சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமா, உலக கேரம் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்ற உலக கேரம் போட்டிகளில், தனி நபர், இரட்டையர், குழு ஆட்டம் என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார் 17 வயது காசிமா.
ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை மெஹ்பூப் பாஷா, கேரம் மீது கொண்ட ஆர்வமே, காசிமாவின் உலக சாம்பியன் பயணத்துக்கு தூண்டுதலாக இருந்துள்ளது.
காசிமாவின் அண்ணன் அப்துல் ரஹ்மான் கேரம் விளையாட்டில் தேசிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளார். “அண்ணா, தேசிய சாம்பியன் ஆன போது அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது, அவருக்கு கிடைத்த கவனத்தைப் பார்த்த போது, எனக்கும் கேரம் ஆட வேண்டும், சாம்பியன் ஆக வேண்டும் என்ற ஆசை வந்தது” என்கிறார் காசிமா.
காசிமாவின் அக்கா அசீனாவும் சிறு வயதில் கேரம் மீது ஆர்வம் கொண்டிருந்தார். “அப்போது, எனது பாட்டி என்னை விளையாட அனுமதிக்கவில்லை. எனது தம்பி வெற்றி பெற்றவுடன் காசிமாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. என் தந்தையின் கனவு நிஜமானது என்று மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்று கூறும் அவர், வீட்டில் உள்ள முகக் கண்ணாடியில் “I am a world champion” என்று நான்கு ஆண்டுகளுக்கு முன் காசிமா எழுதி வைத்திருந்ததை காண்பிக்கிறார்.
உலக சாம்பியன் ஆவேன் என்ற நம்பிக்கை இருந்ததா என்று காசிமாவிடம் கேட்டால், “கண்டிப்பாக இருந்தது, அதனால்தான் வெல்ல முடிந்தது. உலக சாம்பியன் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான் விளையாடினேன்” என்றார்.
காசிமாவின் மூத்த சகோதரி அசீனா
பதற்றமான இறுதி ஆட்டம்
உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் பதற்றமான தருணங்களை விவரித்தார் காசிமா. “நான் ஆட தொடங்கிய போது எதிரில் இருப்பவர் 19 புள்ளிகள், நான் பூஜ்ஜியத்தில் இருந்தேன். அவர் மேலும் ஆறு புள்ளிகள் எடுத்து விட்டால் உலக சாம்பியன் ஆகிவிடுவார்.
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நான் என்னை ஊக்கப்படுத்தினேன். பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் 24 புள்ளிகள் பெற்றிருந்தோம்.
அடுத்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் உலக சாம்பியன். மீண்டும் இந்த இடத்துக்கு வர முடியுமா என்று தெரியாதே, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று அழுத்தம் இருந்தது. பிறகு, எல்லா எண்ணங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, என்னால் முடிந்ததை சிறப்பாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன், வெற்றி பெற்றேன்” என்றார்.
அவருடன் கேரம் பயிற்சிப் பெற்று வரும் ஹர்ஷ்வர்தனி, “காசிமா மிகவும் தன்னம்பிக்கைக் கொண்டவர்” என்று கூறினார்.
“கடின உழைப்பாளி, மிகுந்த கவனத்துடன் ஆடுவார், இந்த காயின் விழுமா விழாதா என்ற சந்தேகமே அவருக்கு இருக்காது, விழும் என்று முடிவு செய்துதான் ஆடுவார்” என்கிறார்.
ஹர்ஷ்வர்தனி, காசிமாவின் தோழி
உலகக்கோப்பையை கொண்டு சமூகப் பார்வையை மாற்றியவர்
பெண் பிள்ளைகள் ஏன் வெளியே வர வேண்டும், ஏன் இப்படி உடை அணிய வேண்டும் என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு தனது உலகக் கோப்பையின் மூலம் பதிலளித்துள்ளார் காசிமா. “நிறைய பேசினார்கள், பெண் பிள்ளைக்கு எதற்கு இதெல்லாம், ஏன் எல்லா இடங்களுக்கும் செல்ல வேண்டும்.
என்னுடைய ஆட்டம் சில காலம்தான் என்றெல்லாம் கூறினார்கள். இந்தப் பேச்சுகள் என் மனதை பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டேன். எனது பதிலடியை முழுக்கமுழுக்க விளையாட்டின் மூலமே கொடுத்தேன். இப்போது உலகக் கோப்பை கிடைத்த உடன், அப்படி பேசியவர்களே இன்று வாழ்த்து தெரிவிக்கிறார்கள்” என்றார்.
ஆட்டோ ஓட்டுநரான தந்தையின் வருமானத்தை வைத்துக் கொண்டு, போட்டிகளுக்காக வெளியூர் செல்வது உள்ளிட்ட எல்லா தேவைகளையும் சமாளிப்பது காசிமாவின் குடும்பத்துக்கு சவாலாகவே இருந்துள்ளது. உலகக் கோப்பைப் போட்டிக்கு செல்வதற்கு முன் இரண்டு முறை தனது விசா நிராகரிக்கப்பட்டதாக காசிமா கூறுகிறார்.
விசா நேர்காணலுக்கு செல்வதற்கு, பிறரிடம் கடன் வாங்க வேண்டியிருந்தது என்கிறார் அவர். “திடீரென மும்பையில் நேர்காணலுக்கு செல்ல வேண்டியிருந்தது. நேரம் இல்லாததால் விமானத்தில் செல்ல வேண்டியிருந்தது. நான் வெற்றி பெறவில்லை என்றால் இந்த செலவுகள் எல்லாம் வீணாகியிருக்கும்” என்கிறார்.
உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு விளையாட்டுத்துறை காசிமாவுக்கு நிதி உதவி வழங்கியிருந்தது.
காசிமா வென்றெடுத்த கோப்பைகள்
தேசிய சாம்பியன்களை உருவாக்கிய கிளப்
ஆறு வயது முதல் கேரம் ஆடும் காசிமாவுக்கு அவரது தந்தை மெஹ்பூப் பாஷாவே ஆரம்ப கால பயிற்சியாளர்.
“என் அப்பா கேரம் விளையாடுவார். அவரைப் பார்த்து, நான் விளையாட ஆரம்பித்தேன். அப்போது எல்லாம், தெருக்களில் நின்று கொண்டு தண்ணீர் ட்ரம்களின் மீது போர்டு வைத்து ஆடுவோம்” என்று கடந்த காலத்தை நினைவு கூர்கிறார் அவர் மெஹ்பூப் பாஷா.
சென்னையின் தென் பகுதிகளை விட வடக்கு பகுதிகளில் கேரம் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. “இந்தப் பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளிகள் மற்றும் மீனவர்கள்.
கிரிக்கெட் போன்ற விளையாட்டை ஆட பெரிய மைதானம் தேவை. இட நெருக்கடியான வட சென்னையில் ஒரு தண்ணீர் ட்ரம் இருந்தால் போது, தெருவோரத்திலேயே கேரம் ஆடலாம். இந்தப் பகுதி மக்களின் எளிதான பொழுதுபோக்காக இது இருந்தது” என்கிறார் பாஷா.
கடந்த 14 ஆண்டுகளாக தான் வசிக்கும் அதே பகுதியில் ‘ செரியன் நகர் கோச்சிங் சென்டர்’ என்ற பெயரில் அவர் கேரம் கிளப் நடத்தி வருகிறார். “முதலில் ஓலைக்கொட்டகையாக இருந்தது” என்று சுமார் 200 சதுர அடியில் அமைந்துள்ள தனது கிளப் குறித்து கூறுகிறார்.
“பிறகு ஷீட் போட்டு நடத்தி வருகிறோம், இப்போதும் மழை பெய்தால் தண்ணீர் ஒழுகும். ஒரு தரமான போர்டு மும்பையிலிருந்து பெறுவதற்கு ரூ.10 ஆயிரம் செல்வாகும். இங்கு ஆறு போர்டுகள் உள்ளன. இரண்டு மட்டுமே புதிது. இங்கு கழிவறை வசதி இல்லாததால், பெண் பிள்ளைகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.” என்கிறார்.
காசிமாவின் தந்தை மெஹ்பூப் பாஷா
அந்த கேரம் கிளப்பிலிருந்து 14 தேசிய சாம்பியன்கள் உருவாகியிருப்பதாக மெஹ்பூப் பாஷா பெருமிதம் கொள்கிறார். “மாவட்ட அளவில் 16 இடங்களுக்குள் இருப்பவர்களுக்கே போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
அதில் எப்படியும் ஆறு அல்லது ஏழு பேர் எங்கள் கிளப் பிள்ளைகளாக இருப்பார்கள். அதேபோன்று மூன்று அல்லது நான்கு பேர் மாநில அளவில் ரேக்கிங் பெற்றவர்களாக இருப்பார்கள்.” என்கிறார் அவர்.
உலக அளவிலான காசிமாவின் வெற்றி, அந்த கிளப்பின் அடிப்படை வசதிகளையும், சர்வதேச போட்டிகளுக்கு தேவையான பயிற்சிகளையும் வழங்க உதவிடும் என்று பாஷா நம்புகிறார்.
–