குவைத்தில் பணியாற்றி வரும் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உறவினரை விமானம் ஏறி வந்து கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட் பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேய பிரசாத். இவர் குவைத்தில் பணியாற்றி வரும் நிலையில் இவரின் 12 வயது மகள், ஒபுலவாரிப்பள்ளி கிராமத்தில் உள்ள மனைவியின் சகோதரி வீட்டுக்கு சென்றபோது அங்கு அந்த சகோதரியின் 59 வயதான மாமனார் ஆஞ்சநேயலு சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது தந்தையிடம் அலைபேசியில் கூறியுள்ளார். உறவினர் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தந்தை ஒரு முடிவுடன் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வந்துள்ளார். அதன்படி கடந்த சனிக்கிழமை அதிகாலை தனது கிராமத்திற்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ஆஞ்சநேயலுவை அடித்துக் கொன்றுவிட்டு, அதே நாளில் குவைத் திரும்பினார்.
கொலையைத் தொடர்ந்து குவைத் சென்ற பிரசாத் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் தனது மகளின் புகாரின் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தான் கொலை செய்ததாக கூறியிருக்கிறார் . இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்வதற்கு ஆவன செய்து வருகின்றனர்.