பாராளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நிகழ்த்திய கொள்கைப் பிரகடன உரை முக்கியமான பல விடயங்களைத் தொட்டுச் சென்றிருந்தது.

ஆனால், இன நெருக்கடி தொடா்பாக ஒரு சொல் கூட அதில் இடம்பெறவில்லை. இது பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றது. தமிழரசுக் கட்சி இது தொடா்பாக தமது கரிசனையை உடனடியாகவே வெளிப்படுத்தியது. இன நெருக்கடியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எவ்வாறு கையாளப் போகின்றது என்ற கேள்வியையும் இது எழுப்பியிருக்கின்றது.

தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்திருக்கும் நிலையில், முதலாவது பாராளுமன்றக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது. இரண்டு மாதங்களுக்கு முன்னா் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசநாயக்க தமது அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை இதன்போது நிகழ்த்தினார்.

மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத் தொடா் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஜனாதிபதி அநுரவும் பல விடயங்களில் முன்மாதிரியாக நடந்துகொண்டார். பொருளாதார முன்னேற்றம் உட்பட பல விடயங்கள் தொடா்பில் அவரது உரையில் காணப்பட்ட விடயங்கள் வரவேற்பைப் பெற்றது.

பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி நிகழ்த்தும் அக்கிராசன உரை முக்கியத்துவம் பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

குறிப்பாக அது அரசின் கொள்கை விளக்கமாக – அடுத்து வரப்போகும் வருடங்களில் அது பயணம் செய்யப்போகும் பாதை எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை உணா்த்துவதாகவே அந்த உரை அமைந்திருக்கும்.

இன நெருக்கடியை அரசு எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை வெளிப்படுத்தக்கூடிய சமிஞ்ஞைகள் எதனையாவது ஜனாதிபதி வெளிப்படுத்துவாரா என அவரது உரையை நுணுக்கமாக அவதானித்துக் கொண்டிருந்தவா்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

ஜனாதிபதி தன்னுடைய தோ்தல் விஞ்ஞானத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடா்பாகவும், அதன் மூலமாக இன நெருக்கடிக்கான தீா்வு முயற்சிகளை முன்னெடுப்பது என்பதையிட்டும் யோசனைகளை முன்வைத்திருந்தார்.

ஆனால், தனது கொள்கை விளக்க உரையில் அவற்றை தவிர்த்தார். ஜனாதிபதியின் உரையைத் தொடா்ந்து பாராளுமன்றத்தில் வைத்தே தமிழ்த் தரப்பினா் இது தொடா்பாக கேள்விகளை எழுப்பியிருந்தார்கள். தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் முதலாவது கூட்டத்திலும் இது தொடா்பாக ஆராயப்பட்டிருக்கின்றது.

கலாநிதி அகிலன் கதிர்காமா்

இது குறித்து கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளா் கலாநிதி அகிலன் கதிர்காமா், “பொதுத் தோ்தலில் அதிகளவுக்கு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவா்கள் என்ற முறையில், அரசியல் தீா்வு தொடா்பில் தமிழ் மக்களிடம் பலத்த எதி ர்பார்ப்பு உள்ளது” என்றும், “அதற்காக பாரிய முயற்சிகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும் என்று அவா்கள் எதிர்பார்க்கின்றார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

“இது ஜனாதிபதியின் முதலாவது கொள்கைப் பிரகடன உரை. இதில் அனைத்து விடயங்களையும் அவா் வெளிப்படுத்துவார். என்று எதிர்பார்க்க முடியாது” என்றும் குறிப்பிடும் அகிலன் கதிர்காமா், “தேசிய மக்கள் சக்தியின் தோ்தல் விஞ்ஞானத்தில் இன நெருக்கடிக்கான தீா்வு தொடா்பில் சில யோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றது.

அரசியல் தீா்வு நோக்கிய முன்னேற்றம் இல்லை என்றால், இப்போது அந்தக் கட்சி தமிழ் மக்களிடம் பெற்றுள்ள ஆதரவை எதிர்காலத்தில் இழக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்றும் எச்சரிக்கின்றார்.

தமிழ் மக்கள் குறிப்பாக வடபகுதி மக்கள் தேசிய மக்கள் சக்திக்குப் பெருவாரியாக ஆதரவை வழங்கியது, வெறுமனே பொருளாதார முன்னேற்றத்துக்காக அல்ல.

அரசியல் தீா்வை நோக்கி அவா்கள் செயலளவில் முன்னேற்றத்தைக் காட்டுவார்கள் என்பதும் தமிழ் மக்களுடைய எதி ர்பா ர்ப்பு. அதில் முன்னேற்றத்தை அரசாங்கம் காண்பிக்காவிட்டால் அகிலன் கதிர்காமா் குறிப்பிடுவதைப் போல, தமிழ் மக்களிடம் தற்போதுள்ள ஆதரவை அவா்களால் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போகும் என்பதும் உண்மைதான்.

கலாநிதி கதிர்காமா் மற்றொரு விடயத்தையும் சுட்டிக்காட்டுகின்றார். “எந்தவொரு அரசாங்கமும் பதவிக்கு வந்தால் அது எவ்வாறு செல்லப்போகின்றது என்பதை அறிந்துகொள்வதற்கு 100 நாள்கள் தேவை.

ஜனாதிபதி ஏற்கனவே சொல்லியிருப்பதைப் போல அவா்களுடைய உடனடிக் கவனத்துக்குரிய விடயமாக வரவு செலவுத் திட்டம் இருக்கும். அதனைத் தொடா்ந்து இன நெருக்கடி, புதிய அரசியலமைப்கை உருவாக்குதல் போன்ற விடயங்களில் அவா்கள் கவனத்தைச் செலுத்தலாம்” என்றும் கதிா்காமா் குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதியின் உரை இடம்பெற்ற அதே தினத்தில் இலங்கைக்கான இந்தியத் துாதுவா் சந்தோஷ் ஜாவை சந்தித்த தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழு, இனநெருக்கடி விடயத்தில் ஜனாதிபதியின் மௌனம் தொடா்பாகவே முக்கியமாகப் பேசியிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் புதிய பாராளுமன்றக் குழுவுக்கும் இந்தியத் துாதுவருக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு இது என்பது கவனிக்கத்தக்கது.

“பாராளுமன்றத்தின் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய கொள்கை விளக்க உரையில் இனப்பிரச்னைக்கான தீர்வு விடயங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை” என்று தெரிவித்த தமிழரசுக் கட்சி, அத்துடன் 13ஆவது திருத்தம் அமுலாக்கல் குறித்து ஜனாதிபதி எதுவுமே தெரிவிக்காமை தமக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது என்றும், இது குறித்து இந்தியா அதிக கவனம் செலுத்த வேண்டும் வலியுறுத்தியிருக்கின்றது.

இவ்விடயத்தில் இந்தியத் துாதுவா் திட்டவட்டமான ஒரு பதிலைச் சொல்லவில்லை என்று தெரிவிக்கின்றார்.

எஸ்.சிறிநேசன் எம்.பி

தமிழரசுக் கட்சியின் புதிய ஊடகப் பேச்சாளா் எஸ்.சிறிநேசன் எம்.பி. “ஜனாதிபதி தன்னுடைய உரையில், தமது ஆட்சி இனவாதம், மதவாதத்தைக் கொண்டதாக இருக்காது என்று சொன்னாரே தவிர, தேசிய இனப் பிரச்சினை குறித்தோ, அதற்கான தீப்வைப் பற்றியோ எதனையும் குறிப்பிடவில்லை” என்று சுட்டிக்காட்டி சிறிநேசன், “இந்தியத் துாதுவரிடம் நடத்திய பேச்சுக்களின் போது இவை குறித்தும் சுட்டிக்காட்டினோம். ஆனால், இதற்கு பதிலளித்த இந்தியத் துாதுவா், திட்டவட்டமாக எதனையும் கூறவில்லை” என்றும் சிறிநேசன் தெரிவித்தார்.

“குறுகியகால நீண்டகாலப் பிரச்சினைகள் பிரச்சினைகள் உள்ளன. குறுகிய காலப் பிரச்சினைகளுக்குத் தீா்வைக்காண்பது இலகுவானதாக இருக்கும்” என்று இந்தியத் துாதுவருக்கு விளக்கிய சிறிநேசன், ”இனநெருக்கடிக்கு அரசியல் தீா்வு காண்பதற்காக இந்தியா எவ்வாறு செயற்படும் என்பதையிட்டு துாதுவா் எதனையும் தெரிவிக்கவில்லை” என்றும் கூறினார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எவ்வாறு கையாள்வது என்பதையிட்டு, இந்தியத் தரப்பு இன்னும் திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வரவில்லை என்பது தெரிகின்றது.

ஜனாதிபதித் தோ்தலுக்கு ஆறு மாதகாலத்துக்கு முன்னரே அநுரகுமார தலைமையிலான உயா் மட்டக்குழு ஒன்றை டில்லிக்கு அழைத்து பேச்சுக்களை இந்தியத் தரப்பு நடத்தியிருந்தாலும், தீா்வு முயற்சியில் தமது தலையீட்டை தேசிய மக்கள் சக்தி அரசு எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளும் என்பதில் டில்லிக்கு இன்னும் தயக்கம் இருக்கிறது.

தேசிய மக்கள் சக்தி என்று சொன்னாலும் அதன் தலைமைக் கட்சி ஜே.வி.பி.தான் என்பது இரகசியமானதல்ல.

ஜே.வி.பி. நடத்திய இரண்டு ஆயுதக் கிளா்ச்சிகளின் போதும் இந்தியா அதன் இலக்குகளில் பிரதானமாக இருந்தது. அதனால், அநுர அரசாங்கத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அவசரமான முடிவுகளுக்கு டில்லி வந்துவிடாது. தமிழரசுக் கட்சி கேட்டுள்ளது என்பதற்காக அதிரடியாக எதனையும் அநுர அரசுக்கு டில்லி சொல்லும் என்பதும் எதிபார்க்கக்கூடியதல்ல.

தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்த தமது அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கும் என்பதையிட்டு தேசிய மக்கள் சக்தி தமது விஞ்ஞானத்தில் ஏற்கனவே வெளிப்படுத்தியிருந்தது.

அதற்கான வரைபு ஒன்று 2015 – 2019 காலப் பகுதியில் தயாரிக்கப்பட்டது. அதனை முழுமைப்படுத்துவதாகவே தமது தீா்வு முயற்சி இருக்கும் என்ற யோசனையைத்தான் அவா்கள் தமது விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தியிருந்தார்கள். தேசிய மக்கள் சக்தியைப் பொறுத்தவரையில் முன்னைய அரசாங்கங்களை விட, தீா்வைக் காண்பதற்கான வாய்ப்பு அவா்களுக்கு அதிகமாக உள்ளது.

முதலாவது, அரசியலமைப்பில் தாம் விரும்பும் மாற்றத்தைச் செய்சதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவா்களிடம் உள்ளது.

இரண்டாவதாக, கடந்த காலங்களில் ஒரு தீவிர சிங்கள தேசியவாத அமைப்பாகவே ஜே.வி.பி. அடையாளம் காணப்பட்டிருந்தது. அதனால், அவா்களால் முன்னெடுக்கப்படக்கூடிய எந்தவொரு தீா்வையும் சிங்களக் கட்சிகள் இனவாத நோக்குடன் எதிர்க்க முடியாது.

மூன்றாவது, இனவாத நோக்குடன் செயற்பட்ட கட்சிகளும், தலைவா்களும் நடைபெற்ற பொதுத் தோ்தலில் படுதோல்வியடைந்திருக்கின்றார்கள். இவை அனைத்தும் தமிழா்களின் அபிலாஷைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு வாய்ப்பான ஒரு சூழ்நிலையில் அநுர அரசு இருப்பதை வெளிப்படுத்துகின்றது. மாற்றத்தை விரும்பு அநுர இதனைச் செய்வாரா?

Share.
Leave A Reply