மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’, என்ற பாடல் வரிகள் பலரது வாழ்வில் கேட்க மட்டுமே முடிகிறது, அமைவது கிடையாது.

அதற்கு காரணம் திருமண பந்தம், பாசம் உள்ளிட்ட அனைத்தும் பணத்தை பிரதானமாக கொண்டு நிர்ணயம் செய்யப்படுவதாகி விட்டது.

நில மோசடி, கடன் மோசடி, நகை மோசடி பட்டியலில் தற்போது பிரபலமாகி வருவது திருமண மோசடி.குடும்ப சூழல், வாழ்க்கை பின்னணி, பொறுப்புகளை தாங்கி நிற்கும் ஆண்களின் நிலை அறிந்து அவர்களை மூளைச்சலவை செய்து நடைபெறும் மோசடிகள் எங்காவது நடந்ததாக வந்த தகவல்கள் தற்போது அடிக்கடி நிகழ்வாகி போனது.

அதிலும் பல்வேறு வழிகளில் நூதனமாக செயல்படும் கும்பலால் விழிபிதுங்கி நிற்போர் ஏராளம்.

இதில் பணம், பொருட்களை இழந்து வாடும் பலர் தங்களது இயலாமையை வெளி உலகுக்கு சொல்ல முடியாமல் போவதுதான் மோசடி கும்பலை சேர்ந்தவர்களை ஊக்கப்படுத்துகிறது.

அப்படியொரு மோசடிக்கு அடித்தளமிட்ட நிலையில் சுதாரித்துக்கொண்ட தாயால் மகனின் மண வாழ்க்கை அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது.

அதுபற்றிய விபரம் வருமாறு:-மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திருமணத்திற்கு பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து நடத்தப்பட்ட நூதன மோசடி பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாயி (வயது 58). மற்ற பிள்ளைகளுக்கு திருமணம் வைத்து முடித்த பெருமாயி கடைக்குட்டியான தனது மகன் முருகனுக்கும் மணம் முடிக்க ஏற்பாடுகளை செய்து வந்தார்.

வயதான காலத்தில் தேடிப்போய் பெண் பார்க்க இயலாத நிலையில், அதற்கான பொறுப்பை புரோக்கரிடம் கொடுத்து பெருமாயி வரன் தேடி வந்தார்.

இதனை அறிந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற பெண், அவருக்கு சமீபத்தில் அறிமுகமாகியுள்ளார். தன்னிடம் ஏராளமான வரன்கள் இருக்கிறது.

எனவே உங்கள் மகனுக்கு அவரது விருப்பப்படி நல்ல மனைவி கிடைப்பார். அதனை அமைத்து கொடுக்கத்தானே நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை வார்த்தைகளை உறவினர்களை விஞ்சும் அளவுக்கு பெருமாயி மனதில் விதைத்துள்ளார்.

திருமணத்திற்காக தனக்கு புரோக்கர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் விஜயா தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய பெருமாயி பணம் வழங்க ஒப்புக்கொண்டார். இதையடுத்து, திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முருகனுக்கு திருமணம் நடைபெற்றது. விஜயாவுக்கு ஒப்புக்கொண்டதைப்போல, ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை சந்தோஷத்துடன் பெருமாயி வழங்கினார்.

புதிய மண வாழ்க்கை அமைந்த சந்தோஷத்தில் இருந்த முருகனுக்கு மறுநாள் காலை பெரும் அதிர்ச்சியாகவே விடிந்தது. மனைவி என்று வந்த பெண்ணும், அவரது உறவினர்களும் இரவோடு இரவாக நகை, பணத்துடன் கம்பி நீட்டியதைக் கண்டு அவரும், அவரது தாய் பெருமாயியும் அதிர்ச்சியடைந்தனர்.

புலம்பி அழுத பெருமாயி மகனின் வாழ்க்கையை நாமே பாழடித்து விட்டோமே என்று கதறினார்.எனினும், தங்களது குடும்ப மானத்தை காக்கும் பொருட்டு, அவர்கள் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும் இதுகுறித்து பெருமாயி, விஜயாவிடம் புகார் தெரிவித்துள்ளார். இதை வருத்தம் கலந்த முகத்தோடு கேட்டுக் கொண்ட விஜயா, தன்னால் ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு தானே பொறுப்பேற்பதாகவும்,

விரைவில் மற்றொரு பெண்ணை அழைத்து வந்து திருமணம் நடத்தி வைப்பதாகவும் பெருமாயியை சமாதானப்படுத்தி உள்ளார்.

அதன்படி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அருணாதேவி (39) என்ற பெண்ணை அழைத்து வந்த விஜயா அவரை முருகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், அதற்காக தனக்கு மீண்டும் தனக்கு ரூ.1 லட்சம் கமிஷன் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

விஜயாவின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பெருமாயி, விஜயாவையும், அவருடன் வந்த அருணாதேவி மற்றும் தூத்துக்குடி வ.உ.சி. நகரைச்சேர்ந்த காளீஸ்வரி (52) ஆகியோரை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கையும், களவுமாக பிடித்து, உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ஒருமுறை ஏமாந்தது போதும், இனிமேலும் ஏமாறக்கூடாது என்ற வகையில் பெருமாயி எடுத்த முடிவு மகனின் மண வாழ்க்கை மீண்டும் பறிபோவதை தடுத்தது.பெருமாயி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நூதன மோசடியில் ஈடுபட்ட பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற ஜெயா,

தூத்துக்குடியை சேர்ந்த காளீஸ்வரி, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அருணாதேவி மற்றும் பொள்ளாச்சி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த சீனிவாசன், ஜெயபாரதி, சுஜித்ரா, முரளிதரன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விஜயா, காளீஸ்வரி, அருணாதேவி ஆகிய 3 பேரை கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்ய பெண் தேடும் இளைஞர்களை குறி வைத்து திருமணம் முடிந்த கையோடு பணம், நகையை கொள்ளையடித்து செல்லும் நூதன மோசடி கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “,

Share.
Leave A Reply