விட்டுக்கொடுப்பில்லா செயற்பாடுகளும், மேட்டுக்குடி முன்னெடுப்புகளும், மேலாதிக்க மனோபாவமுமே நீண்டகாலமாகத் தமிழர்களுடைய விடுதலைப்போராட்டம் இழுத்தடிக்கப்பட்டமைக்கும் வீணேயானதற்குமான காரணம் என்பதனை இதுவரையில் உணர்ந்து கொள்ளாதவர்களாகத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன.

சிவில் அமைப்புகள், பொது அமைப்புகள் என பலராலுரும் பலவாறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் ஒருமிப்பு ஏற்படவில்லை என்பது கவலையானதே.

தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்விற்காகத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒன்றிணைய வேண்டும் என்பது நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலல்ல,

நீண்டகாலமாகக் கட்சிகளிடையே இருக்கின்ற பிளவுகள் காரணமாகத் தொடர்ச்சியாகவே முன்வைக்கப்பட்டு வருகின்ற கோரிக்கையாகும்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் அரச இனவாத அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின், நிலையான அரசியல் தீர்வொன்றே முடிவு.

அதற்கு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான தீர்வொன்றே திட்டவட்டமானதாக இருக்கும் என்பது நீண்டகாலமாக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஆனால், அதனை அடைவதற்கான வழிகளைக் கண்டடைவதிலேயே கால இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன. அதற்குச் சிங்களப் பேரினவாதம் மாத்திரமல்ல, தமிழர்களும் காரணமே.

இதனைத் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

இந்த நிலையில்தான் தனிப்பட்ட வாக்கு வங்கிகளை நிரப்புவதை மாத்திரமே நம்பிக் கொண்டிருக்கும் அரசியலிலிருந்து தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் வந்தாகவேண்டும். தமிழ்த் தேசியத்துக்கான வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கே முயற்சிக்கவேண்டும். இதனை ஏற்றுக் கொள்வதற்குத் தமிழ் அரசியல்வாதிகள் தயாரில்லையானாலும் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.

இந்த இடத்தில் மக்களை அரசியல் மயப்படுத்துவது, தமிழர்களின் நிலைப்பாடு சார் தெளிவுபடுத்தல்கள் கட்டாயமானது.

மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் புடம்போடப்படும் காலமாக ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஊடாக ஓரளவுக்கு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த படியெடுப்புடன் தொடர்வதாக இருக்கவேண்டியது கட்டாயமாகும்.

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் மக்களது அரசியல் நிலைப்பாடு சார் தெளிவுபடுத்தல்களுக்கானதாக அல்லாமல் குழப்பங்களை ஏற்படுத்துவதாக இருந்துவிடக்கூடாது என்பது மிகக் கவனகமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

தேர்தல்கள் விமர்சனங்களுக்கும், ஏச்சுக்களுக்கும், பேச்சுக்களுக்கும், அவதூறுப் பேச்சுக்களுக்கும் ஏதுவானதே. இருந்தாலும், அதனை மட்டுப்படுத்திக் கொள்வதும், விமர்சனங்கள் அவதூறுகளுக்கு விளக்கம் கொடுக்கவேண்டியது அதனை எதிர்கொள்பவருடைய கடமையாகும். இல்லையானால், அவற்றை ஏற்றுக்கொண்டதற்கு ஒப்பாகும்.

ஜனாதிபதித் தேர்தலும் அத் தேர்தல் தொடர்பான பரப்புரைகளும் தற்போதைய காலத்தில் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் பலவாறான ஆராய்வுகளுக்கு உட்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் அலையானது பாராளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தாது என்பதே யதார்த்தமாகும்.

எது எவ்வாறானாலும், ஒவ்வொரு தமிழ்க் கட்சிகளும் தம்முடைய தேர்தல் விஞ்ஞாபனங்களை மிகத் தெளிவாகவும் தமிழ்த் தேசிய நலன், தமிழ்த் தேசிய நிலைப்பாடு, இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயப்பரப்புகளை உள்ளடக்கியதாக இருந்தாகவேண்டும். அதனைவிடவும் அபிவிருத்தியும் இவ்விஞ்ஞாபனங்களில் ஆதிக்கம் செலுத்தும்.

2009இல் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப்போன தமிழர்களின் ஆயுத விடுதலைப்போராட்டம் அதன் பின்னரான இன அழிப்புக்கெதிரான நடவடிக்கைகளைப் பெரும்பான்மை அரசாங்கத்தின் அணுகுமுறைகளில் உள்வாங்கப்பட்ட செயற்பாடுகளால் வீணாகியே போனது. அதற்குத் தமிழ்த் தேசிய நலன் மீதான அக்கறையின்மையின் குறைபாடேயாகும்.

தமிழர்களுடைய நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்னுரிமைக்குட்படுத்துனை விடுத்து எல்லோரும் பூசலையும் மெழுகலையும் செய்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு எப்போது கிடைக்கும் என்பதே தெரியாமல் நகர்ந்து கொண்டிருப்பதில் எந்தப்பயனுமில்லை என்பதனை தமிழ்த் தேசியத்துக்கான அரசியலை மேற்கொண்டுவரும் அரசியல் கட்சிகளும் அதன் அரசியல்வாதிகளும் உணர்ந்து கொள்ளவேண்டும்.

தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் கண்டு கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள் வீணேயான நிலையில், மீண்டும் மீண்டும் போராட்டங்களையும் முயற்சிகளையும் மாத்திரம் ஒருமிப்பு, ஒற்றுமை இல்லாது மேற்கொள்வதில் பயனில்லை என்பதனை உணர்ந்து தமிழ் மக்களிற்கான அரசியலை மேற்கொள்வதற்கான ஒற்றுமைப்படுதலை இல்லாமலாக்கிக் கொண்டிருக்கின்ற நிலைமையினை மாற்றத்துக்குட்படுத்துதல் அவசியமாகின்றது.

அந்தவகையில், இம்முறை நடைபெறுகின்ற தேர்தலானது, தமிழ்த் தேசிய நலனின் மீது தமிழ்த் தேசியக் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் வழிப்படுத்துவதாகவும், தமிழ்த் தேசிய நலனின் முக்கியத்துவத்தினையும் உணர்த்துவதாகவும் அமைந்திருத்தலே சிறப்பு. அது தாய்க் கட்சி, தந்தைக் கட்சி என்பதற்கப்பால் எதிர்காலத்திலும் தமிழ்த் தேசிய நலனை முதன்மைப்படுத்துவதாகவும் இருத்தல் வேண்டும்.

10.14.2024

-லக்ஸ்மன்-

Share.
Leave A Reply