உக்ரைன் மீது ரஷியா திடீரென படையெடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவிகளை உக்ரைன் பெறுவதற்குள், உக்ரைனின் பல நகரங்களை ரஷியா பிடித்துக்கொண்டது. அதன்பின் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள ரஷியா படைகளை குவித்துள்ளது.
அதேவேளையில் உக்ரைன் இழந்த பகுதிகளை மீட்க அமெரிக்கா உதவியுடன் சண்டையிட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் உக்ரைன் ரஷியாவின் குறிப்பிட்ட இடங்களை பிடித்து அதிர்ச்சி அளித்தது. அதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை மீண்டும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் போக்ரோவ்ஸ்க் நகரை கைப்பற்றுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ரஷியப்படைகள் சண்டையிட்டு வருகின்றன. தற்போது நகரத்தை நெருங்கியுள்ளது. இதனால் நகரத்தை சுற்றி கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது என உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் படைகள் மீது தாக்குதல் நடத்தும் ரஷியப்படைகளின் 40 முயற்சிகளை முறியடித்துள்ளோம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.டொனட்ஸ்க் பிராந்தியத்தை சுற்றி உக்ரைன் பாதுகாப்பை அதிகப்படுத்திய நிலையில், ரஷியா டொனட்ஸ்க் பிராந்தியத்தின் அருகில்உ ள்ள டொன்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களை குறிவைத்துள்ளது.
ராணுவ வீரர்கள் மற்றும் கடுமையான ஆயுதங்கள் மூலமாக உக்ரைன் போர் பாதுகாப்பை உடைத்து முன்னேற ரஷிய படைகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா படையெடுப்பதற்கு முன் போக்ரோவ்ஸ்க் நகரில் 60 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். டொனட்ஸ்க் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கான முக்கிய பாதுகாப்பு பகுதியாக இது இருந்து வருகிறது.
இந்த பகுதியை ரஷியா பிடித்தால் டொனட்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷியாவுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்.ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியால் உக்ரைன பதிலடி கொடுப்பதால் ரஷிய ராணுவம் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், உக்ரைனுக்கு வழங்கும் நிதியுதவியை குறைக்க வாய்ப்புள்ளதால், இது உக்ரைனுக்கு கவலை அளிக்கும் விதமாக இருக்கும்.