சிரிய ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதோடு, கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்குள் படைகளை நகர்த்தியுள்ளது.
அங்கு இஸ்ரேலிய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிரிய நிலப்பரப்பின் அளவையும் விரிவுபடுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது.
ஆனால் இஸ்ரேல் தனது நீண்டகால எதிரியை பலவீனப்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாக மற்றவர்கள் கருதுகின்றனர்.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை எப்படி நடத்தியது?
ஞாயிற்றுக்கிழமை அசத் ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) 310க்கும் மேற்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டதை பதிவு செய்துள்ளதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் (SOHR) தெரிவித்துள்ளது.
வடக்கே அலெப்போவில் இருந்து தெற்கில் டமாஸ்கஸ் வரை சிரிய ராணுவத்தின் முக்கியமான நிலைகளைக் குறி வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டன. ஆயுதக் கிடங்குகள், வெடிபொருள் கிடங்குகள், விமான நிலையங்கள், கடற்படைத் தளங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் உள்ளிட்ட ராணுவ வசதிகளைக் குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்கள் “சிரிய ராணுவத்தின் அனைத்து திறன்களையும்” அழித்து வருவதாகவும், “சிரியா மீதான உரிமை மீறல்” என்றும் எஸ்.ஓ. ஹெச்.ஆரின் நிறுவனர் (SOHR) ராமி அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார்.
சிரியா அசத் ஆட்சிக்குப் பிந்தைய சகாப்தத்திற்கு மாறும் இந்தச் சூழலில் ஆயுதங்கள் “பாங்கரவாதிகளின் கைகளில் கிடைப்பதை” தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.
ரசாயன ஆயுதங்கள் குறித்து இஸ்ரேல் எழுப்பும் கவலைகள்
ரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படும் பஷர் அல்-அசத்தின் ஆயுதக் கிடங்கை எந்தக் குழு கைப்பற்றும் என்பது குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளது.
சிரியாவிடம் இதுபோன்ற ஆயுதங்கள் எங்குள்ளன, எத்தனை ஆயுதங்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத் அவற்றைப் பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.
திங்கள் கிழமையன்று, ஐ. நா-வின் ரசாயன கண்காணிப்புக் குழு சிரியாவில் இருக்கும் அதிகாரிகளை அவர்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுமாறு எச்சரித்தது.
சிரியாவில் உள்ள முன்னாள் ஐ. நா ஆயுத ஆய்வாளரும், இப்போது ஸ்வீடனில் உள்ள உமியா பல்கலைக்கழகத்தில் ஹிஸ்டாலஜி இணை பேராசிரியருமான அகே செல்ஸ்ட்ரோம், இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களால் சிரியாவின் ரசாயன ஆயுத திறன்களைக் குறிவைத்து வருவதாகக் கூறுகிறார்.
“சிரியாவின் ராணுவத் திறனை இஸ்ரேல் அழித்து வருகிறது. இதில் ராணுவ தளங்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை அனைத்தும் அடங்கும்” என்று அவர் பிபிசியிடம் கூறுகிறார்.
கடந்த 2013ஆம் ஆண்டில், பஷர் அல்-அசத்துக்கு விசுவாசமான படைகள் சிரிய தலைநகரான டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியான கெளட்டா மீது நடத்திய தாக்குதலில் நரம்பியல் மண்டலத்தைப் பாதிக்கக்கூடிய சரின் வாயுவைப் பயன்படுத்தியதாகவும், இது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதாக நம்பப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
சமீபத்திய தாக்குதல்களிலும் சரின் வாயு, குளோரின் வாயு போன்ற ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால், கிளர்ச்சிக் குழுக்களிடமும் ரசாயன ஆயுதங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில் அவர்கள் கடந்த காலத்தில் எதிரிகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று முனைவர் செல்ஸ்ட்ரோம் கூறுகிறார்.
“இஸ்ரேலுடனான மோதலில் வலிமையைக் காட்ட அசத் இந்த ஆயுதங்களை வைத்திருந்தார், ஆனால் அவர் அவற்றைப் பயன்படுத்த விரும்பவில்லை. இப்போது சிரியாவில் முற்றிலும் மாறுபட்ட அரசாங்கம் இருந்தாலும், ரசாயன ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்க விரும்புகிறது” என்று விளக்கினார்.
கோலன் குன்றுகளில் இஸ்ரேல் என்ன செய்கிறது?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கோலன் குன்றுகளில் உள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை (buffer zone) தமது படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக அறிவித்தார். கோலன் குன்றுகள் என்பது சிரியாவின் ஒரு பகுதி, இது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இது தனது தற்காலிக தற்காப்பு நடவடிக்கை என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.
“அக்டோபர் 7, 2023இல் ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்று சிரியா தரப்பில் இருந்தும் வர வாய்ப்புள்ளது. அதுபோன்ற எந்தத் தாக்குதலையும் தடுக்க விரும்புவதாக இஸ்ரேல் கூறியுள்ளது” என்று லண்டனின் எஸ். ஓ.ஏ.எஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கில்பர்ட் அச்கர் கூறினார்.
“அதே நேரம் இந்த ராணுவ நடவடிக்கை இஸ்ரேல் முன்னோக்கி நகர்வதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட மண்டலத்தின் எல்லைக்கு அருகில் மற்ற சக்திகள் நகர்வதைத் தடுப்பதற்கும் ஒரு வாய்ப்பு” என்றார்.
ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது குறித்து அரபு நாடுகளின் அறிக்கைகளில் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளது. திங்களன்று எகிப்திய வெளியுறவு அமைச்சகத்தால் இந்த நடவடிக்கை “சிரிய பிராந்தியத்தை ஆக்கிரமித்தல் மற்றும் 1974 பிரிவினை ஒப்பந்தத்தின் அப்பட்டமான மீறல்” என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய படைகளின் முன்னேற்றங்கள் ராணுவ நடவடிக்கையற்ற பகுதியைத் தாண்டி டமாஸ்கஸில் இருந்து 25 கி.மீ உள்நோக்கிச் சென்றுவிட்டதாக சிரிய அறிக்கைகள் கூறின. ஆனால் இஸ்ரேலிய ராணுவ வட்டாரங்கள் இதை மறுத்தன.
கோலன் குன்றுகளில் ராணுவ நடவடிக்கையற்ற பகுதிக்கு அப்பால் அதன் துருப்புகள் செயல்படுவதை இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் முதன்முறையாக ஒப்புக் கொண்டன. ஆனால் இஸ்ரேலிய ஊடுருவல் குறிப்பிடத்தக்க வகையில் மேலும் முன்னேறவில்லை என்று செய்தித் தொடர்பாளர் நாதவ் ஷோஷானி கூறினார்.
கோலன் குன்றுகள் என்பது என்ன? அதை ஆக்கிரமித்துள்ளது யார்?
கோலன் குன்றுகள் என்பது தென்மேற்கு சிரியாவில் உள்ள பாறைகள் நிறைந்த பகுதி. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இப்பகுதி இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1967இல் நடைபெற்ற மத்திய கிழக்கு போரில், கோலன் குன்றுகளின் உச்சியிலிருந்து இஸ்ரேல் மீது சிரியா வெடிகுண்டுகளை வீசியது. ஆனால், விரைவிலேயே சிரிய ராணுவத்தை எதிர்த்து, சுமார் 1,200 சதுர கிலோமீட்டர் அளவிலான அப்பகுதியை இஸ்ரேல் தன்வசப்படுத்தியது.
கடந்த 1073இல் யோம் கிப்பூர் போரின்போது, கோலன் குன்றுகளை மீண்டும் தன்வசப்படுத்த சிரியா முயன்று, அதில் தோல்வியுற்றது.
அதைத் தொடர்ந்து, 1974இல் இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அப்போதிருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தக் கோட்டில் ஐ.நா சபையின் கண்காணிப்புப் படை உள்ளது.
ஆனால், 1981இல் இப்பகுதியை இஸ்ரேல் முழுவதுமாக ஆக்கிரமித்தது. ஆனால், அதை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கவில்லை. கோலன் குன்று பகுதியிலிருந்து முழுவதுமாக இஸ்ரேல் திரும்பப் பெறும் வரை, எவ்வித அமைதி ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம் என, சிரியா தொடர்ச்சியாகக் கூறி வருகிறது.
கோலன் குன்று பகுதியிலுள்ள பெரும்பாலான சிரிய அரபு மக்கள், 1967 போரின் போது அங்கிருந்து வெளியேறினர். தற்போது, அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேற்றங்கள் உள்ளன. அதில், சுமார் 20,000 பேர் வசித்து வருகின்றனர். 1967 மோதல் முடிவுக்கு வந்த உடனேயே, இந்த குடியேற்றங்களை இஸ்ரேலிய மக்கள் கட்டமைத்தனர்.
இந்தக் கட்டமைப்புகள் ‘சட்ட விரோதமானவை’ என சர்வதேச சட்டம் கூறுகிறது. ஆனால், இதை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை. கோலன் பகுதியில் குடியேறியவர்கள், சுமார் 20,000 சிரிய மக்களுடன் இணைந்து வாழ்கின்றனர்.
இப்பகுதியில் வாழும் பெரும்பாலான சிரிய மக்கள் ட்ரூஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள், கோலன் குன்றுகளை இஸ்ரேல் ஆக்கிரமித்த பின்னரும் அங்கிருந்து வெளியேறவில்லை.
இஸ்ரேலின் அச்சம் நியாயமானதா?
கோலன் குன்று பகுதிகளில் ஐ.நா படைகள் ரோந்து செல்லக்கூடிய ராணுவ நடவடிக்கையற்ற பஃபர் பகுதி (Buffer Zone) மீதான ஆக்கிரமிப்பு தற்காலிகமானது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், அங்கிருந்து துருப்புகளை திரும்பப் பெறுவது சிரியாவின் அடுத்த அரசின் செயல்பாட்டைப் பொருத்தே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“சிரியாவில் வளர்ந்து வரும் புதிய சக்திகளுடன் அமைதியான உறவை ஏற்படுத்துவதே எங்களின் விருப்பம். ஆனால், அவ்வாறு நடக்கவில்லை என்றால், இஸ்ரேல் மற்றும் அதன் எல்லைகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் செய்வோம்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
“சிரியாவில் உள்ள கிளர்ச்சிக் குழு, கோலன் குன்று பகுதியில் ஊடுருவலாம் என இஸ்ரேல் நம்புகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளைத் தடுப்பதற்காக, சிரிய எல்லையில் இஸ்ரேல் படைகள் மேலும் முன்னோக்கிச் செல்கின்றன,” என்று லண்டனில் உள்ள ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் முனைவர் ஹெச்ஏ ஹெல்லியெர் தெரிவித்தார்.
“இருப்பினும், இஸ்ரேல் முன்பு பாதுகாப்பு நடவடிக்கையாக கோலன் குன்றுகளை ஆக்கிரமித்து பலப்படுத்தியது. மீண்டும் அவ்வாறு செய்யலாம்” என அவர் கூறுகிறார்.
இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிடியோன், தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகவே, சிரிய ராணுவ தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
“அதனால்தான் நாங்கள் மூலோபாய ஆயுத அமைப்புகளைத் தாக்கி வருகிறோம். உதாரணமாக, எங்களுடைய இலக்குகள், ரசாயன ஆயுதங்கள் அல்லது தொலைதூர ஏவுகணைகள் மற்றும் ரக்கெட்டுகள் ஆகியவை. பயங்கரவாதிகளின் கைகளில் அந்த ஆயுதங்கள் சிக்காமல் இருக்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்” என்றார்.
எனினும் பேராசிரியர் அச்கர் கூறுகையில், “சிரியாவில் அதிகளவில் ரசாயன ஆயுதங்கள் இல்லை. இரண்டு அல்லது மூன்று இடங்களில்தான் உள்ளன. ஆனால், 300க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது. சிரியாவை பலவீனமாக்க இஸ்ரேல் முயல்வதை இது காட்டுகிறது” என்றார்.
இஸ்ரேல் பஷர் அல்-அசத் குறித்து அறிந்து வைத்துள்ளதாகவும் ஆனால் சிரியாவில் அடுத்து யார் ஆட்சிக்கு வருவார் என்பதில் தெளிவற்று இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
“லிபியா போன்ற கிளர்ச்சிக் குழுக்களாக சிரியா பிரிந்துவிடும் என்று இஸ்ரேலியர்கள் நம்புகிறார்கள். இந்தக் குழுக்களில் ஒன்று அல்லது மற்றொன்று இஸ்ரேலுக்கு விரோதமாக இருக்கும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்” என அவர் தெரிவித்தார்.
“இத்தகைய குழுக்களின் கைகளில் சிரியாவின் ரசாயன மற்றும் இதர ஆயுதங்கள் சிக்காமல் இருக்க வேண்டும் என இஸ்ரேல் நினைப்பதாக” அவர் தெரிவித்தார்.