தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையான யாழ்ப்பாணத்தைச் சூழ்ந்த அநுர அலை பற்றியதாக எனது கடந்த வாரத்தைய கட்டுரை அமைந்திருந்தது.

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 நவம்பர் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்ற தனிக்கட்சியாக வரலாறு படைத்தது.

இலங்கை தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரம் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணத்தின் ஆறு பாராளுமன்ற ஆசனங்களில் தேசிய கட்சிக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்தன.

நவம்பர் 14 தேர்தல் தீர்ப்பு இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரான வரலாற்றில் இந்த தமிழ்த் தேசியவாதக் கோட்டை முதற்தடவையாக அதுவும் சிங்களவர்களின் ஆதிக்கத்தில் உள்ள ஒரு தேசியக்கட்சியினால் தகர்க்கப்பட்டதை குறித்து நிற்கிறது.

இந்த கட்டுரை யாழ்ப்பாணத்தில் தேசிய மககள் சக்தி ஏன், எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை விபரிக்கிறது.

கடந்தவார கட்டுரையில் நான் கூறியதைப் போன்று, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி போன்ற சிங்களவர்களின் ஆதிக்கத்திலான தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்கள்.

தேசிய கட்சிகளுடன் அணி சேர்ந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சி ( ஈ.பி.டி.பி. ) போன்ற கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டார்கள்.

மேலும், ஜனாதிபதி தேர்தல்களில் சிங்கள வேட்பாளர்களும் யாழ்ப்பாணத்தில் பெருமளவு வாக்குகளைப் பெற்றிருந்தார்கள்.

இந்த வருடத்தைய ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச சுயேச்சையாக போட்டியிட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தோற்றகடித்து யாழ்ப்பாணத்தில் கூடுதலான வாக்குகளைப் பெற்றார்.

எனவே இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்றியின் தனித்துவம் என்வென்றால் அதாவது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நிருவாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சிங்களவர்களின் ஆதிக்கத்திலான தேசிய கட்சி ஒன்று முதற்தடவையாக அதிகூடிய வாக்குகளையும் பெரும்பாலான ஆசனங்களையும் பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் அந்த கட்சி 80, 830 ( 24.85 சதவீதம் ) வாக்குகளைப் பெற்று மூன்று பாராளுமன்ற ஆசனனங்களை தனதாக்கிக் கொண்டது.

யாழ்ப்பாணத்தில் அதிகூடிய தபால் வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றிருப்பது அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அதற்கு இருக்கும் ஆதரவின் மட்டத்தை வெளிக்காட்டி நிற்கிறது. மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 11 தேர்தல் தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்திருக்கிறது.

நல்லூர், கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை, உடுப்பிட்டி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் திசைகாட்டி சின்னம் அதிகூடிய வாக்குகளைப் பெற்றது.

மற்றைய கட்சிகள் மூன்று தொகுதிகளிலேயே வெற்றி பெற்றன. ஊர்காவற்துறை (ஈ.பி.டி.பி.), கிளிநொச்சி ( இலங்கை தமிழரசு கட்சி) மற்றும் சாவகச்சேரி (சுயேச்சைக்குழு 17 ) ஆகியவையே அந்த தொகுதிகளாகும். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களில் மூவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். அவர்களின் விருப்பு வாக்குகள் கருணானந்தன் இளங்குமரன் ( 32,102), வைத்தியக்கலாநிதி சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா (20,430), ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ( 17,579).

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை ஆங்கிலேய கவிஞர் றொபேர்ட் சௌதேயின் வார்த்தைகளில் கூறுவதானால் “புகழ்பெற்ற வெற்றி” (Famous Victory). இந்த தேர்தலில் 159 பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி 6, 863,186 ( 61.6 சதவீதம்) வாக்குகளைப் பெற்ற போதிலும், ரில்வின் சில்வா, பிமால் இரத்நாயக்க போன்ற ஜே வி.பி தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்களின் வெற்றியை ” மகுடச் சாதனை ” (Crowning achievement ) என்று வர்ணித்து பெருமிதமடைந்தார்கள்.

தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் தேர்தல் பற்றிய அவற்றின் செய்தி அறிக்கைகளில் யாழ்ப்பாண முடிவுகளுக்கு அதிமுக்கிய இடத்தைக் கொடுத்திருந்தன.

பல அரசியல்வாதிகளும் அரசியல் அவதானிகளும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் செயற்பாட்டை பெரிதும் புகழ்ந்தார்கள். யாழ்ப்பாணத்துக்கு சென்ற சீனத்தூதுவர் கீ ஷென்ஹொங் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக வாக்களித்ததில் யாழ்ப்பாண மக்கள் விவேகத்துடன் செயற்பட்டிருப்பதாக பாராட்டியதை காணக்கூடியதாக இருந்தது.

அதனால் யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வரலாற்று வெற்றியை இந்த தேர்தலில் அந்த கட்சி பெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பேறு என்று கூறமுடியும். தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றிக் கிரீடத்தில் யாழ்ப்பாண வெற்றி விலையுயர்ந்த அணிகலன் என்று தோன்றுகிறது. இத்தகைய பின்புலத்திலேயே யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி மீது இந்த கட்டுரையில் கவனத்தை குவிக்கிறேன்.

தேர்தலுக்கு முன்னரான மதிப்பிடுகள்

கடந்த செப்டெம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கு யாழ்ப்பாண சுமார் 27 ஆயிரம் வாக்குகளே கிடைத்தன என்பது நன்கு தெரிந்ததே.

ஆனால், இரு மாதகால இடைவெளியில் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதன் வாக்குகளை மூன்று மடங்காக 80 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரித்தது.

யாழ்ப்பாணத்தின் ஆறு ஆசனங்களில் தமிழரசு கட்சி இரு ஆசனங்களை பெறும் என்று தேர்தலுக்கு முன்னரான மதாப்பிடுகள் கூறின. ஈழமக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, சுயேச்சைக்குழு – 17, மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியவை தலா ஒவ்வொரு ஆசனத்தைப் பெறும் என்றும் அந்த மதிப்பீடுகள் தெரிவித்தன.

மின்னாமல் முழங்காமல் பெய்த மழை

ஆனால், யாழ்ப்பாண மக்கள் வித்தியாசமாக வாக்களித்தார்கள். தேசிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்களும் தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் சுயேச்சைக் குழு – 17 ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு ஆசனமும் கிடைத்தன. யாழ்ப்பாணத்தின் மூத்த பத்திரிகையாளரான வடமராட்சி சின்னத்துரை தில்லைநாதனின் வார்த்தைகளில் கூறுவதானால் யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி ” மின்னாமல் முழங்காமல் பெய்த மழை.”

இராமலிங்கம் சந்திரசேகர்

தேர்தல் முடிவுகள் எதிர்பார்க்கப்படாதவையாக இருந்த போதிலும், ஜே.வி.பி. யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக முன்னரே முன்னேற்பாடு களப்பணிகளில் ஈடுபட்டிருந்தது. கட்சியின் மூத்த செயற்பாட்டாளர்களில் ஒருவரான இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ரமேஷ் அல்லது சேகர் என்று அழைக்கப்படும் அவர் மலையகத்தின் பண்டாரவளையைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர். அவர் 1963 ஆண்டு பிறந்தவர். 2001, 2004 ஆம் ஆண்டுகளில் ஜே. வி. பி.யினால் தேசியப்பட்டியல் மூலமாக சந்திரசேகர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார்.

உள்நாட்டுப்போர் முடிந்த பிறகு சில வருடங்களில் அவர் ஜே.வி.பி.க்காக யாழ்ப்பாணத்தில் தமிழர்களை வென்றெடுக்கும் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தை அரசியல் ரீதியாக இலக்குவைக்கும் முயற்சி 2014 ஆம் ஆண்டில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அநுர குமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்பட்டதாகும்.

நட்பிணக்கமான போக்கும் நடந்துகொள்ளும் முறையையும் கொண்டவரான சந்திரசேகர் யாழ்ப்பாணத்தில் பலரால் குறிப்பாக ஊடகங்களினால் விரும்பப்படும் ஒருவராக இருக்கிறார். இந்தியத் தமிழ் உச்சரிப்புடன் பேசும் அவர் தொடர்பாடலில் கைதேர்ந்தவர்.

யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடகங்களினால் எளிதில் அணுகப்படக்கூடியவரான இருக்கும் அவரை தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்கள், பத்திரிகைகள்,அடிக்கடி இணையத்தளங்கள் மற்றும யூரியூப் செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். சந்திரசேகர் யாழ்ப்பாண ஊடகச்சூழலில் நன்கு பரிச்சயமான ஒரு புள்ளியாக மாறினார். மக்களால் எளிதில் அணுகப்படக்கூடியவராகவும் அவர் விளங்கினார்.

யாழ்ப்பாண மாநகரசபையின் ஒரு பகுதியான அரியாலையில் இரு வீடுகளை ஜே.வி.பி. வாடகைக்கு எடுத்தது. ஒரு வீடு கட்சியின் அலுவலகமாக பயன்படுத்தப்பட்ட அதேவேளை, மற்றையது சந்திரசேகரினதும் கட்சி முக்கியஸ்தர்களினதும் வாசஸ்தலமாக இருந்தது.

அநுரா குமார திசாநாயக்க உட்பட பல்வேறு ஜே.வி.பி. செயற்பாட்டாளர்கள் எந்த ஆரவாரமும் இல்லாமல் யாழ்ப்பாணத்துக்கு வந்து அந்த வீட்டில் தங்கிச் செல்வார்கள். ஆரம்பக்கட்டத்தில் அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது ஜே.வி.பி.க்கு கஷ்டமாக இருந்தது. போர்க்காலத்தில் சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்தவத்தின் கீழ் ஜே.வி.பி.யின் தமிழர் விரே்த நடவடிக்கைகள் பற்றிய நினைவுகள் யாழ்ப்பாணத்து மனங்களில் மதிந்திருந்தது. வடக்கில் கட்சியின் வளர்ச்சிக்கு அது ஒரு தடையாகவும் விளங்கியது.

தொழிற்சங்க செயற்பாடுகள்

யாழ்ப்பாணத்தில் மக்களை கவருவதில் இருந்த இயலாமைக்கு மத்தியிலும், ஜே.வி.பி. தொழிற்சங்க செயற்பாடுகளில் அதற்கு இருந்த திறமையையும் அனுபவத்தையும் பயன்படுத்தி யாழ்ப்பாணச் சமூகத்தில் உள்ள பல பிரிவினரை இலக்குவைத்துச் செயற்படத் தொடங்கியது

பல்வேறு தொழிற்சங்கங்களும் அமைப்புக்களும் நிறுவப்பட்டன ரொட்ஸ்கியவாதிகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் மார்க்சிஸ்ட் – லெனினிஸ்டுகளை உள்ளடக்கிய ” பழைய இடதுசாரிகள் ” யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் இல்லாமற் போய்விட்டனர்.

தொழிற்சங்கப் பரப்பிலான செயற்பாடுகளில் தமிழ்த் தேசியவாத கட்சிகள் நாட்டம் காட்டவில்லை. மேதினங்களில் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்தும் தமிழ்க்கட்சிகள் தொழிலாளர்களினதும் ஊழியர்களினதும் உரிமைகளிலும் நல்வாழ்விலும் அக்கறைகொண்ட செயற்பாடுகளில் நாட்டம் காடடுவதில்லை. அதனால் தொழிற்சங்கக் களம் ஜே.வி.பி. வாய்ப்பானதாக அமைந்தது.

பல சங்கங்களும் அமைப்புக்களும் படிப்படியாக அமைக்கப்பட்டன. விவசாயிகளும் பயிர்ச் செய்கையாள்களும் மீனவர்கள் மற்றும் சீவல் தொழிலாளர் சமூகமும் அணிதிரட்டப்பட்டு சங்கங்களாக ஒழுங்கமைக்கப்பட்டனர்.

இளங்குமரன் கருணநாதன்

அரசாங்க ஊழியர்களும் பிரிவு பிரிவாக அணி திரட்டப்பட்டனர். ஒவ்வொரு அரசாங்க திணைக்களத்திலும் தொழிற்சங்க கிளைகள் அமைக்கப்பட்டன.

உதாரணமாக, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக அதிகூடுதலான விருப்புவாக்குகளுடன் தெரிவுசெய்யப்பட்ட முதன்மை வேட்பாளர் இளங்குமரன் ஒரு மின்சாரசபை ஊழியர். தொடக்கத்தில் தனது வேலைத்தலத்தில் தொழிற்சங்கம் ஒன்றை அமைக்க உதவியதன் மூலம் ஜே.வி.பி.யின் செயற்பாடுகளில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

யாழ்ப்பாணத்தில் அரசாங்க எழுதுவினைஞர் சேவைக்குள்ளும் சிறிய தொழிற்சங்கங்களை ஜே.வி.பி. அமைத்துக் கொண்டது. ஆசிரியர்கள் மத்தியிலும் அவ்வாறு சிறிய சங்கங்கள் அமைக்கப்பட்டன. முச்சக்கரவண்டி சாரதிகள், பஸ், மினிவான் சாரதிகள், முடி திருத்துனர்கள், ஒப்பனையாளர்கள், சிறிய வர்த்தகர்கள் மற்றும் வர்த்தகத்துறை ஊழியர்கள் ஆகியோருக்காகவும் சங்கங்கள் அமைக்கப்பட்டன.

உறுப்பினர்களின் தொகை பெருமளவில் இருக்கவில்லை என்றபோதிலும், வலையமைப்பு கட்டுறுதியானதாக இருந்தது. தற்போது ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்திருக்கும் நிலையில், அவர்களின் தொழிற் சங்கங்கள் எதிர்காலத்தில் பருமனிலும் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் வளருவதற்கான சகல சாத்தியங்களும் இருக்கின்றன.

தேசிய மக்கள் சக்தியாக உருமாறிய ஜே.வி.பி.

ஜே.வி.பி. 2019 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தன்னை தேசிய மக்கள் சக்தியாக கட்டமைத்துக்கொண்டது.

அநுர குமார திசாநாயக்க வடக்கிற்கு பல விஜயங்களை மேற்கொண்டு தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்தினார். வடக்கிலும் ஏன் நாட்டின் ஏனைய பாகங்களிலும் அவருக்கு பெருமளவு வாக்குகள் கிடைக்கவில்லை.

தேசிய மக்கள் சக்தியாக மீள்கட்டமைக்கப்பட்ட பிறகு ஜே.வி.பி. விரிவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. 2020 – 2024 காலப்பகுதியில் தேசிய மக்கள் சக்தி கணிசமான விரிவாக்கத்துக்குள்ளாகியது.

ஜே.வி.பி.யின் கடந்த காலத்தைப் பற்றிய கசப்பான நினைவுகள் படிப்படியாக மறையத் தொடங்கின. நாட்டின் ஏனைய பாகங்களில் ஜே.வி.பி.யின் கடந்தகால அட்டூழியங்களைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாத இளந் தலைமுறையினர் அநுர மற்றும் தேசிய மக்கள் சக்தியினால் கவரப்பட்டதைப் போன்று யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களும் தேசிய மக்கள் சக்தியை மறுப்புக்கு இடமற்றதாகக் கண்டு அதனால் ஈர்க்கப்பட்டனர். ஆனால், விரிவாக்கத்துக்கு மத்தியிலும் கூட தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாத்தில் இன்னமும் ஒரு சிறிய கட்சியாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்த்கது.

2024 ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அநுர குமார திசாநாயக்க மிகுந்த உற்சாகத்துடன் களத்தில் இறங்கினார். வடக்கிற்கு பல விஜயங்களை மேற்கொண்ட அவர் அங்கு கூட்டங்களில் உரையாற்றினார். 42 சதவீதமான வாக்குகளுடன் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போதிலும்,

சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது யாழ்ப்பாணத்திலும் சிறுபான்மைச் சமூகங்கள் பெருமளவில் செறிவாக வாழும் மற்றைய மாவட்டங்களிலும் அவருக்கான ஆதரவு மிகவும் குறைவானதாகவே இருந்தது. சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட 12 மாவட்டங்களில் அநுர குமார திசாநாயக்க முதலாவதாக வந்த அதேவேளை, சஜித் பிரேமதாச தமிழர்களையும் முஸ்லிம்களையும் கணிசமான எண்ணிக்கையில் கொண்ட மற்றைய பத்து மாவட்டங்களில் முதலாவதாக வந்தார்.

கலவை வேட்பாளர்கள் பட்டியல்

இலங்கையின் சகல மாவட்டங்களிலும் வெற்றி பெறுவதற்கான ஒரு திட்டத்தை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி வகுத்திருந்தது.

அவர்களது வேட்பாளர் பட்டியல்கள் ஜே.வி.பி.யின் பழைய முக்கியஸ்தர்களையும் மிகுந்த திறமைகொண்ட தேசிய மக்கள் சக்தியின் புதியவர்களையும் உள்ளடக்கிய ஒரு கலவையாக இருந்தது. ஜே.வி.பி.யின் மூத்த உறுப்பினர்களே முதன்மை வேட்பாளர்களாக இருந்தனர்.

இதே பாணியே யாழ்ப்பாணத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது. சந்திரசேகர் மிகுந்த சிரமத்துடன் சமூகத்தில் மதிப்பைக் கொண்ட பல பேரைத் தொடர்பு கொண்டு தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக வருமாறு அழைப்பு விடுத்தார்.

சிலர் இணங்கினார்கள். பலர் மறுத்தார்கள். வேட்பாளர்களாக வரக்கூடியவர்கள் தீவிரமான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டனர். சந்திரசேகரும் பிமால் இரத்நாயக்கவும் நிறைவுசெய்த வேட்பாளர் பட்டியலை அநுர குமார திசாநாயக்க அங்கீகரித்தார்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அநுர யாழ்ப்பாணத்தில் பிரசாரங்களில் ஈடுபட்டபோது தெற்கில் மக்கள் தன்னை தெரிவு செய்யப்போகிறார்கள் என்று யாழ்ப்பாண மக்களுக்கு கூறினார்.

தெற்கின் மனநிலைக்கு இசைவான முறையில் செயற்பட்டு தனக்கு வாக்களிக்களிப்பீர்களா என்றும் அவர் யாழ்ப்பாண மக்களை நோக்கிக் கேள்வியெழுப்பினர். வடக்கு மக்கள் அவ்வாறு செய்யவில்லையானால் தெற்கில் அது எதிர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறு கூறியதற்காக அநுரவை ரணில் விக்கிரமசிங்க கண்டனம் செய்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பிரசாரங்கள் மற்றும் அநுராவின் வேண்டுகோளுக்கு மத்தியிலும் கூட யாழ்ப்பாண மக்கள் அவருக்கு பெரும் எண்ணிக்கையில் வாக்களிக்கவில்லை. தமிழ்ப்பகுதிகளில் பிரதான போட்டி ஒரு புறத்தில் தமிழரசு கட்சிக்கும் மறுபுறத்தில் ஏழு தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலானதாகவே இருந்தது.

தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவை ஆதரித்த அதேவேளை மற்றைய கட்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழ்ப் பொது வேட்பாளராக களமிறக்கின.

தமிழ்ப் பகுதிகளில் ஒரு பிரதான போட்டியாளராக அநுரா நோக்கப்படவில்லை. இது தவிரவும் சிங்கள மக்களினால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்று தமிழர்களில் பவரும் நினைக்கவும் இல்லை.

ஆரவாரம் இல்லாத பிரசாரம்

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் யாழ்ப்பாணத்தை அதிர்ச்சியடைய வைத்தது. 2010 , 2019 ஜனாதிபதி தேர்தல்களில் யாழ்ப்பாணம் வெற்றியாளருக்கு வாக்களிக்கவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறப்போகிறது என்பது இப்போது நிச்சயமாகியது அது எந்தளவு ஆசனங்களை கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்பது மாத்திரமே நிச்சயமற்றதாக இருந்தது. ஜனாதிபதி தேர்தலில் அநுரவுக்கு வாக்களிக்காமல் விட்ட குறையை நிவர்த்தி செய்ய யாழ்ப்பாண வாக்காளர்கள் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஆரவாரமில்லாமல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது.

ஆளுக்கு ஆள் கதை சொல்வதன் மூலமும் பிரசாரம் செய்யப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கமும் முடி திருத்துனர்கள் சங்கமும் தேர்தல் பிரசாரங்களில் முன்னரங்கத்தில் நின்றன. இந்த சங்கங்களின் உறுப்பினர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்குமாறு சொல்லத் தொடங்கினர். மெதுமெதுவாக இந்த செய்தி உத்வேகமடையத் தொடங்கியது.

அநுர என்ற மந்திரப் பெயர்

ஆனால், அநுர குமார திசாநாயக்க என்ற மந்திரப் பெயரே காந்தம் போன்று வாக்காளர்களை தேசிய மக்கள் சக்தி முகாமுக்கு கவர்ந்திழுத்தது.

பொதுவில் தமிழர்கள் மத்தியிலும் குறிப்பாக யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் அநுரவில் ஆர்வம் ஏற்பட்டது. பல யூரியூப் செய்தியாளர்கள் அவரைப் பற்றி நேர்மறையான தகவல்களை பரப்புவதில் கவனம் செலுத்தத் தொடங்கினர்.

அவரது பேச்சுக்களுக்கும் நடவடிக்கைகளுக்கும் பெருமளவு பிரசித்தம் கொடுக்கப்பட்டது. அவர் கூறுகின்றவற்றுக்கும் செய்கின்றவற்றுக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

தமிழ்ச் சமூக ஊடகங்களில் சில பிரிவுகள் அநுரா தொடர்பாக மிகத்தீவிரமாக செயற்படத் தொடங்கின. முகநூலிலும் எக்ஸிலும் (ருவிற்றர்) அவருக்கு ஆதரவான பெருவாரியான பதிவுகள் வந்தன.

அவரது பழைய உரைகளிலும் மீண்டும் ஆர்வம் காட்டப்பட்டது. கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் குறித்த அவரின் கருத்துக்களும் அவற்றை தீர்ப்பதற்கு முயற்சிக்கப்போவதாக அவர் அளித்த வாக்குறுதிகளும் தமிழ் மக்களில் ஒரு பெருமளவு பிரிவினரின் உணர்வுகளுடன் ஒத்திருந்தன.

ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து உடனடியாகவே ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்தை கலைத்து நவம்பர் நடுப்பகுதியில் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிட்டதனால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சிகள் குழப்பத்துக்குள்ளாகின.

தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெறும் என்பது வெளிப்படையாக தெரிந்தது. அது வெறுமனே கட்சியின் வெற்றியாக மாத்திரமன்றி திசாநாயக்காவின் வெற்றியாகவும் அமையப்போகின்றது என்பது தெரிந்தது. அவர் ஜனாதிபதியாக இருந்ததால் அரசியல் கவர்ச்சி அதிகரித்தது.

தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு தமிழ்ப்பகுதிகளில் அதிகரிக்கிறது என்பதை தமிழ் தேசியவாத கட்சிகள் நவம்பர் முற்பகுதியிலேயே புரிந்துகொண்டன.

ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரசாரங்களை அவை தீவிரப்படுத்தின. ஜே.வி.பி.யின் தமிழர் விரோத கடந்த காலத்துக்கு அந்த பிரசாரங்களில் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஜே.வி.பி.க்கு வாக்களிக்க வேண்டாம் என்று தமிழர்களிடம் கேட்கப்பட்டது. ஆனால் குதிரைகள் பாய்ந்து வெளியே ஓடிய பிறகே தொழுவத்தின் கதவுகள் மூடப்படுவது போன்று இருந்தது. தேசிய மக்கள் சக்தி பறிக்கக்கூடியதாக யாழ்ப்பாணம் ” பழுத்திருந்தது.”

பாஷையூரில் தோழர் அநுர

ஜனாதிபதியாக ” தோழர் ” அநுரவின் உரையைக் கேட்க யாழ்ப்பாணம் ஆவலுடன் காத்திருந்தது. தேர்தலுக்கு முந்திய வார இறுதியில் அநுரா யாழ்ப்பாணம் வந்தார். பாஷையூர் கரையோரத்தில் பெரிய பிரசாரக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். முன்னென்றும் இல்லாத மககள் கூட்டம் அங்கு வந்திருந்தது. அவரின் சிங்கள உரை ஏககாலத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.

அநுர அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் பற்றியோ அல்லது அரசியல் தீர்வு பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. பதிலாக, அவர் தமிழ் மக்களுக்கு பிரத்தியேகமான பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொண்ட அவர் அவற்றை தீர்ப்பதற்கு உதவுவதாக கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செயவது, போரின்போது கொல்லப்பட்டவர்கள் அல்லது காணாமற்போனவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையைக் கையாளுவது ஆகியவை அவர் குறிப்பிட்ட பிரச்சினைகளில் முக்கியமானவை. வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவருவதாக அவர் உறுதியளித்தார்.

அநுர வந்தார், பேசினார், சென்றார். சில நாட்கள் கழித்து நடைபெற்ற தேர்தலில் அவரின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தை வெற்றிகொண்டது. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போன்று யாழ்ப்பாணத்தில் முதலாவதாக வந்த தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான ஆசனங்களைப் பெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள பதினொரு தேர்தல் தொகுதிகளில் அல்லது வாக்களிப்பு பிரிவுகளில் எட்டில் அந்த கட்சி வெற்றி பெற்றது.

மீனவர் சமூகத்தனர் வாழும் கரையோரப் பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக பெருமளவில் வாக்குகள் விழுந்தன. இந்திய மீனவர்களின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவருவதாக அநுர அளித்த வாக்குறுதியில் அந்த பகுதிகளின் பல வாக்காளர்கள் நம்பிக்கை வைத்து விட்டார்கள் போன்று தோன்றுகிறது.

புதிய கடற்தொழில் அமைச்சராக யாழ்ப்பாண மாவட்ட தேசிய மக்கள் சக்தி அயைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டது இதனுடன் தொடர்புடைய விவகாரமாக இல்லாமல் இருக்கமுடியாது.

யாழ்ப்பாண வெற்றி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றிக் கிரீடத்தில் பெறுமதியான அணிகலன் என்று புகழப்படுகிறது. அதேவேளை இந்த மகுட வெற்றி இலங்கை தமிழ்த் தேசியவாதத்தின் முடிவுக்கு சமனனானது என்று சில பிரிவினர் அபிப்பாராயம் தெரிவிக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி இலங்கையில் தமிழ்த் தேசியத்துக்கான ஒரு இரங்கற்பாவா? இந்த சிக்கலான கேள்விக்கு எதிர்காலக் கட்டுரை ஒன்றில் விரிவாக பதிலளிக்கப்படும்.

-டி.பி.எஸ். ஜெயராஜ்-

Share.
Leave A Reply