யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கு முன்னர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியராக கடமையாற்றும் போது மன்னார் வைத்தியசாலைக்குள் பிரவேசித்து வைத்தியசாலையின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாக மன்னார் வைத்தியசாலையின் பணிப்பாளர் மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்போது, இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் இராமநாதன் அர்ச்சுனா மன்னார் வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து இடையூறு விளைவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.