11 வயது சிறுமியை கடும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு வயதான பிள்ளையின் 50 வயதான தந்தைக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, 08 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது திங்கட்கிழமை (25) தீர்ப்பளித்துள்ளார்.

வெசாக் காலத்தில் வெசாக் தோரணங்களைபார்க்க பெற்றோருடன் வந்த 11 வயது சிறுமிக்கு வெசாக் கூடு அமைத்துத் தருவதாகக் கூறிய, அவரை அந்த தோரணங்கள் இருந்த கூடாரத்துக்குள் அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

2015 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு நாள், கொழும்பில் 11 வயதான சிறுமியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சட்டமா அதிபர் பிரதிவாதி மீது குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளதாக முடிவு செய்த நீதிபதி, குற்றவாளிக்கு 08 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தார். அத்துடன், 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் விதித்து உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 2 இலட்சம் ரூபாய் நட்டஈட்டை வழங்குமாறும் உத்தரவிட்டார்.

நட்டஈடு மற்றும் அபராதத்தை செலுத்தாமல் விட்டால் பிரதிவாதிக்கு மேலும் 18 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, தண்டனைகளை தனித்தனியாக அனுபவிக்க உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply