திருவண்ணாமலையில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு ஒரு வீடு முழுமையாக மண்ணில் புதைந்த நிலையில், அதில் சிக்கிய 7 பேரும் உயிரற்ற உடல்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. வேங்கிக்கால் ஏரி நிரம்பி உபரி நீரானது சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ஏரி, குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறி சாலைகளில் பெருக்கெடுத்ததால் நகரமே வெள்ளக்காடாகக் காட்சியளித்தது.

இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை 4.40 மணியளவில் அபாயகரமான வகையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.

அடிவாரத்தில் வசித்து வந்த மக்கள் சுதாரிப்பதற்குள் சில அசம்பாவிதங்கள் அரங்கேறி விட்டன.

மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் 9வது தெரு பகுதியில் உள்ள குடியிருப்புகள் இந்த மண் சரிவில் சிக்கிக் கொண்டன. மலையிலிருந்து பாறைகள் மற்றும் சரளை மணல் குவியல்கள் ஒட்டுமொத்தமாக சரிந்து வந்ததில் அடிவாரப் பகுதியிலிருந்த வீடுகள் மீது விழுந்து சிதிலமடைந்தன.சுமார் 40 டன் எடை கொண்ட பெரும் பாறை ஒன்று சரிந்து வந்து அபாயகரமான வகையில் நின்றுள்ளது.

மண் சரிவில் சிக்கிய 3 வீடுகளில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்து போனது. மேலும், 2 வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பியுள்ளனர்.

ஆனால், முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்த ராஜ்குமாரின் வீட்டில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள்? அவர்களின் நிலை என்ன? என்பது தெரியாமல் இருந்து வந்தது. அந்த வீட்டுக்குள் ராஜ்குமார், அவரது மனைவி மீனா, அவர்களது பிள்ளைகள் 2 பேர் மற்றும் அருகில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பிள்ளைகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் இருந்ததாக கூறப்படுகிறது

தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக அவர்கள் வெளியே எங்கேயும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். மண் சரிவு ஏற்பட்ட போது ராஜ்குமார் வீட்டருகே இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து அவரது வீட்டு கதவை அடைத்துக் கொண்டுள்ளது.

இதனால் அவர்களால் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டுள்ளனர். அதன் பின் சரிந்து வந்த மண் மற்றும் பாறைகள் வீட்டை முற்றிலுமாக மூடியதால் அவர்கள் வீட்டுக்குள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

மண் சரிவு ஏற்பட்ட பிறகு ராஜ்குமாரின் செல்போன் சுமார் ஒரு மணி நேரம் வரை இணைப்பில் இருந்துள்ளது.

அதன்பின் ஸ்விட்ச் ஆப் ஆகி விட்டது. இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்.பி சுதாகர் ஆகியோரும் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.

ஆனால், மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்கு மேல் பகுதியில் மிகப்பெரிய ராட்சத பாறை சரியும் நிலையில் அபாயகரமான வகையில் இருந்ததால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

மண்ணை அப்புறப்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபடும்போது, ராட்சத பாறை சரிந்து விழக்கூடும் என்பதால் அந்தப் பகுதியில் வசித்து வந்த அனைவருமே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்

இதையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. திண்டிவனத்தில் இருந்து துணை கமாண்டன்ட் ஸ்ரீதர் தலைமையில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் நள்ளிரவில் திருவண்ணாமலை வந்தடைந்தனர்.

மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா என்பதை கண்டுபிடிக்க மோப்ப நாய்கள் ரூபி, மிர்ஸி வரவழைக்கப்பட்டன.

மேலும், அரக்கோணத்தில் இருந்து ஹைட்ராலிக் ஏர் லிஃப்டிங் பேக், ஹிட்டாச்சி வாகனங்கள் உள்ளிட்டவையும் வரவழைக்கப்பட்டன. எனினும், அந்த வீடு அமைந்துள்ள பாதை குறுகலாக இருப்பதால் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இரவில் மழை தொடர்ந்து வந்ததாலும், மேலும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டிருந்ததாலும் மீட்பு பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் திங்கள் கிழமை அதிகாலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் இணைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக இறங்கினர். தொடர்ந்து பெய்து வந்த மழைக்கு நடுவே மீட்புப் பணிகள் மாலை வரை தொடர்ந்தது. புதைந்த வீட்டின் அருகே கிடந்த மண் குவியல்களை அப்புறப்படுத்திய மீட்புப்படையினர் முதலில் சிறுவன் கவுதமனின் உடலை மீட்டனர்.

மண்ணும் பாறைகளும் சேர்ந்து இறுகிக் கிடந்த மணல் பரப்புகளை வெட்டி எடுத்த மீட்புப்படையினர் இரண்டாவதாக சிறுமி ஒருவரின் உடலை மீட்டனர். அதன்பின் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது ராஜ்குமாரின் உடலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தொடர்ந்து 5 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய பாறைகள் தென்பட்டதால் மீட்புப் பணி தடை பட்டது.

மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்த சுமாா் 200 போ் மீட்கப்பட்டு, நகராட்சிப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டனா். இந்த நிலையில், மலையில் வீடு கட்டி வாழ்ந்து வந்த,

  • ராஜ்குமார்,
  • அவரது மனைவி மீனா,
  • மகன் கௌதம்,
  • உறவினர்கள் மகா,
  • இனியா,
  • விநோதினி,
  • ரம்யா உள்பட மொத்தம் 7 பேர் சிக்கியிருப்பதாக தகவல் தெரிய வந்தது.

இந்த நிலையில், இரவு நிலவரப்படி மேற்கண்ட 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 3 குழந்தைகள் உள்பட 7 பேரின் உடல்களும் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாறை விழுந்ததில் உடல்கள் நசுங்கியிருப்பதாகவும், அவை சிதைந்த நிலையில் மீட்கப்படும் காட்சிகள் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சுமார் 30 மணி நேரமாக தொடர்ந்த மீட்புப்பணி நிறைவடைந்தது.

Share.
Leave A Reply