தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா தமிழ் சினிமாவுல கோலோச்சிய நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ்.
“என் கணவர் இறந்தப்போ அவரோட இறுதிச் சடங்கை நான்தான் செஞ்சேன். இது சம்பந்தமா பொதுவெளியில நிறைய விமர்சனங்கள் வந்துச்சு. ஆனா, அதை நினைச்செல்லாம் நான் துளிகூட கவலைப்படல. ஏன்னா, என் கணவரை நான் நிறைய லவ் பண்றேன். அவருக்கு எது பிடிக்கும்… அவர் எதை எதிர்பார்ப்பார் அப்படிங்கறது என்னைவிட வேறு யாருக்குத் தெரியும்?” – தன் கணவர் இறப்புக்குப் பிறகு, முதல்முறையா விகடனுக்குக் கொடுத்த பேட்டியில நடிகை மீனா சொன்ன நெகிழ்ச்சியூட்டும் வார்த்தைகள் இவை.
ரோலர் கோஸ்டர் வாழ்க்கை
ஆமாங்க… 1990-கள்ல கொஞ்சல் பேச்சும், மிரட்டல் நடிப்பும், மயக்கும் வசீகரத்துடன் தமிழ் சினிமாவைக் கட்டி ஆண்ட மீனாவோட வாழ்க்கை, ரோலர் கோஸ்டர் மாதிரி ஏற்ற இறக்கங்கள் நிறைஞ்சதாதான் இருந்திருக்கு. அத்தனையையும் அசாத்திய மன உறுதியோடு எதிர்கொண்டு, ‘மீனா பொண்ணு… மீனா பொண்ணு’னு ரசிகர்கள் கொண்டாடுற நாயகியா 42 வருஷங்களா தமிழ் சினிமாவுல தனக்குன்னு நிலையான இடத்தைத் தக்க வச்சுக்கிட்டிருக்கிறாங்க.
குறிப்பா, இவரின் வெட்டும் விழிகள், தென்னிந்திய ஆண் ரசிகர்கள் பல லட்சம் பேரை மயங்க வெச்சது, 1990-களின் சுவாரஸ்யமான சினிமா வரலாறு. எவர்கிரீன் பியூட்டி குயின் மீனாவோட இன்ஸ்பயரிங்கான திரைப் பயணத்தைதான் இந்த எபிசோடுல பார்க்கப் போறோம்.
மீனா பிறந்தது சென்னையில. இவங்க அப்பா துரைராஜ் ஆந்திராவைச் சேர்ந்தவர். அம்மா ராஜ் மல்லிகாவோ கேரளாவைச் சேர்ந்தவங்க. ராஜ் மல்லிகாவின் தங்கை ராஜ் கோகிலா ஒரு நடிகை. ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘தேடிவந்த மாப்பிள்ளை’, ‘வெள்ளி விழா’ உள்ளிட்ட பல படங்கள்ல ராஜ் கோகிலா நடிச்சிருக்காங்க. இது தவிர மீனா குழந்தையா இருந்தப்போ அவங்க அம்மா அரசியல்ல இருந்தாங்க. இதன் காரணமா நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இவங்க குடும்பத்துக்கும் நல்ல நட்பு இருந்திருக்கு.
சினிமா என்ட்ரி பத்தி மீனா..!
“ஒரு தடவை சிவாஜி சாரோட பிறந்தநாளுக்கு விஷ் பண்றதுக்காக அவங்க வீட்டுக்கு நானும் என் அம்மாவும் போயிருந்தோம். அப்போ எனக்கு நாலு வயசு இருக்கும். சிவாஜி சாருக்கு ஹேப்பி பர்த்டே சொல்லி மாலையை அவர் கழுத்துல போட்டேன். மேஜர் சுந்தர்ராஜன் சார் இயக்கத்துல சிவாஜி சார் நடிக்கவிருந்த ‘நெஞ்சங்கள்’ படத்துக்கு அந்தப் படக்குழு குழந்தை நட்சத்திரத்தைத் தேடிக்கிட்டிருந்த நேரம் அது. என் பேச்சு, நடவடிக்கைகள் சிவாஜி சாருக்கு ரொம்ப பிடிச்சுப்போக, சிவாஜி சார் மூலமா 1982-ல ‘நெஞ்சங்கள்’ படத்துல குழந்தை நட்சத்திரமா அறிமுகமானேன்” – இது, தன் சினிமா என்ட்ரி பத்தி விகடன் பேட்டி ஒண்ணுல மீனா சொன்ன ஸ்டேட்மென்ட்.
அடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளா ‘எங்கேயோ கேட்ட குரல்’ திரைப்படத்துல நடிச்சதுதான் மீனாவின் சினிமா வாழ்க்கையில பெரிய திருப்புமுனையா அமைஞ்சது. அதன்பிறகு, பல படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்ச மீனா, 1984-ல ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்துல மீண்டும் ரஜினியோட இணைஞ்சு நடிச்சாங்க. மாற்றுத்திறனாளிப் பெண்ணா ‘ரோஸி’ங்கிற பாத்திரத்துல கோபமும் அன்பும் நிறைஞ்ச குட்டிச் சுட்டியா மீனா அசத்தியிருப்பாங்க. அந்தப் படத்துல, ‘முத்துமணிச் சுடரே வா’ பாடலின் இடையிடையே தெத்துப்பல் சிரிப்புடன், ‘ரஜினி அங்கிள் நான் இங்க இருக்கேன்’ அப்படின்னு இவங்க க்யூட்டா சொல்றது, இன்னைக்கு வரைக்கும் தமிழ் மக்களோட ப்ரியத்துக்குரிய காட்சியா இருக்கு.
க்யூட் அண்டு பப்ளியான குழந்தை நட்சத்திரமா தமிழ், தெலுங்கு, மலையாளம்னு 40-க்கும் மேற்பட்ட தென்னிந்திய மொழிப் படங்கள்ல நடிச்ச இவங்க, பரதநாட்டிய டான்ஸரும்கூட. இந்தக் குழந்தையை, ‘என் ராசாவின் மனசிலே’ படத்துல குமரியா பார்த்தப்போ, ‘அடடே… மீனா பாப்பாவா இது… நம்பவே முடியலையே?’னு தமிழ்நாடே ஆச்சர்யப்பட்டுச்சு. அப்போ மீனாவுக்கு 15 வயசுதான். அந்தப் படத்துல முரட்டுத்தனமான கணவரா வரும் நடிகர் ராஜ்கிரணுக்கு ஜோடியா, சோலையம்மா கேரக்டர்ல பட்டையக் கிளப்பியிருப்பாங்க. பக்கா சிட்டி பொண்ணான இவங்க முகத்துல மஞ்சள் பூசி, மேக்கப்பே போடாம நடிச்சிருந்தது அழகான ஆச்சர்யம்.
குறிப்பா, இந்தப் படத்துல வர்ற ‘குயில் பாட்டு வந்ததென்ன இள மானே’ பாட்டுல கணவர் மீது காதல் நிறைந்த கர்ப்பிணிப் பெண்ணா இவங்க வெளிப்படுத்திய எக்ஸ்பிரஷன்ஸ் ஸோ ஸ்வீட். இந்தச் சின்னப் பொண்ணுக்குள்ள இப்படி ஒரு நடிப்பான்னு ரசிகர்கள் வியந்துபோனாங்க.
“படத்துல மட்டுமில்லீங்க… இந்தப் படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்லகூட மீனா என்னைப் பார்த்துப் பயப்படுவாங்க. ஆனா, நடிப்புன்னு வந்துட்டா அவங்களை அடிச்சுக்கவே முடியாது. ஒருசமயம் பாடல் காட்சிக்காக சீக்கிரமா டிரஸ் சேஞ்ச் பண்ண வேண்டியிருந்தது. அப்போ கேரவன் வசதி கிடையாது. மீனா, அலட்டிக்காம டக்குன்னு மரத்துக்குப் பின்னாடி இருந்த மறைவுல டிரஸ் மாத்திக்கிட்டு வந்தாங்க. அவங்க காட்டின அந்தப் பக்குவமான அணுகுமுறையைப் பார்த்து அசந்துப் போயிட்டேன்”னு மீனாவைப் பத்தி நடிகர் ராஜ்கிரண் ஒருமுறை நெகிழ்ச்சியா சொன்னது இந்தத் தருணத்துல குறிப்பிடத்தக்கது.
‘என் ராசாவின் மனசிலே’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகவே, அதுக்கப்புறமா ‘இதய ஊஞ்சல்’, ‘இதய வாசல்’ உட்பட நிறைய தமிழ்ப் படங்கள்ல ஹீரோயினா நடிச்ச மீனாவுக்கு, தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு பல மொழிகள்லயும் வாய்ப்புகள் குவிஞ்சது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளா நடிச்சிருந்த மீனா, 1993-ம் வருஷம் அவருக்கு ஜோடியா ‘எஜமான்’ படத்துல நடிக்க கமிட்டானப்போ, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் செம சர்ப்ரைஸ் ஷாக். இந்த லிஸ்ட்டுல முதல்ல கண்கள் விரிய மிரண்டுபோனது நம்ம மீனாதான்.
”ரஜினி சாருக்கு ஜோடியா நடிக்கப் போறோம்ங்கிறதை கடைசிவரைக்கும் என்னால நம்பவே முடியல. ஒரு குழந்தையா அவர்கூட பழகியது வேற. இப்போ ரஜினி சார்கிட்ட எப்படி நடந்துக்கணும்… எப்படிப் பேசணும்னு நிறைய யோசிச்சேன். ‘எஜமான்’ ஷூட்டிங் ஸ்பாட்ல எல்லார்கூடவும் நான் நல்லா பேசினாலும், ரஜினி சாரை பாத்தா மட்டும் தலையைக் குனிஞ்சுக்கிட்டு சைலன்ட்டா போய்டுவேன்”னு அந்தப் படத்துல தான் நடிச்ச வைத்தீஸ்வரி கேரக்டர் மாதிரியே, வெட்கச் சிரிப்புடன் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியான நினைவுகளைச் சொல்லியிருக்காங்க மீனா.
வாட்டசாட்டமான உயரம், முதிர்ச்சியான நடிப்பு, க்யூட்டான எக்ஸ்பிரஷன்ஸூடன் ‘எஜமான்’ படத்துல சூப்பர் ஸ்டாருக்குப் பொருத்தமான ஜோடியா மீனா பொருந்திப்போனாங்க. அதுக்குப் பிறகு, நிக்க நேரமில்லாம பரபரன்னு நடிக்க ஆரம்பிச்சாங்க. விஜயகாந்துடன் ‘சேதுபதி ஐபிஎஸ்’, பிரபுவோட ‘ராஜகுமாரன்’, சரத்குமாருடன் ‘நாட்டாமை’ மற்றும் ‘மாயி, சத்யராஜுடன் ‘தாய்மாமன்’ கார்த்திக்கோட ‘மருமகன்’, அர்ஜுனுடன் ‘செங்கோட்டை’, அஜித்துடன் ‘ஆனந்தப் பூங்காற்றே’, ‘வில்லன்’, ‘சிட்டிசன்’ மற்றும் பிரபுதேவாவோட ‘நாம் இருவர் நமக்கு இருவர்’னு அன்றைய தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடியா நடிச்சு, தமிழ் சினிமாவுல உச்சத்துக்குப் போனாங்க.
குறிப்பா, ‘சேதுபதி ஐபிஎஸ்’ படத்துல வர்ற ‘சாத்து நடை சாத்து’ பாட்டுல இவங்க டான்ஸூம், ‘ராஜகுமாரன்’ படத்துல வர்ற ‘என்னவென்று சொல்வதம்மா’ பாட்டுல இவங்க எக்ஸ்பிரஷன்ஸும் வேற லெவல்ல இருக்கும். அந்தநேரத்துல மீனா டாக் ஆப் த டவுனா இருந்ததால, ‘நாட்டாமை’ படத்துல ‘மீனா பொண்ணு மீனா பொண்ணு’னு இவங்க பேரை வச்சே டூயட் பாட்டு வந்து, பெரிய ஹிட்டாச்சு. ‘எஜமான்’ படத்துக்குப் பிறகு, ரஜினிகாந்துடன் ‘வீரா’, ‘முத்து’ படங்கள்லயும் மீனா ஜோடி சேர்ந்தாங்க. அதுல, ‘முத்து’ திரைப்படம் இவரோட கரியர்ல மிக முக்கியமான படமா மாறுச்சு. அன்பு, அறிவு, அழகுனு அந்த வசீகர ரங்கநாயகி, ரஜினியை மட்டுமில்ல, தமிழ் ரசிகர்கள் எல்லாரையுமே சொக்க வெச்சாங்க.
ரெண்டு டூயட் பாடல், சில காதல் காட்சிகள்னு சும்மா பேருக்காக வந்து போகிற ஹீரோயினா மட்டுமே நடிக்காம, தன் நடிப்புக்குச் சவால் விடுற வகையிலான கேரக்டர்களையே மீனா அதிகளவுல தேர்ந்தெடுத்து நடிச்சாங்க. ‘அவ்வை சண்முகி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘வள்ளல்’, ‘பொற்காலம்’, ‘வானத்தைப்போல’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘இவன்’, ‘குசேலன்’ உட்பட மீனாவின் ஹிட் கிராஃப் சொல்ல பெரிய பட்டியலையே சொல்லலாம். குறிப்பா, ‘பாரதி கண்ணம்மா’ படத்துல ‘கண்ணம்மா’ங்கிற தன் கதாபாத்திரத்துல நடிச்சு, காதலோட வலியைத் தன் கண்கள் வழியா தத்ரூபமா ஆடியன்ஸ்கிட்ட கடத்தியிருப்பாங்க. அதேமாதிரி ‘பொற்காலம்’ படத்துல நெசவுத்தொழில் செய்ற குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணா இவங்க காட்டிய பாந்தமான நடிப்பு, ‘மீனா மீனாதான்’ அப்படின்னு எல்லாரையும் வியக்க வெச்சது.
‘ரிதம்’
ஆனா, இவை எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிடுற வகையில மீனாவுக்குக் கிடைச்ச முக்கியமான படம்தான் ‘ரிதம்’. அலுப்பூட்டுற செயற்கையான காதல் வசனங்கள் எதுவும் இல்லாம மீனாவும் அர்ஜுனும் ஒருத்தர் மேல ஒருத்தர் அன்பு செலுத்துற காட்சிகள், நுட்பமான கவிதை மாதிரி இருக்கும். அதுலயும், தான் பெறாத குழந்தைக்கு சிங்கிள் பேரன்ட்டா மறுமணம் பண்ணிக்காம வாழுற மீனாவின் நடிப்பு, மனதை நெகிழ வைக்கும்.
அப்போதைய முன்னணி ஹீரோக்கள் எல்லாருடனும் ஜோடி சேர்ந்த மீனா, விஜய்கூட சேர்ந்து நடிக்காதது ரசிகர்களுக்குப் பெரிய வருத்தமா இருந்துச்சு. ‘ஷாஜகான்’ படத்துல வர்ற ‘சரக்கு வெச்சிருக்கேன்’ பாட்டுல விஜய்கூட டூயட் ஆடி, ரசிகர்களின் ஆசையை நிறைவேத்தினாங்க. நடிப்புல மட்டுமல்ல, டான்ஸ்லயும் எவ்ளோ பெரிய நடிகரா இருந்தாலும் செம டஃப் கொடுத்தாங்க. இப்படி தன் தேர்ந்த நடிப்பாலும் உழைப்பாலும் தமிழ் சினிமால தனக்குன்னு நிலையான சிம்மாசனத்தைப் பிடிச்ச மீனா, 2009-ல பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் இன்ஜினீயரான வித்யாசாகரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.
கல்யாணத்துக்குப் பிறகும் தனக்கேத்த கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிச்ச மீனா, மலையாள சினிமால பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘திருஷ்யம்’, ‘திருஷ்யம் 2’ உட்பட பல படங்கள்ல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, குணச்சித்திர நடிகையா தன் ரெண்டாவது இன்னிங்ஸ்லயும் ஸ்கோர் பண்ணாங்க. ‘தம்பிக்கோட்டை’, ‘அண்ணாத்த’ படங்களுக்குப் பிறகு, தமிழ்ல இதுவரை வேறு எந்தப் படத்துலயும் மீனா நடிக்கலை. ஆனாலும், டெலிவிஷன், சோஷியல் மீடியா, யூடியூப்னு எல்லா தளங்கள்லயும் மீனா எப்பவுமே பேசுபொருளா இருக்கிறது, தலைமுறையைக் கடந்த இவரின் நடிப்புத்திறனுக்கும் புகழுக்கும் ஆகச்சிறந்த உதாரணம். மீனாவின் செல்ல மகளான நைனிகா, ‘தெறி’ படத்துல விஜய்யின் மகளா நடிச்சு, ரசிகர்களின் அன்பைப் பெற்றாங்க.
இப்படி ரொம்பவே மகிழ்ச்சியா போய்க்கிட்டிருந்த இவங்க வாழ்க்கைல பெரிய இடி ஒண்ணு விழுந்துச்சு. ஆமாங்க… மீனாவின் கணவர் வித்யாசாகர், உடல்நிலை சரியில்லாம 2022-ல் இறந்துட்டார். தன் கணவரோட இழப்பைத் தாங்க முடியாம நொறுங்கிப் போனாலும், அந்த வேதனையை வெளிக்காட்டிக்காம தன் கணவரின் இறுதிச் சடங்கை தானே செஞ்சாங்க. அந்த நேரத்துல விகடனுக்கு மீனா கொடுத்த பேட்டி, பேசுபொருளா மாறுச்சு.
“நான் சினிமா ஃபீல்டுக்கு வந்தவுடனேயே கண்தானம் செஞ்சுட்டேன். ஆனா, உடலுறுப்பு தானம் பத்தின விழிப்புணர்வு அப்போ எனக்கு இல்ல. என் கணவருக்கு நுரையீரல் செயலிழந்து, அந்த உறுப்புத்தானத்துக்காகத் தேடி கஷ்டப்பட்ட நேரத்துலதான் இதோட முக்கியத்துவம் எனக்குப் புரிஞ்சது. அதனால நானும் இப்போ உடலுறுப்பு தானம் செஞ்சிருக்கேன். மண்ணுல மக்கிப் போவதைக் காட்டிலும், ஒரு மனுஷனோட உயிரைக் காக்க நம்ம உடம்பு பயன்பட்டா அதைவிடப் பெரிய விஷயம் வேறென்ன இருக்க முடியும்?” – அப்படின்னு ரொம்ப எமோஷனலா பேசிய மீனா, அதன்பிறகு, வெகு சீக்கிரத்துலயே வலிகளைத் தாண்டிய வலிமையைப் பெற்று, வழக்கம்போல எல்லா விழாக்கள்லயும் தன் கலகல சிரிப்பாலும் துள்ளலான உற்சாகத்தாலும் ஆரவாரத்தைக் கூட்டுறாங்க.
அம்மா, மகளுடன் நடிகை மீனா
‘மீனா மறுமணம் பண்ணிக்கப் போறாங்க… அந்த நடிகரைக் கல்யாணம் செஞ்சுக்கப்போறாங்க… அது… இது’னு ஏகப்பட்ட வதந்திகள் இவரைப் பத்தி வந்துக்கிட்டேதான் இருக்கு. ‘காய்ச்ச மரம் தானே கல்லடிப்படும்’ங்கிற கணக்கா, எந்த வதந்திகளுக்கும் ரியாக்ட் பண்ணாம, தன் மகள், அம்மா, குடும்பம், அன்பான நண்பர்களுடன் ஆனந்தமா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. உண்மையான ரசிகர்கள் எதிர்பார்க்கிறதும் இதை தானே?
இந்த நேரத்துல மீனாவுக்கு நாம சிநேகத்துடன் சொல்ல பாசமான பகிர்வு ஒண்ணும் இருக்கு. வேறென்ன… எந்தக் காயங்களையும் ஆற்றும் சக்தி காலத்துக்கு உண்டு. அதனால, பீனிக்ஸ் பறவைபோல மீண்டும் உயிர்த்தெழுந்து களமாடுங்க; உயரங்களைத் தொடுங்க மீனா. உங்களுக்குத் தமிழ் ரசிகர்களின் ஆதரவு எப்போதும் உண்டு!