சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிச.13) காலை காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவரது உயிர் இன்று காலை 10.12 மணியளவில் பிரிந்தது என்று சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

அவரது மறைவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு காங்கிரஸ் பேரியக்கத்துக்கு பேரிழப்பு. கட்சியில் தன்மானத் தலைவராக திகழ்ந்தவர். எதையும் அச்சமில்லாமல் எதிர்கொள்வார். வெளிப்படையாகப் பேசுபவர். அவரது இழப்பு அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கு ஈடு செய்ய முடியாது இழப்பு.” என்றார்.

தொடர் சிகிச்சை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த அவரது மகன் திருமகன் உயிரிழந்த நிலையில் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர், காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக இன்று அதிகாலையில் இருந்தே தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து அவர் இன்று காலை 10.12 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பு உறுதி செய்துள்ளது.

39 ஆண்டுகளுக்குப் பின் .. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஈவிகேஎஸ் 39 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

2023-ல் நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,234 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்றார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன், அக்கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவர் 76,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். ஏற்கெனவே, கடந்த 1996, 2004, 2009 மற்றும் 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் போட்டியிருந்த அவர், 2004ல் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பதவி வகித்தார்.

அதேபோல், 1984-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் 25,719 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றார். கடந்த1989-ம் ஆண்டு பவானிசாகர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், அந்தத் தேர்தலில் தோல்வியை தழுவி இருந்தார். கிட்டத்தட்ட 39 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு மீண்டும் சட்டப்பேரவை சென்றது நினைவுகூரத்தக்கது.

Share.
Leave A Reply