யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அக்டோபர் 1974 இல் ஆரம்பிக்கப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளின் பின், ஜூலை 1976 இல் பொருளியல், வணிகவியல் துறைக்குத் துணை விரிவுரையாளராக நியமனம் பெற்றுச் சென்றேன்.

லேக்ஹவுஸ், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் குடிவிபரவியல் நிறுவனம், சசெக்ஸ் பல்கலைக்கழக களஆய்வு அலுவலர் என்று பல நிலைகளில் பணியாற்றிய பின், நான் ஏற்ற புதிய பணி இது.

1976 ஆம் ஆண்டில் முதல் தடவையாக மாணவர்கள் வணிகத்துறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பேராசிரியர் க.கைலாசபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதல் தலைவராகப் பணியேற்று, அந்தப் புதிய கல்வி நிறுவனத்தை வழிநடத்திச் செல்லும் பெரும் பொறுப்பைச் சுமந்திருந்தார்.

நான் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளியலில் சிறப்பு கற்கை நெறியில் பயின்று கொண்டிருந்தேனாயினும், தமிழில் சிறப்பு நெறியை மேற்கொண்டிருந்த மாணவர்களுக்கு அவர் விரிவுரையாற்றிய ‘புனைகதை’ வகுப்புகளுக்கு ஓராண்டாய் சீராகச் சென்று அவரிடம் பாடம் கேட்டிருக்கிறேன். அவர் என் குருவுமாவார்.

அப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறைப் பேராசிரியராகவிருந்த கலாநிதி ஸுச்சரித கம்லத், மனித பண்பியற் பீடத்தின் பீடாதிபதியாகவிருந்தார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்திலிருந்து அவரை நான் நன்கறிவேன். சிங்கள கலை இலக்கிய உலகில் நன்கறியப்பட்டவர். மார்க்சிய ஈடுபாடுமிக்க கம்லத் இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பாற்பட்ட அபூர்வமான மனிதர். தனது அரசியலுக்காக ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவால் பல்கலைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பதினைந்து ஆண்டுகள் அவர் தொழில் இன்றி அல்லலுற்றார்.

பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு என்னுடன் சமகாலத்தில் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அங்கு தமிழ்த் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். பேராசிரியர் எம்.ஏ.நுஹ்மான் மொழியியல் சிறப்புப் பட்டம் பெற்று, அவரும் அங்கு இணைந்திருந்தார்.

மெய்யியல் அறிஞர் செ.வே.காசிநாதனின் மாணவராக எம். எஸ். அனஸ், மெய்யியல் துறைக்கு விரிவுரையாளராக வந்தமை புதிய நல்வரவாக அமைந்தது. விசாலமான இதயமும் மாண்பும் மிக்கவர் அனஸ். ஏ.ஜே. என்னும் நல்லறிஞன், ஆங்கிலப் போதனாசிரியனாய் அப்பல்கலைக்கழகத்தை அணி செய்திருந்த காலமும் அதுவே. இந்த நல்லறிஞர் கூட்டம் எனக்குப் பெருந்துணையாய் அமைந்தது.

அறபு இஸ்லாமிய நாகரிகத் துறையைச் சேர்ந்த கே.எம்.எச்.காலிதீன் சில காலம் எனக்கு திருக்குர் ஆன் போதித்தார். ‘கலிமா சொல்லி இஸ்லாத்தில் சேர்ந்துவிடுங்கள்’ என்று ஒருமுறை சொன்னார். நல்ல இதயம் கொண்டவர் காலிதீன். இவர்களுடன் கா. ஆனந்த நடராஜா, சா.சத்தியசீலன், இர.சிவச்சந்திரன், ந.பேரின்பநாதன், அ.கணபதிப்பிள்ளை ஆகியோரும் வெவ்வேறு துறைகளில் பணிபுரிந்தாலும், குடும்ப நண்பர்களாய்க் குலவி மகிழ்ந்த காலம் ஒரு கனாக் காலமாய் மனதில் புகைமூட்டமிடுகிறது.

சிங்களச் சினிமாத்துறையின் கீர்த்தி மிக்க தர்மசேன பத்திராஜ, யாழ். பல்கலைக்கழகத்தின் சிங்கள மொழி விரிவுரையாளராக இருந்த காலத்தில்தான் ‘பொன்மணி’ என்ற தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்திருந்தார். ஹர்ஷா குணவர்த்தன, தயபால திராணகம போன்ற ஆளுமைகளும் அப்பல்கலைக்கழகத்திற்கு அணி சேர்த்தனர்.

கடந்த ஐம்பது ஆண்டு காலத்தை திரும்பிப் பார்க்கையில், பல நல்ல இதயங்களை இழந்துபோன துயரம் நெஞ்சை வாட்டுகிறது. ஒரு நீண்ட பட்டியல் கண்முன் விரிகிறது. பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் முதல் விரிவுரையாளராக நியமனம் பெற்ற கா. ஆனந்த நடராஜா பொருளியல் கோட்பாட்டினைச் சிறப்புறக் கற்பித்து, மாணவர்களுக்கு செழுமையான அடித்தளத்தை இட்டவர். கிழக்கு ஜெர்மனியில் கார்ல் மார்க்ஸ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்காகச் சென்றவர் சுகவீனமுற்று, அவர் நாடு திரும்பியமை துரதிர்ஷ்டமானது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1977 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் திகதி நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் மலையக மாணவர்கள் தாக்கப்பட்ட நிகழ்வு பல்கலைக்கழகத்தின் கறை படிந்த பக்கம். இந்நிகழ்வினைக் கண்டித்து, மலையக மாணவர்கள் பக்கம் நியாயம் உள்ளது என்று தனிக்குரல் கொடுத்த மாண்பு ஆனந்த நடராஜாவினுடையது.

பேராசிரியர் கைலாசபதியின் காலத்தில் தற்காலிகப் பணியில் சேர்க்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கழிந்து, பேராசிரியர் சு.வித்தியானந்தன் உபவேந்தராக நியமனம் பெற்று, முறையான பல்கலைக்கழக யாப்பிற்கிணங்க அமைக்கப்பட்ட, பேராதனைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இருவரும் உள்ளடங்கிய தேர்வுக்குழுவினரால் எங்கள் நியமனங்கள் நிரந்தரம் பெற்றன.

சில காலம் வணிகவியல் துறை, வேறொரு துறைத் தலைவரின் நிர்வாகத்தின் கீழும் வந்தது. அவரை வந்து சந்திக்குமாறு அவரது பியூன் மூலம் ஒரு முறை எனக்கு அழைப்பு விட்டிருந்தார்.

ஏதோ ஓர் அறை எண்ணைக் குறித்து, அந்த அறையில் முதல் நாள், நேரம் எல்லாம் துல்லியமாகச் சொல்லி, அங்கு விரிவுரை எடுத்தீர்களா? என்று கேட்டார். ‘ஆம், சில சமயங்களில் ஒதுக்கப்பட்ட விரிவுரை நேரங்கள் போதாது போனால், மேலதிகமாகச் சில விரிவுரைகளை எடுப்பதுண்டு’ என்று பதில் கூறினேன்.

‘ஆனால் அதற்கு என்னிடம் ஏன் அனுமதி பெறவில்லை?’ என்றார்.
‘ஏன்? அந்த அறையை வேறு யாராவது விரிவுரைக்கு ஒதுக்கியிருந்தீர்களா?’ என்று கேட்டேன்.
‘இல்லை, நீர் என்னிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும்’ என்றார்.

அந்த அறையின் ஜன்னலுக்கூடே தெரிந்த மைதானத்தின் எல்லையில் நிழல் பரப்பி நின்றிருந்த மரத்தைச் சுட்டிக்காட்டி, ‘அந்த மரத்தின் கீழ் நான் வகுப்பு எடுத்திருந்தால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். அந்தப் பதிலை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.

அந்த இனிய கல்விச் சூழலில், ஓர் உயர் கல்விக்கூடத்தில் அதிகாரத்தைச் செயற்படுத்தும் தீவிரம் எப்படியெல்லாம் தலையெடுக்கிறது என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது.

பேராசிரியர் டோனி ராஜரட்னம் பொருளியல், வணிகவியல் துறைத் தலைவராக அமர்ந்தபோது, அத்துறை சீராக வளர ஆரம்பித்திருந்தது. ஆங்கில மொழிக்கல்வி கோலோச்சிய ஒரு காலத்தில், பொருளாதார வரலாற்றைப் போதிக்கும் நல்லாசானாக டோனி ராஜரட்னம் புகழ் பெற்ற காலம் ஒன்றிருந்தது.

தமிழ் மூலம் கல்விப் போதனை ஆரம்பமான ஒரு கட்டத்தில், வெகு சிலரே அதற்குத் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள முடிந்தது. அவரது போதனைக் காலம் கிட்டத்தட்ட பேராதனைக் காலத்தோடு முடிந்துவிட்டது என்றே கூறவேண்டும்.

மிகுந்த எளிமையும் அன்பும் கொண்டவர் அவர். காசை வீசிச் செலவழிக்கும் பண்பு அவருடையது. இலண்டனில் அவரின் மறைவின்போது நான் அஞ்சலி உரையாற்ற நேர்ந்தது துயரமானது.

அவரின் காலத்தில் பேராசிரியர் என்.பாலகிருஷ்ணன் பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்து யாழ்.பல்கலைக்கழகத்திற்கு மாற்றலாகி வந்தார். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் எங்களுக்கு Advanced Economic Theory பாடம் எடுத்திருந்தார்.சிறந்த பொருளாதார அறிஞர். பொருளாதாரத் துறையில் பெரும்பாலானோர் பொருளாதார வரலாற்றையே ஆய்வுப்பொருளாக எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.பாலகிருஷ்ணன் அவர்கள் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் (School of Economic Studies, University of Leeds), தனது முதுமாணிப் பட்டத்திற்காக Government Finance and Monetary expansion in Ceylon (1955-1965) என்ற ஆய்வேட்டைச் சமர்ப்பித்திருந்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி மூலக் கல்வி ஆரம்பித்த காலப்பகுதியில், பொருளாதாரப் பிரிவுகள் அனைத்திலும் அயராது விரிவுரையாற்றிய அவரின் கடமையுணர்வு மிகமிக மெச்சத் தக்கது. ‘தேவை ஏற்படும்போது பல்வேறு பொறுப்புகளையும் கையேற்றுத் திறனோடு செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்’.

என்று உலகவங்கியின் பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த கலாநிதி சரத் ராஜபத்திரன குறிப்பிடுகிறார். இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை உருவாக்கத்தில், பாலகிருஷ்ணன் அவர்களின் இலங்கை நாணய நிலைமை பற்றிய ஆய்வேடு மிகவும் உதவியிருக்கிறது. பாலகிருஷ்ணன் நாணயமும் நேர்மையும் மிக்க கனவான். ஒரு பல்கலைக்கழகம் கொண்டிருக்கவேண்டிய பெரும் ஆளுமை அவர்.

பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறையினருடனும் ஓரினிய குடும்பமே போன்று உறவாடி மகிழ்ந்த நாட்கள், ஆறு ஆண்டுகளின் பின் முடிவுக்கு வந்தன. 1982 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், சாவகச்சேரி போலிஸ் நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளுக்கு புகலிடம் வழங்கிய குற்றச்சாட்டில் நான் கைது செய்யப்பட்டேன். குருநகர் இராணுவ முகாமிற்கும், பின்னர் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கும் கொண்டு செல்லப்பட்டு, சிறை வைக்கப்பட்டேன்.

குருநகர் இராணுவ முகாமில் நான் தடுத்துவைக்கப்பட்டு மூன்று வாரங்கள் கழிந்த நிலையில் மேஜர் சரத் முனசிங்க அந்தத் துயரச் செய்தியை என்னிடம் சொன்னார். அதிர்ந்து போனேன்.யாழ். பல்கலைக்கழகத் தலைவர் கைலாசபதி மறைந்து போனார் என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை.ஐம்பது வயதைத் தாண்டுவதற்குள் அவர் காலன் வசப்பட்டது உண்மையில் எனக்கு அதிர்ச்சிச் செய்திதான். எனக்கு ஓர் ஆசிரியன் என்பதற்குமப்பால், இனிய நண்பராகவும் இருந்தார். மாண்பு மிக்க மனிதர் அவர்.

நான் யாழ்ப்பாணத்தில் இருந்த நாட்கள் கொந்தளிப்பானவை. அரசின் இனவாதக் கொடுங் கரங்கள் யாழ் மண்ணைக் கந்தக பூமியாக மாற்றிக்கொண்டிருந்த நேரம் அது. ‘நான் இளவயதில் குத்துச் சண்டை வீரனாக இருந்திருக்கிறேன். முகத்தில் குத்துவதுபோல் பாவனை பண்ணிக்கொண்டு , வயிற்றில் குத்துவதுதான் அந்தச் சண்டையின் யுக்தி. உண்மைதான்.

நான் ஒரு schemer தான்’ என்று வாக்குமூலம் தந்து, 21 ஜூலை 1977 இல் தனது தேர்தல் வெற்றிக்கு விளக்கம் தந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பதவியேற்று ஒரு மாத காலத்தில் கட்டவிழ்த்து விட்ட இனக்கலவரத்தில் நூற்றுக்கணக்கான மலையகத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வாழ்ந்த லயங்கள் கொளுத்தப்பட்டன.

‘இலங்கையில் ஒரு பெருந் துயரச் சம்பவம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் நடந்து முடிந்த தேர்தலுக்குப்பின், அரசியல் முரண்பாடு என்பது இனப்படுகொலையாக மாறிக்கொண்டிருக்கிறது.’ என்று The Times (20.9.1977) என்று லண்டன் ஏடு செய்தி வெளியிட்டது.

1978 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி விடுதலைப் புலிகள் தடைச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் அது பயங்கரவாத தடைச் சட்டமாக உருமாற்றம் பெற்றபோது, தமிழ் இளைஞர்களுக்கு எதிரான சுருக்குக் கயிறாகவே அது தோற்றம் தந்தது.

யாழ். நூல் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் வண.பிதா போல் கெஸ்பர்ஸ் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கெதிராக நிகழ்த்திய கூட்டத்தில் நான் பங்கு கொண்டிருந்தேன். தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தச் சட்டத்திற்கெதிரான எந்தக் கண்டனக் கூட்டத்தையும் நடத்தவில்லை.

1979 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் திகதி பிரிகேடியர் ‘Bull’ வீரதுங்க இலங்கையின் முழு இராணுவப் படையின் பொறுப்பதிகாரியாக அமர்த்தப்பட்டு, 31.12.1979 திகதி முடிவில் பயங்கரவாதத்தை முற்றாக யாழ்ப்பாணத்திலிருந்து ஒழித்துவிடவேண்டும் என்ற ராஜாங்க கட்டளையுடன் வடக்கிற்கு அனுப்பப்பட்டார்.

பதினோராம் திகதி யாழ்ப்பாணம் சென்ற பிரிகேடியர் வீரதுங்கவின் பணிப்பின்பேரில் பதின் மூன்றாம் திகதி (13.7.1979) இரவு இன்பம் (27 வயது), செல்வம் (29) என்ற இரண்டு இளைஞர்கள் கடத்தப்பட்டு, மறுநாள் காலை பண்ணைப் பாலத்தில் கொடூரச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் வீசி எறியப்பட்டிருந்தன.

என் நெஞ்சில் ரணத்தை ஏற்படுத்திய நிகழ்வு இது.மரணங்கள் கெளவிக் கொண்ட இரவுகள்.
அந்த ஆண்டின் முடிவில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று, தனக்குத் தந்த பணியைச் செவ்வனே செய்து முடித்து விட்டதாக அறிவித்த வீரதுங்கவிற்கு பாராட்டுத் தெரிவித்து, அவரைக் கனடாவின் இலங்கைத் தூதுவராக அனுப்பி வைத்தார் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன.

மாவட்ட அபிவிருத்திச் சபைகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யப்போவதாக அறிவித்தபோது, அரசாங்கத்தின் ஆணைக்குழு சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத் தென்னாசியாவில் கருத்தரங்கு நடத்திய நிகழ்வில், ‘சிறுபான்மையினத்தின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளாமல் அரசு தயாரிக்கும் எந்தப் பிரதேச அபிவிருத்தித் திட்டமும் வெற்றியளிக்கமாட்டாது’ என்று கூறியிருந்தேன்.

மாவட்ட அபிவிருத்திச் சபை பற்றிய கருத்தரங்கிற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி பெருங் கண்டனத்தைத் தெரிவித்தது. அறிவார்ந்த ஒரு பார்வையை அவர்கள் ஏற்றுக் கொள்ள இயலாமலிருந்தது எனக்கு வியப்பளித்தது.

யாழ்ப்பாண எம்.பி. வெ.யோகேஸ்வரன் ஒரு வெள்ளாந்தி மனிதர். ‘தமிழ் மக்களின் உயர்கல்விக்கூடமான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பற்றி தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கை சார்ந்த நிலைப்பாடு என்ன?’ என்று நான் அவரிடம் நேசமாகவே கேட்டிருக்கிறேன். ஆபத்தான சந்தர்ப்பங்களில் இளைஞர்களுக்கு உதவும் மெல்லிதயம் கொண்டவர். அந்த நல்லெண்ணமே அவரின் உயிரைக் காவு கேட்டிருந்தது என்பது துயரக் கதை .

25.3.1981இல் நீர்வேலி வங்கிக் கொள்ளை நாட்டைத் திடுக்கிடவைத்தது.

1.6.1981 இல் யாழ்ப்பாணப் பொதுநூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டது. மறுநாள் காலை, காகிதச் சாம்பரால் மூடப்பட்டிருந்த அந்த நூல் நிலையத்தைப் பார்த்துச் சிந்தை நொந்தவன் நான். நூல்கள் எப்போதும் எனது பொக்கிஷங்கள். எத்தகைய பேரழிவு இது.அமைச்சர்கள் யாழ்ப்பாணம் வந்து செய்து முடித்துவிட்டுச் சென்ற கோர நாடகம்.இந்த அவலங்களை யார் பொறுப்பார்?

‘ஈழநாடு’ எரியுண்டது. மக்கள் நெஞ்சங்களில் ஆத்திரம் கனன்று கொண்டிருந்தது.
1981 ஆம் ஆண்டு சோகத்தோடு விடை பெற்றது. எதிர்காலத்தில் அந்த மண்ணில் நிகழப்போகும் அனர்த்தங்களுக்கு முன் நிமித்தமாக எல்லாமே நடந்து முடிந்திருந்தன.

மு.நித்தியானந்தன்

Share.
Leave A Reply