கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையினை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள் இன்று (26) வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.

இதன் காரணமாக மக்கள் போக்குவரத்துச்செய்யமுடியாத நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ட்ரக்டர் மூலமாக மக்களை கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பட்டிருப்பு-போரதீவு வீதி, மண்டூர் – வெல்லாவெளி வீதி, பழுகாமம் – களிகட்டு வீதி, வெல்லாவெளி – அம்பிளாந்துறை வீதி, போரதீவுப்பற்று பிரதேச செயலக வீதி என்பன வீதியில் நீரில் மூழ்கியுள்ளதை காண முடிகின்றது.

இதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் காரணமாக இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதி வெள்ளத்தினால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதனால் அங்குள்ள மக்களை பாதுகாப்பாக இயந்திர படகுகள் மூலம் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply