சிரியா உள்நாட்டுப் போர் எதிரொலியாக, தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றிய நிலையில், நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் விமானம் திடீரென மாயமானதால் குழப்பமான சூழல் நிலவுகிறது.
சிரியாவில் நிலவும் நெருக்கடியான சூழல் விரிவாக இங்கே…
1. 2010-களின் முற்பகுதியில் அரபு நாடுகளில் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள், கிளர்ச்சிகள் வெடித்தன. அரபு வசந்த புரட்சி என அழைக்கப்பட்ட அந்த கிளர்ச்சி, 2011-ல் சிரியாவிலும் நுழைந்தது. பஷர் அல் அசாத் ஆரம்பத்தில் இந்த கிளர்ச்சியால் சற்று நிலைகுலைந்தாலும், கிளர்ச்சியாளர்களை விரட்ட ரஷ்யாவும் ஈரானும் அவருக்கு உதவியதால் தப்பித்தார்.
2. அன்றிலிருந்து சிரியா உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டது. ஆனால் சிரிய இராணுவமும் அதன் கூட்டாளிகளும் கிளர்ச்சியாளர்களை கட்டுக்குள் வைத்திருக்க முடிந்ததால், கடந்த சில ஆண்டுகளாக சிரியா அமைதியாக இருந்தது.
3. இந்த நிலையில் தான், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ஆயுதக்குழு அடங்கிய கிளர்ச்சியாளர்கள் குழு கடந்த வாரம் அலெப்போ நகரத்தைக் கைப்பற்றியபோது உள்நாட்டுப் போர் தீவிர கட்டத்தை எட்டியது. இத்தனை ஆண்டுகளில் சிரிய கிளர்ச்சியாளர்களின் முதல் அதேநேரம் மிகப்பெரிய முன்னேற்றமாக இது அமைந்தது.
4. கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸை முற்றுகையிடத் தொடங்கிய பயணத்தில், பல சிறிய நகரங்கள் வீழ்ந்தன. தாரா, குனீத்ரா, சுவைதா மற்றும் ஹோம்ஸ் அதில் முக்கியமானவை. சிரியாவின் கூட்டாளிகளான ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டும் போரில் ஈடுபட்டுள்ளதால், சிரிய ராணுவத்துக்கு உதவ முடியாத நிலை உண்டானது. இதனால், கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸை நோக்கி தைரியமாக முன்னேறினர்.
5. ஞாயிற்றுக்கிழமை காலை சைட்னாயா சிறைச்சாலையைக் கைப்பற்றிய அவர்கள், அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சியால் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளை விடுவித்தனர்.
6. பின்னர் சில மணிநேரங்களில் டமாஸ்கஸ் நகருக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள், கடந்த ஐந்து தசாப்தங்களாக இருந்த ஆட்சியை வீழ்த்தினர். 24 ஆண்டுகளுக்கு முன்பு பஷர் அல் அசாத் அதிபராகப் பதவியேற்பதற்கு முன், அவரது தந்தை ஹபீஸ் அல் அசாத் இரும்பு கரம் கொண்டு சிரியாவை ஆட்சி செய்தார். ஆனால், இந்த இரண்டு ஆட்சியையும் கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்தனர்.
7. தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சி குழு கைப்பற்றியதால், எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைத்து ஆட்சியை ஒப்படைக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சிரிய பிரதமர் முகமது ஜலாலி அறிவித்தார். அவர், பொதுக் கட்டிடங்கள் அனைவருக்கும் சொந்தமானது என்பதால் அவற்றை சேதப்படுத்த வேண்டாம் என்றும் கிளர்ச்சிக் குழுக்களைக் கேட்டுக் கொண்டார்.
8. கிளர்ச்சியாளர்கள் தலைநகருக்குள் நுழைந்தபோதே அதிகாலையில் அதிபர் அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகின்றன. தற்போது அவரது இருப்பிடம் தெரியவில்லை.
9. ஜோர்டான் நாட்டில் வைத்து அசாத்தின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
10. அசாத் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் கிளர்ச்சிக் குழுக்கள், டமாஸ்கஸை ‘கொடுங்கோலன் அசாத்’ இல்லாததாக அறிவித்தன. மேலும் அசாத் மற்றும் அவரது தந்தை சிலைகளை இடித்து வருகின்றன.