இலங்­கையின் அர­சியலானது பெரும் கொந்­த­ளிப்­பு­க­ளுக்குப் பின், நிலை­யா­ன­தொரு அமை­திக்கு சென்­றுள்­ளது. நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்­பெற்ற பொதுத் தேர்­தலில் மக்கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி) தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தியின் வெற்­றி­யா­னது 61 சத­வீத வாக்­கு­க­ளையும் பாரா­ளு­மன்­றத்தில் 225 ஆச­னங்­களில் 159 ஆச­னங்­க­ளையும் பெற்று இலங்­கையின் தேர்தல் அர­சியல் வர­லாற்றில் பெரும் மாற்­றத்­திற்கு வித்­திட்­டுள்­ளது. இந்த வெற்­றியே நாட்டில் அர­சியல் அமைதி ஏற்­பட கார­ண­மா­கவும் உள்­ளது.

எனினும், நாட்டின் சிறு­பான்மை இன மக்­களின் எதிர்­பார்ப்­புகள் புதிப்­பிக்­கப்­பட்­டுள்ள சூழலை அண்­மைய இரு தேர்­தல்­களும் உணர்த்­தி­யுள்­ளன. தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு மாகா­ணத்தில், குறிப்­பாக யாழ்ப்­பா­ணத்தில் ஒரு தனிக் கட்­சி­யாக அதிக வாக்­கு­களை தேசிய மக்கள் சக்தி பெற்­றுக்­கொண்­டுள்­ளது. இது­வரைக் காலமும் யாழ்ப்­பாணம், திரு­கோ­ண­மலை, வன்னி மற்றும் அம்­பாறை ஆகிய மாவட்­டங்­களில் தென்­னி­லங்கை சார்ந்த அர­சியல் கட்­சிகள் காலூன்றுவது சவா­லா­கவே இருந்­துள்­ளது.

குறிப்­பாக, யாழ்ப்­பா­ணத்தை பொறுத்த வரையில், இலங்­கையின் இனப் பதட்­டங்­க­ளுக்கும் அர­சியல் இயக்­கங்­க­ளுக்கும் மைய­மாக இருந்­துள்­ளது. ஒரு சுதந்­தி­ர­மான தமிழ் அரசை உரு­வாக்க தமி­ழீழ விடு­தலைப் புலிகள் முனைந்­ததால் உள்­நாட்டுப் போரின் மையப் புள்­ளி­யா­கவும் யாழ்ப்­பாணம் உள்­ளது. எனவேதான் இன்­ற­ளவில் குறிப்­பி­டத்­தக்க அர­சியல் மற்றும் கலா­சார முக்­கி­யத்­துவம் வாய்ந்த மாவட்­ட­மா­கவும் தொடர்­கி­றது.

யாழ்ப்­பாணம், வன்னி மற்றும் பிற சிறு­பான்­மை­யினர் ஆதிக்கம் செலுத்தும் வடக்கு கிழக்கு மாவட்­டங்­களில் தேசிய மக்கள் சக்தி பெற்ற வெற்­றி­யா­னது பாரம்­ப­ரிய தமிழ்க் கட்­சி­களை இரண்டாம் அல்­லது மூன்றாம் இடத்­திற்கு தள்­ளி­யது.

சிறு­பான்­மை­யினத்தவர்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்க தலை­மை­யி­லான புதிய அர­சாங்­கத்தின் தேர்தல் வெற்­றியை ஆராய்­வதன் ஊடாக, பாரம்­ப­ரிய பிர­தேச அர­சியல் கட்­சி­களை நிரா­க­ரிக்கும் பரந்த போக்­கு­களின் பின்­ன­ணியில், தமிழ் தேசி­ய­வாத அர­சி­யலின் சிதை­வுகள் வெளிப்­ப­டு­கின்­றன.

தேசிய அர­சியல் மீதான அதி­ருப்­திகள்

பொதுத் தேர்­த­லுக்குப் பின்னர் இன­ரீ­தி­யான தேர்தல் எல்­லை­களை தேசிய மக்கள் சக்­தியால் கடக்க முடிந்­துள்­ளது. தேசிய மக்கள் சக்தி அர­சாங்கம் குறித்து யாழ்ப்­பாண மக்­களின் நிலைப்­பா­டு­களும் உரை­யா­டல்­களும் இந்த வாதத்தை மீண்டும் வலி­யு­றுத்­து­கின்­றன.

செப்­டெம்பர் 21ஆம் திகதி இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் வடக்கில் தேசிய மக்கள் சக்­தியின் (ஜே.வி.பி) கடந்­த­கால மோச­மான செயற்­பா­டு­களை ஏனைய கட்­சிகள் தேர்தல் பிர­சார மேடை­களில் தெரி­வித்­தி­ருந்த போதிலும், பெரும்­பா­லான மக்கள் அவற்றை ஏற்­றி­ருக்கவில்லை. மேலும் சிலர் தேசிய மக்கள் சக்­தியின் கொள்­கைகள் பற்றி தெரி­யாது என்றும் அதில் நம்­பிக்கை இல்லை என்றும் கூறி­யி­ருந்­தார்கள்.

எவ்­வா­றா­யினும், ஜனா­தி­பதித் தேர்­தலில் அநு­ர­கு­மார திசா­நா­யக்க வெற்­றி­பெற்று அர­சியல் அதி­கா­ரத்தை பொறுப்­பேற்­றதும், சில இரா­ணுவ முகாம்­களை மூடி­ய­துடன் காணி விடு­விப்பு போன்ற பல சாத­க­மான நட­வ­டிக்­கை­களை வடக்கில் மேற்­கொண்டார்.

சிங்­கள மக்கள் ஆதிக்கம் செலுத்தும் தென்­னி­லங்­கையில், மேல்­தட்டு அர­சியல் மீதி­ருந்த வெறுப்­பு­ணர்­வுகள் அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவின் பெரும் வெற்­றிக்கு உயிர்­கொ­டுத்­தது போன்று, வடக்கில் பாரம்­ப­ரிய தமிழ்க் கட்­சிகள் மீதான மக்­களின் விரக்தி நிலை அவர்­களின் அர­சியல் எதிர்­கா­லத்தை கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ளது.

வடக்கில் காலா­கா­ல­மாக நிலை­கொண்­டி­ருந்த அர­சியல் சக்­திகள் அந்த மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வதில் தோல்­வி­கண்­டுள்­ளனர். மறு­புறம், புதி­தாக ஸ்தாபிக்­கப்­பட்ட கட்­சிகள் உட்­பட பரந்த அள­வி­லான அர­சியல் கட்­சிகள் மற்றும் வேட்­பா­ளர்கள், தமி­ழர்­களின் வாக்­கு­களை துண்­டா­டி­ய­மை­யினால், தேசிய அரங்கில் அந்த மக்­களின் அர­சியல் நிலைப்­பாடு பல­வீ­ன­ம­டைந்­தது.

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்­சியின் மூத்த தலைவர் ஆர்.சம்­பந்­தனின் மறைவைத் தொடர்ந்து ஏற்­பட்ட அர­சியல் உட்­பூ­சல்­களும் ஒரு பங்கைக் கொண்­டி­ருந்­தன. தேர்தல் வாக்­கு­று­தி­களில் அர்ப்­ப­ணிப்பு இன்மை மற்றும் அதி­காரப் பகிர்வு, போர்க்­கால பொறுப்­புக்­கூறல் ஆகி­ய­வற்றில் பாரம்­ப­ரிய தமிழ் கட்­சிகள் அதிக கவனம் செலுத்­தாதன் மூலமும் தமி­ழர்கள் விரக்­தி­ய­டைந்­துள்­ளனர்.

வாழ்க்கைச் செலவு, வேலை­யில்லாத் திண்­டாட்டம் மற்றும் வீட்டுக் கடன் அதி­க­ரிப்பு போன்ற அடிப்­படை பிரச்­சி­னை­களைத் தீர்க்­காது, அர­சியல் அதி­கா­ரத்தை ஒருங்­கி­ணைக்­கவும் பரா­ம­ரிக்­கவும் நீண்ட கால­மாக இனப் பிள­வு­களை தமிழ்த் தலை­வர்கள் பயன்­ப­டுத்­தினர்.

கொவிட்-19 தொற்று நோய்க்குப் பிறகு அதி­க­ரித்த வாழ்க்கைச் செலவு, குறிப்­பாக உணவு மற்றும் போக்­கு­வ­ரத்துச் செல­வுகள் குறித்து மக்கள் விரக்­தியை வெளிப்­ப­டுத்­திய போதிலும் அந்த மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாக தமிழ் தலை­வர்கள் எதுவும் செய்­ய­வில்லை.

காணி, அபி­வி­ருத்தி, உள்­கட்­ட­மைப்பு நெருக்­க­டிகள்

காணி தொடர்­பான பிரச்­சி­னைகள் பாரிய பிரச்­சி­னை­யாக காணப்­ப­டு­வ­தாக வடக்கு மக்கள் நீண்ட கால­மாக கூறி­வ­ரு­கின்­றனர். அதே போன்று யாழ்ப்­பா­ணத்தின் சில பகு­தி­களில் தற்­போது போதைப்­பொருள் இல­கு­வாகக் கிடைப்­ப­தனால், அந்த பகு­தி­களில் அழுத்­த­மான பிரச்­சி­னை­யாக போதைப்­பொருள் பாவனை மாறி­யுள்­ளது.

இதே­வேளை, கொவிட் – 19 தொற்று நோயின் போது, தின­சரி ஊதியம் பெறு­ப­வர்­க­ளுக்கு வரு­மானம் இல்­லாமை, அர­சி­ட­மி­ருந்து நிதி மற்றும் பொருள் ஆத­ரவு கிடைக்­காமை மற்றும் இயற்கை விவ­சா­யத்தை நோக்கி மாறு­வ­தற்­கான சவால்கள் போன்ற பிரச்சினை­களை வடக்கு மக்கள் நீண்ட கால­மாக கூறி வரு­கின்­றனர். இந்த பிரச்­சி­னையை தீர்ப்­பதில் பாரம்­ப­ரிய கட்­சிகள் அக்­க­றைக்­காட்­ட­வில்லை.

தமிழ் அர­சி­யலில் புதிய தலை­முறை 13 ஆவது திருத்தம் மற்றும் அதி­காரப் பகிர்வு ஆகி­ய­வற்றின் கருப்­பொ­ருளில் குறை­வான பற்­று­தலைக் கொண்­டுள்­ளனர். மறு­புறம் பொரு­ளா­தார சமத்­து­வ­மின்மை, ஊழல் மற்றும் ஆட்­சி­ய­தி­காரம் போன்ற பரந்த அடிப்­ப­டை­யி­லான பிரச்­சி­னை­களை புதிய தலை­முறையினர் ஆத­ரிக்க தொடங்­கி­யுள்­ளனர்.

இதன் தாக்­கத்தை கடந்த ஜனா­தி­பதி மற்றும் பொதுத் தேர்­தல்­களில் எதி­ரொ­லிப்­பு­க­ளாக உணர முடிந்­தது. 45 வய­துக்கு உட்­பட்­ட­ பலருக்கு உள்­நாட்டுப் போரின் நினைவே இல்லை என்றும், அர­சியல் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு பிரச்­சி­னை­க­ளுக்கு அவர்கள் முன்­னு­ரிமை கொடுக்க மாட்­டார்கள் என்றும் யாழ்ப்­பா­ணத்தை சேர்ந்த புத்­தி­ஜீவி ஒருவர் குறிப்­பிட்டார்.

அண்­மையில் நடை­பெற்ற பொதுத் தேர்­தலில் அதி­கா­ரப்­ப­கிர்வு போன்ற விட­யங்­களை முன்­வைத்த தமிழ் அர­சியல் கட்­சிகள் சிறப்­பாகச் செயற்­ப­ட­வில்லை. ஒரே இனப் பின்­ன­ணியைக் கொண்­டி­ருந்­தாலும் தமிழ் அர­சியல் இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கும் அந்த கட்­சி­க­ளுக்கும் இடை­யி­லான புரிதல் எட்­டாத்­தூ­ரத்­தி­லேயே இருந்­தது.

இத்­த­கைய பின்­ன­டை­வுகள் இனி தமிழ் அர­சி­யலில் தமிழ் கட்­சிகள் ஏக அர­சியல் பிர­தி­நி­திகள் அல்ல என்ற கருப்­பொ­ருளை உரு­வாக்­கி­யுள்­ள­துடன், தமிழர் அர­சி­ய­லையும் மாற்­றி­யுள்­ளது. ஆனால், தேசிய மக்கள் சக்­தியின் தேர்தல் பிரச்­சா­ரங்கள், இன நல்­லி­ணக்கம் தொடர்­பான அர­சியல் நிலைப்­பாட்டை மாற்­றி­ய­மைத்­துள்­ளது.

இன­வா­தத்­துக்கு பதி­லாக பல்­லின சமூ­கங்­களை ஒன்­றி­ணைக்கும் வகையில் சமூக ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­தாக தேசிய மக்கள் சக்தி கூறி­யது. இத்­த­கைய அறி­விப்­புகள் இந்த கட்சி மீதான வடக்கின் இளம் சமூ­கத்தின் ஆர்­வத்தை தூண்­டி­யது.

தேசிய மக்கள் சக்தி ஆரம்­பத்தில் யாழ்ப்­பா­ணத்தில் தனது செயற்­பா­டு­களை விரி­வு­ப­டுத்த திணறியது. இதற்கு முக்­கிய கார­ண­மாக, 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­திற்கு எதி­ரான மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் (ஜே.வி.பி) வன்­மு­றைகள் காணப்­பட்­டன. ஆனால், ஜே.வி.பி.யின் மறு­சீ­ர­மைப்­புகள் ஊடான தேசிய மக்கள் சக்­தியின் உதயம் சிறப்­பான பலன்­களை வழங்­கி­யது.

குறிப்­பாக 2020 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்­டுக்கு இடையில் தேசிய மக்கள் சக்தி வடக்கில் விரி­வ­டைந்­தது. உள்­நாட்டுப் போரின் பயங்­க­ரத்தை எதிர்­கொள்­ளாத இளைய தலை­மு­றை­யினர் தேசிய மக்கள் சக்­தியின் கொள்­கைகள், பிர­சாரம் மற்றும் வாக்­கு­று­தி­களை நோக்கி ஈர்க்­கப்­பட்­டனர்.

இதற்கு மாறாக, தமி­ழர்கள் மத்­தியில் ஓர­ளவு ஆத­ரவைக் கொண்ட ஐக்­கிய தேசியக் கட்சி, கடந்த சில வரு­டங்­க­ளாக அடி­மட்­டத்­தி­லி­ருந்தே சீர்­கு­லைந்­துள்­ளது. அது மாத்­தி­ர­மன்றி ஏனைய பெரும் கட்­சி­களும் பல்­வேறு கார­ணி­களின் அடிப்­ப­டையில் மக்­களின் எதிர்ப்­பு­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தன. இந்த சூழல் தேசிய மக்கள் சக்­தியை வடக்கில் வலு­வாக நிலைக்­கொள்ள வழி­வ­குத்­தது.

முக்­கிய நெருக்­க­டி­களின் முன்­னு­ரி­மை­களை மாற்­றுதல்

இரா­ணு­வ­ம­ய­மாக்கல், காணி உரி­மைகள் மற்றும் அதி­கா­ரப்­ப­கிர்வு போன்ற சவால்­க­ளுடன் யாழ்ப்­பாணம் தொடர்ந்து போராடிக் கொண்­டி­ருக்கும் அதே­வேளை, தேசிய மக்கள் சக்தி போன்ற பல­த­ரப்­பட்ட அர­சியல் குரல்­களின் தோற்றம் வடக்கின் அர­சியல் நிலப்­ப­ரப்பில் சாத்­தி­ய­மான மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மக்­களின் பொரு­ளா­தாரப் போராட்­டங்­களில் கவனம் செலுத்­தாமல், இனம் சார்ந்த அர­சியல் முன்­னோக்­கிய பலன்­களை வழங்க வாய்ப்­பில்லை என்­பது தெளி­வா­கி­றது.

சமூக இயக்­கங்­களில் இளை­ஞர்கள் முன்­ன­ணியில் இருப்­ப­தோடு, வேறு­பட்ட யதார்த்­தத்தை தேடு­வதன் மூலம் தீவி­ர­மான மாற்­றங்­களைச் செய்­கி­றார்கள் என்று பல ஆய்­வுகள் காட்­டு­கின்­றன. நகர்ப்­பு­றங்­களில் உள்ள பெரும்­பா­லான மக்கள் வடக்கு உட்­பட நாட்டில் மிகவும் தேவை­யான மாற்­றத்தை கொண்டு வர தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் திறனை நம்­பு­கி­றார்கள் என்­பதை சுட்­டிக்­காட்­டு­கி­றது.

தேசிய மக்கள் சக்தி ஒரு பரந்த அடிப்­ப­டை­யி­லான கூட்­ட­ணி­யாக ஆட்சி செய்யும் என்றும், அதன் முந்­தைய அவ­தா­ர­மான ஜே.வி.பி மற்றும் சிங்­க­ள-­பௌத்த தேசி­ய­வா­தத்­து­ட­னான அதன் தொடர்­பி­லி­ருந்து வேறு­பட்­ட­தாக இருக்கும் என்றும் பலர் நம்­பிக்கை கொண்­டுள்­ளனர்.

பல மூத்த அர­சி­யல்­வா­திகள் பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வதும், புதிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பத­வி­யேற்­பதும் நாடு முழு­வதும் சமூக, அர­சியல் மற்றும் பொரு­ளா­தார மாற்­றத்­திற்­கான வலு­வான விருப்­பத்தை குறிக்­கி­றது. மக்கள் தங்கள் இனம், மதம், பாலினம் மற்றும் வயது ஆகி­ய­வற்றை மீறி, தேசிய மக்கள் சக்­திக்கு அதன் உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்­கான ஆணையை வழங்­கு­வதன் மூலம் தனித்­து­வ­மான மற்றும் முன்­னோ­டி­யில்­லாத வழி­களில் ஒன்றுபட்டுள்ளனர்.

போருக்குப் பிந்தைய, யாழ்ப்பாணத்தின் அரசியல் உள்கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்புதல், போர் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்தல், தமிழர் உரிமைகள் மற்றும் அதிகாரப் பகிர்வுக்காக வாதிடுவதைச் சுற்றியே உள்ளது. சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், காணி உரிமைகள், இராணுவ மயமாக்கல் மற்றும் சமமான வளப் பகிர்வு போன்ற பிரச்சினைகள் வடக்கு அரசியலில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகின்றன.

இத்தகைய சூழலில் தேசிய மக்கள் சக்தி, மாற்றத்திற்கான அதன் உறுதிப்பாட்டை நிறைவேற்றுமா அல்லது கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் தாக்கத்தை ஏற்படுத்திய பழைய அரசியல் கலாசாரத்திற்கு மீண்டும் திரும்புமா என்பதை பொறுத்திருந்தே அறிய முடியும்.

லியோ நிரோஷ தர்ஷன் Virakesari

Share.
Leave A Reply