- பழ வகைகளில் அத்திப்பழம் சிறந்த அளவு கால்சியம் சத்தை கொடுக்கும்.
- நோய் எதிர்ப்பு ஆற்றலை ஒரு உடலில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு பயறு வகை உணவுகள் அவசியம்.
பருவுடல் என்று எடுத்து கொண்டால் அதில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது நமது எலும்புகளுக்கு தான். நாம் சாதாரணமாக பேசுவது நமது உடலில் கால்சியம் குறைபாடு என்றால், உடனே நமது நினைவுக்கு வருவது எலும்புகள்.
கால்சியம் என்பது நம் எலும்புகளுக்கு பலத்தை கொடுப்பதாகும். நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் கெடாமல் இருக்க மற்றும் உடல் சோர்வை போக்கவும் கால்சியம் மிகவும் அவசியமாகும். இந்த கால்சியம் நமது உடலில் பலத்தை கூட்ட வேண்டும் என்றால், வைட்டமின் டி சத்து தேவைப்படும். இந்த வைட்டமின் டி சத்தை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் சூரிய ஓளியில் 15 முதல் 20 நிமிடம் நின்றாலே நமக்கு இயற்கையாகவே வைட்டமின் டி சத்து கிடைத்துவிடும்.
இல்லையென்றால் இந்த கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு, நமக்கு இயற்கையாகவே கூட எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, சிறுவயதில் இருந்தே இதற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும்.
குறிப்பாக, பெண்களுக்கு மாதவிடாய் நேரம், குழந்தை பிறப்புக்கு பிறகு தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டுவதால் கூட கால்சியம் பலம் குறையும். இதற்கு சூரிய ஒளி ஒன்றே போதுமானது. மருத்துவர்களின் ஆலோசனை என்பது நமக்கு தினமும் 1 முதல் 1.3 கிராம் கால்சியம் தேவைப்படும்.
பாலில் கால்சியம் சத்து உள்ளது என்றாலும் உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி முடிவு செய்யலாம். உடற்பயிற்சி, நடை பயிற்சி இதற்கு சிறந்த பலனை கொடுக்கும். உணவாக மோர், பழச்சாறு, கீரை போன்றவை தினசரி எடுத்து கொண்டால் நமக்கு தேவையான அளவு கால்சியம் சத்து கிடைக்கும்.
பழ வகைகளில் அத்திப்பழம் சிறந்த அளவு கால்சியம் சத்தை கொடுக்கும். அதே போல கொய்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் இவைகளிலும் தேவையான அளவு சத்து கிடைக்கும். கீரை வகைகளில் கால்சியம் சத்து நிறைய கிடைக்கும். சிறுதானியங்களில் ராகியில் கால்சியம் சத்து அதகிம் கிடைக்கும். அது போல வெண்டைக்காய், வெங்காயம், கேரட் போன்ற காய்கறிகளை தினசரி உணவிலே எடுக்கும்போது கால்சியம் சத்து கிடைக்கும்.
ஒரு மனிதர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் காலை அதிக உணவும், மதியம் மற்றும் இரவு தேவையான அளவு உணவு எடுத்துக் கொண்டால் போதுமானது. அதே போல நமக்கு இயற்கையாக மிக குறைந்த விலையில் மிக அதிகமான பலனை கொடுக்கக் கூடிய பிரண்டையில் எலும்புகளுக்கு பலம் மட்டும் இல்லாமல், கை, கால், இடுப்பு மற்றும் மூட்டு வலியும் வராமல் தடுக்கும்.
அதே போல முருங்கை கீரையை வாரம் ஒரு முறையோ அல்லது இரு முறையோ எடுத்து கொள்ளும்போது அது சிறந்த பலன்களை கொடுக்கும்.
குறிப்பாக நமது தினசரி உணவிலே ஆறு சுவைகளுக்கும் முக்கியத்தும் கொடுத்து அதே நேரம் உணவிலே அளவு முறையும் கடைப்பிடிக்க வேண்டும். அது போல தினசரி உணவிலே நாம் சேர்த்து கொள்ள வேண்டியது வாழைப்பழம். சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தவிர மற்ற அனைவரும் எடுத்து கொள்ள வேண்டிய பழம் ஆகும்.
வாழைப்பழம் எடுத்து கொண்டால், உடல் எடை கூடும் என்ற தவறான கருத்து நிலுவுகிறது. இதை அளவோடு எடுத்து கொண்டால் நம் தினசரி ஆற்றல் என்பது 2000 கலோரி என்றால் இதில் வாழைப்பழம் மட்டும் 70 முதல் 80 கலோரி கிடைக்கும். மேலும், வாழைப்பழம் என்பது கொழுப்பு இல்லாத பழம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்ததாக நமது தினசரி உணவிலே எடுத்து கொள்ள வேண்டியது வெங்காயம். இது நுரையீரலுக்கு பலத்தையும், ஆற்றலையும் கொடுக்கும். வைட்டமின் சி அதிகமாக இதில் இருப்பதால் பெண்களுக்கு கருத்தரிக்க ஒரு தூண்டுகோலாக அமையும்.
இன்றைய மருத்துவ ஆய்வில் வெங்காயத்தை எடுத்துக் கொள்ளும்போது மாரடைப்பு வருவதை தடுக்கவும் முடியும் என்கிறார்கள்.
ஏனெனில், இதில் நம் உடலுக்கு தேவயைனா மாங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் கிடைக்கிறது. உப்பு சத்து மற்றும் நீர் சத்தும் கிடைத்துவிடும்.
நோய் எதிர்ப்பு ஆற்றலை ஒரு உடலில் இருக்க வேண்டும் என்றால் அதற்கு பயறு வகை உணவுகள் அவசியம் ஆகும். குறிப்பாக சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள், முளை கட்டிய பச்சைப் பயறு, மூக்கு கடலை போன்ற உணவுகளை எடுத்து கொள்ளும்போது நல்ல பலனை கொடுக்கும்.
பொதுவாகவே பயறு வகைகள் கொழுப்பு சத்து குறைந்து காணக்கூடிய ஒரு தானியமாகும். இது உடலுக்கு புரத சத்தையும் கொடுக்கும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இந்த உணவோடு தோல் நீக்கிய இஞ்சி அல்லது பூண்டு சேர்த்து எடுக்கும்போது வாய்வு கோளாறு அவதி வராது.
அது போல உடல் சோர்வு அதிகமாக இருந்தால், நாம் மருத்துவரிடம் சென்று காண்பித்தால் உடலில் இரும்பு சத்து குறைவாக உள்ளது என்று கூறுவார்கள். இதனால் நமது உடலில் வைட்டமின் சத்து குறைபாடு மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இதற்கு தினசரி உணவிலே இரும்பு சத்து உள்ள உணவுகளை நாம் எடுத்து கொள்ள வேண்டும்.
உணவில் புழுங்கல் அரிசி மற்றம் கைகுத்தல் அரிசி போன்றவை இயற்கையாகவே இரும்பு சத்தை கொடுக்கும். சிறு தானியத்தில் வரகு அரிசி இரும்பு சத்து அள்ளி தரும். முருங்கை கீரை, பாலக்கீரை எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களில் கொய்யாப்பழம், தக்காளி, மாம்பழம், தர்பூசணி போன்றவைகளில் இருந்தும் கிடைக்கும். அதே போல கம்பு, தினை, ராகி போன்ற சிறு தானியங்களையும் உணவிலே அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக நீர் சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். தினசரி உணவிலே நீர் சத்து கொடுக்கக் கூடிய உணவுகளான பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், வெண் பூசணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பல் துலக்கிய பிறகு ஒரு சொம்பு நீர் அருந்துவது நல்ல பலனை கொடுக்கும்.
உடற்பயிற்சி செய்பவர்கள் நீர் அருத்திய 30 நிமிடத்திற்கு பிறகு உடற்பயிற்சி செய்யலாம். அதே போல பொதுவாக உணவுக்கு முன்னும் பின்னும் சிறிது நேரம் கழித்து நீர் அருத்துவது உத்தமம் ஆகும். ஏனெனில், உணவு உண்ணும்போது இடையே அடிக்கடி நீர் அருந்தினால் உணவு செரிக்க வைக்கும் நொதிகள் நீர்த்து செரிமானம் சரியாக வராது.
அதே நேரம் உணவு உண்ணும்போது விக்கல் வந்து விட்டால் கண்டிப்பாக நீர் எடுத்து கொள்ள வேண்டும். இரவு உறங்க செல்லும் முன் ஒரு டம்ளர் நீர் அருந்துவது நல்லது. எனவே, நாம் தினசரி உணவை சரியான முறையிலே, அளவான முறையிலே எடுத்துக் கொண்டால் 90% உடல் ஆரோக்கியமும், மனம் ஆரோக்கியமும் கிடைக்கும்.
தினமும் 30 நிமிடம் கட்டாயமாக உடற்பயிற்சி செய்வோமேயானால் நீண்ட நாள் நோய் இன்றி வாழ முடியிம். இந்த முறையை தான் நமது முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள். நாம் இன்று பரபரப்பான வாழ்க்கை, வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இதனால் தான் நாம் இன்று சத்தான உணவு எடுத்து கொண்டாலும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் வருவதை தடுக்க முடியாமல் தவிக்கிறோம்.
எனவே, முதலில் உணவு முறை பற்றிய ஒரு விழிப்புணர்வு நமக்கு மிகவும் அவசியமாகும். நம் அடுத்த தலைமுறைகளுக்கு நல்ல உணவு முறைகளை நாமே சிந்தித்து கொடுக்க வேண்டும். அப்போது தான் எதிர் வரும் சந்ததிகள் ஆரோக்கியமாக வாழ முடியும்.
நல்ல ஆரோக்கியம் மற்றும் அறிவு, அழகுகுள்ள குழந்தைகள் பெற்றெடுக்க முடியும். இதில் பெற்றோர்களின் பங்கு அதிகமாகவும் அதே நேரம் இதை சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளும் பொறுப்பு வரும் சந்ததிகளுக்கும் வர வேண்டும்.