பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய கிசெல் பெலிகாட்டின் பாலியல் வன்புணர்வு வழக்கில் இன்று, டிசம்பர் 19, தீர்ப்பு வழங்க உள்ளது ஏவிக்னான் நீதிமன்றம்.
இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு 4 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெலிகாட்டின் கணவரான டொமினிக் பெலிகாட் இந்தக் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
கிசெல் பெலிகாட்டை பாலியல் வன்புணர்வு செய்யததாக குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களுக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒட்டுமொத்தமாக சிறைத்தண்டனை 600 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம்.
இளைஞர்கள், முதியவர்கள், உடல் பருமனானவர்கள், ஒல்லியானவர்கள், கருப்பின மற்றும் வெள்ளையினத்தவர்கள் என பலரும் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுள் தீயணைப்பு வீரர்கள், லாரி ஓட்டுநர்கள், ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர், பத்திரிகையாளர் மற்றும் டி.ஜே ஆகியோரும் அடங்குவர்.
72 வயதான, அவருடைய கணவரான டொமினிக் பெலிகாட்டின் உத்தரவின் பேரில், கிசெல் பெலிகாட்டை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 50 ஆண்கள் இவர்கள். டொமினிக், தன் மனைவி கிசெலுக்கு சுமார் 10 ஆண்டுகள் தூக்க மாத்திரைகளை வழங்கி வந்துள்ளார்.
இந்த ஆண்களின் குழு பிரெஞ்சு சமுதாயத்தின் பல்வேறு பகுதிகளை பிரதிபலிப்பதால், அவர்கள் “Monsieur-Tout-Le-Monde” என்று அழைக்கப்பட்டனர். அதன் பொருள் “எல்லா ஆண்களும் (Mr. Everymen)”.
(இந்த புனைப்பெயர் அவர்கள் வெவ்வேறு வாழ்க்கைத் தரங்களைச் சேர்ந்த சாதாரண மக்கள் என்பதைக் குறிக்கிறது)
செப்டம்பரில் தொடங்கிய விசாரணையின் முடிவில் அடுத்த வாரம் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒட்டுமொத்தமாக 600 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.
அவர்களில் சிலர் தங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை எதிர்க்கிறார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் நீதிபதிகளுக்கு பதிலளிக்கும் போது தலை குனிந்து கொள்கிறார்கள். உறுதியளிப்பதற்காக, எப்போதாவது தங்கள் வழக்கறிஞர்களைப் பார்க்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள 50 பேரில் பெரும்பாலானவர்கள், பெலிகாட்ஸின் சொந்த கிராமமான மசானின் 50 கிமீ (30-மைல்) சுற்றளவில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் சாதாரண பின்னணிகள் அவர்களுக்கு சாதகமாகச் செயல்படலாம் என்று சில வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர். மூன்று பிரதிவாதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் அன்டோயின் மினியர், “சாதாரண மக்கள் அசாதாரணமான விஷயங்களைச் செய்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
“அவர்கள் எல்லாரும் இப்படி ஒரு சூழ்நிலையைக் கடந்திருக்க முடியும் என நினைக்கிறேன். ஒருவேளை இதே போன்று இல்லை என்றாலும், கடுமையான குற்றத்தைச் செய்யக்கூடிய சூழ்நிலையால் அவர்கள் தாக்கம் அடைந்திருப்பார்கள் என நான் நம்புகிறேன்.” என்றும் அவர் கூறினார்.
“என் உடல் அவரை பாலியல் வன்புணர்வு செய்தது, ஆனால் மூளை அல்ல”
வழக்கறிஞர்கள் பல காரணிகளின் அடிப்படையில் தண்டனைகளை நிர்ணயம் செய்கின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் எத்தனை முறை பெலிகாட் வீட்டுக்குச் சென்றார்கள், அவர்கள் கிசெல் பெலிகாட்டை பாலியல் ரீதியாகத் தொட்டார்களா அல்லது அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்தார்களா என்பதன் அடிப்படையில் தண்டனைகளை நிர்ணயம் செய்கின்றனர்.
ஜோசப் சி எனும் 69 வயதான ஓய்வுபெற்ற விளையாட்டு பயிற்சியாளர், குற்றம் நிரூபிக்கப்பட்டால் பாலியல் வன்கொடுமைக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும். வழக்கறிஞர்கள் கேட்டத்தில் மிகக் குறைவான தண்டனை இது.
63 வயதான ரோமைன், 18 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்வார். அவருக்கு ஹெச்.ஐ.வி-பாசிட்டிவ் என்பது தெரிந்தும், பாதுகாப்பு உறை அணியாமல் ஆறு தனித்தனி சந்தர்ப்பங்களில் கிசெல் பெலிகாட்டை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
இருப்பினும், அவரது வழக்கறிஞர் அவர் பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்றதாகவும், அவர் வைரஸை பரப்பியிருக்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் கூறினார்.
இந்த பாலியல் வன்புணர்வு வழக்கு விசாரணைக்கு அசாதாரணமான சாட்சியங்கள் வழக்கறிஞர்களிடம் உள்ளன. ஏனெனில், டொமினிக் பெலிகாட் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் இக்குற்றங்களை படம் பிடித்துள்ளார்.
தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்ட அவர், தன்னுடன் குற்றம் சாட்டப்பட்ட 50 பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அனைத்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், அந்த ஆண்கள் பெலிகாட்டின் வீட்டிற்கு சென்றதை மறுக்க இயலாது. இருப்பினும், அவர்களில் பெரும்பாலானோர் கடுமையான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளை தீர்க்கமாக மறுக்கிறார்கள், ஏனெனில் அவை கடுமையான தண்டனைகள் பெற வழிவகுக்கும்.
பிரான்சின் பாலியல் வன்புணர்வு சட்டம், “வன்முறை, வற்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது அதிர்ச்சியின்” மூலம் செய்யப்படும் எந்தவொரு பாலியல் செயலையும், சம்மதத்தின் தேவையைக் குறிப்பிடாமல் பாலியல் வன்புணர்வு என்று வரையறுக்கிறது.
எனவே, கிசெல் பெலிகாட் ஒப்புதல் அளிக்கும் இடத்தில் இல்லை என்பதை அவர்கள் அறியாததால், பாலியல் வன்புணர்வு குற்றவாளியாக அவர்களை கருத முடியாது என, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் வாதிடப்படுகின்றது.
“எந்தவொரு குற்றத்தையும் அதனைச் செய்யும் எண்ணம் இல்லாமல் செய்திருக்க முடியாது,” என்று ஒரு வழக்கறிஞர் கூறினார்.
“என் உடல் அவரை பாலியல் வன்புணர்வு செய்தது, ஆனால் என் மூளை செய்யவில்லை,” என்று தன்னார்வ தீயணைப்பு வீரர் கிறிஸ்டியன் எல் வலியுறுத்தினார். இது, சில ஆண்கள் பயன்படுத்திய சிக்கலான மற்றும் திரிக்கப்பட்ட வாதத்திற்கான ஒரு எடுத்துக்காட்டு.
கிசெல் பெலிகாட்டை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 50 பேரில் ஒருவர் ஜீன்-பியர் எம். 63 வயதான அவர், டொமினிக் பெலிகாட்டின் “சீடன்” என்று அழைக்கப்படுகிறார்.
அவரது மனைவிக்கு போதை மருந்து கொடுக்கக் கற்றுக்கொண்டு, ஐந்து ஆண்டுகள் அவரை துன்புறுத்தியுள்ளார் என ஒப்புக்கொண்டார்.
தன் மீதான குற்றங்களை, டொமினிக்கை சந்தித்ததுடன் தொடர்புப்படுத்துகிறார் அவர். மேலும், “உறவினர் போல (டொமினிக்) இருந்ததாக” அவர் கூறுகிறார்.
ஜீன்-பியருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘பெலிகாட்டின் சூழ்ச்சி’
54 வயதான பிளம்பர் அஹ்மத் டி, தனது குழந்தைப் பருவ காதலியை திருமணம் செய்து 30 ஆண்டுகள் ஆகிறது. தான் யாரையாவது பாலியல் வன்புணர்வு செய்ய விரும்பினால், 60 வயதுடைய ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன் என்று கூறினார்.
40 வயதுடைய வேலையில்லாத ஒருவரான ரெடூவான் ஏ, கிசெலை வன்புணர்வு செய்ய முடிவெடுத்திருந்தால், அவரது கணவரை வீடியோ எடுக்க அனுமதித்திருக்க மாட்டேன் என்று வாதிட்டார்.
சிலர் டொமினிக் பெலிகாட்டால் மிரட்டப்பட்டதாகவும் கூறுகிறார்கள். டொமினிக் ஒரு “அருவருப்பான குணம் கொண்டவர்” என்று ஒரு வழக்கறிஞர் பிபிசியிடம் கூறினார்.
டொமினிக்குக்கு அஞ்சி, படுக்கையறையை விட்டு வெளியேற பயந்ததாக, ஆண் செவிலியரான ரெடூவான் நீதிமன்ற அறையில் கண்ணீருடன் கூறினார். ” நான் மிகவும் பயந்து போயிருந்தேன்!” என்றும் அவர் நீதிபதிகளிடம் கூறினார்.
தங்களுக்கு போதைப்பொருள் கலந்த பானங்கள் வழங்கப்பட்டதாகவும், எனவே இந்த சம்பவத்தை நினைவில் கொள்ள முடியவில்லை எனவும் மற்றவர்கள் கூறுகின்றனர். ஆனால் தான் இப்படிச் செய்யவில்லை என்று டொமினிக் பெலிகாட் மறுத்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் சம்பந்தப்பட்ட பெரும்பாலானவர்கள் டொமினிக் பெலிகாட் மூலம் ஏமாற்றப்பட்டதாகக் கூறுகின்றனர். ஒரு ஜோடியாக அவரின் சம்மதத்துடன் பாலியல் விளையாட்டில் ஈடுபடுவதாக, பெலிகாட் அவர்களை நம்பவைத்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
“டொமினிக் பெலிகாட்டால் அந்த ஆண்கள் ஏமாற்றப்பட்டதாகவும், நிலைமையின் உண்மைத் தன்மையை அவர்கள் அறிந்திருக்கவில்லை” என்றும் கூறுகிறார்,
ஜோசப் சியின் வழக்கறிஞர் கிறிஸ்டோஃப் புருஷி. “தாங்கள் அவருடைய சம்மதத்துடன் அந்த நடவடிக்கைகளில் பங்கேற்பதாக அவர்கள் நம்பினர், ஆனால் உண்மையில் ஏமாற்றப்பட்டுளார்கள்,” என்றும் ஜோசப் சியின் வழக்கறிஞர் கிறிஸ்டோஃப் புருஷி பிபிசியிடம் கூறினார்.
ஆனால், தனது மனைவிக்கு இந்த சதி பற்றி தெரியாது என்பதை அந்த ஆண்களுக்குத் தெளிவுபடுத்தியதாக, டொமினிக் பெலிகாட் கூறினார்.
அவர்கள் கிசெல் பெலிகாட்டை எழுப்புவதைத் தவிர்க்க அல்லது அவர்கள் அங்கு இருந்த தடயங்களை விட்டுச்செல்வதைத் தவிர்க்க, அறிவுறுத்தல்களை வழங்கியதாக டொமினிக் கூறுகிறார்.
தன் மனைவியைத் தொடுவதற்கு முன்பு , வாசனை திரவியம் அல்லது சிகரெட் வாசனை இல்லாமல் இருப்பது போன்ற அறிவுறுத்தல்களை தான் வழங்கியதாக டொமினிக் கூறினார்.
“அவர்கள் அனைவருக்கும் இது தெரியும், அவர்கள் அதை மறுக்க முடியாது” என்றும் டொமினிக் கூறினார்.
பதில்களைத் தேடும் குடும்பங்கள்
செப்டம்பரில் இருந்து, 50 பேரும் ஒருவர் பின் ஒருவராக, அவிக்னானில் உள்ள நீதிமன்றத்தின் முன் ஆஜராகினர்.
பொதுவாக பாலியல் வன்புணர்வு வழக்குகளில் குணநலன் சார்ந்த விசாரணை நடக்க பல நாட்கள் ஆகலாம்.
இந்த விசாரணையில், அதிக எண்ணிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருப்பதால், விசாரணை அமர்வுகள் மிகவும் சுருக்கமாக இருந்தன, பெரும்பாலும் சில மணிநேரங்கள் மட்டுமே நடந்தன.
அவர்களது வாழ்க்கையை விரைவாக ஆய்வு செய்யததால், வன்முறை மற்றும் அதிர்ச்சிகர கதைகளால் நீதிமன்றம் நிறைந்திருந்தது.
தனது 11 வயதில், பிரெஞ்சு வெளிநாட்டுப் பிரதேசமான நியூ கலிடோனியாவில் கால்நடைகளைப் பராமரிக்க அவரை வேலைக்கு அமர்த்திய குடும்ப நண்பரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக, 43 வயதான சிமோனே எம் எனும் கட்டுமானத் தொழிலாளி கூறினார்.
நான்கு குழந்தைகளின் தந்தையான, 46 வயதான ஜீன்-லூக் எல், அவர் குழந்தையாக இருந்தபோது, எப்படி அவரது குடும்பம் வியட்நாமில் இருந்து சிறு படகில் புறப்பட்டு, பிரான்சுக்குச் செல்வதற்கு முன்பு தாய்லாந்தில் உள்ள அகதிகள் முகாமில் பல ஆண்டுகள் வாழ்ந்தது என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
39 வயதான ஃபேபியன் எஸ், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குழந்தை ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்த வழக்குகளில் தண்டனையை அனுபவித்தவர்.
சிறு வயதிலிருந்தே அவரது வளர்ப்பு பெற்றோரால் துன்புறுத்தப்பட்டு தாக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி, மனநல மருத்துவருடனான ஆலோசனையின் போதே, அவரது தெளிவற்ற, வலிமிகுந்த குழந்தைப் பருவ நினைவுகள் பாலியல் வன்புணர்வு குற்றங்களை செய்ய காரணமானது என்பதை உணர்ந்ததாக கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட பலரின் மனைவிகள், உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் குணாதிசயங்கள் குறித்த வாக்குமூலங்களை அளிக்க வரவழைக்கப்பட்டனர்.
அவர்களின் வாழ்க்கையில் உள்ள ஆண்கள் எவ்வாறு “இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிக்கிக்கொண்டார்கள்” என்பதைப் புரிந்து கொள்ள அவர்களும் பதில்களைத் தேடத் துடித்தனர் என ஒரு பெண் கூறினார்.
“நான் அதிர்ச்சியடைந்தேன், இது அவர் அல்ல. என் வாழ்க்கையின் மகிழ்ச்சியாக அவர் இருந்தார்,” என கிறிஸ்டியன் எல்லின் வயதான தந்தை கூறினார்.
மற்ற நான்கு பேரைப் போலவே சிறுவர் வன்புணர்வுப் படங்களை வைத்திருந்தது உட்பட கடுமையான குற்றச்சாட்டுகளை தீயணைப்பு வீரர் எதிர்கொள்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம். “ஏதோ நடந்திருக்க வேண்டும், அவர் மனமுடைந்து போயிருக்கலாம்” என்று அவரது தந்தை கூறினார்.
‘அவருக்காக நான் எப்போதும் இருப்பேன்’
ஒரு முன்னாள் கட்டடத் தொழிலாளியான 54 வயதான தியரி பாவின் முன்னாள் மனைவியான கோரின், அவர் எப்போதும் தன்னிடமும் அவர்களது குழந்தைகளிடமும் “அன்பாகவும்” “மரியாதையாகவும்” இருந்ததாகவும், மேலும் அவருடன் சமரசம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளுக்கு அவர் இடமளித்ததாகவும் தெரிகிறது.
அவர் எதற்காக குற்றம் சாட்டப்பட்டார் என்று அவர்கள் என்னிடம் சொன்னபோது, “ஒருபோதும், அதற்கு சாத்தியமே இல்லை. அவர் இங்கே என்ன செய்கிறார் என்று எனக்குப் புரியவில்லை.” என நான் சொன்னேன்.
அவரது முன்னாள் கணவரை ஆழ்ந்த மனச்சோர்வில் விழவும், குடிக்க ஆரம்பித்து இறுதியில் டொமினிக் பெலிகாட் உடன் தொடர்பு கொள்ளவும் வழிவகுத்தது, அவர்களின் 18 வயது மகனின் மரணம், என்று அவர் நம்பினார்.
“என்ன நடந்தாலும் நான் அவருடன் எப்போதும் இருப்பேன்,” கயானாவில் பிறந்த ஜோன் கேயினின் முன்னாள் காதலி இவ்வாறு கூறினார். 27 வயதான ஜோன், குற்றம் சாட்டப்பட்டவர்களில் இளையவர் மற்றும் பிரெஞ்சு ராணுவத்தின் முன்னாள் சிப்பாய்.
இரண்டு முறை கிசெல் பெலிகாட்டை பாலியல் வன்புணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். அவர் சுயநினைவின்றி இருப்பார் என்று தனக்குத் தெரியும் என்று ஜோன் ஒப்புக்கொள்கிறார். ஆனால், கிசெல் பாலியல் நடவடிக்கைக்கு சம்மதிக்கவில்லை என்பதை தான் உணரவில்லை என்று ஜோன் வலியுறுத்துகிறார் .
கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஜெரோம் வி ஏன் பெலிகாட்டின் வீட்டிற்கு ஆறு முறை சென்றார் என்பதற்கு “பதில்களைத் தேடுகிறேன்” என்று கண்ணீர் வெள்ளத்தில், சமீரா என்ற பெண்மணி கூறினார்.
“நாங்கள் தினமும் உடலுறவு கொண்டோம், அவர் ஏன் வேறு எங்கும் செல்ல வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை,” என்று கூறி அவர் அழுதார்.
கிசெலை பாலியல் வன்புணர்வு செய்ததை ஒப்புக்கொண்ட சிலரில் அவரும் ஒருவர். கிசெல் மீது தனக்கு முழு “சுதந்திரம்” உண்டு என்ற எண்ணம் தனக்குப் பிடித்திருந்தது என்று கூறினார். மேலும், அவரது “கட்டுப்படுத்த முடியாத பாலுறவு எண்ணங்களின் வெளிப்பாடு” என்று குற்றம் சாட்டினார்.
கிசெல் கூறுவது என்ன?
குற்றம் சாட்டப்பட்டவர்களின் முன்னாள் மற்றும் தற்போது உறவில் உள்ள பெண்கள், தாங்களும் கிசெலைப் போல போதைப்பொருளுக்கு உட்படுத்தப்பட்டார்களா என்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தனக்குத் தெரிந்த “மரியாதையான, சிந்தனையுள்ள, இனிமையான மனிதர்” தனக்குத் தெரியாமல் தன்னையும் துன்புறுத்தினாரா என்று ” சந்தேகம்” இருப்பதாக ஒரு பெண் கூறினார்.
விசாரணையின் தொடக்கத்திலிருந்து, இந்த ஆண்கள் அனைவரையும் ஒன்றாக இணைக்கும் ஒரு புள்ளியைக் கண்டுபிடிக்க வேண்டியதன் தேவை உள்ளது.
எல்லா ஆண்களும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பெலிகாட்டின் வீட்டிற்குச் சென்றனர் என்ற உண்மையைத் தவிர, ஒரு பொதுவான அம்சம் “எங்கும் காணப்படவில்லை” என்று கிசெலின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் அனைவருக்கும் சந்தேகத்திற்கு இடமின்றி பொதுவான ஒரு காரணம் உள்ளது. அவர்கள் அனைவரும் காவல்துறைக்கு செல்ல வேண்டாம் என தெளிவாக தேர்வு செய்தனர் என்பது தான் அந்த பொது காரணம்.
73 வயதான தீயணைப்பு வீரர் ஜாக் சி, காவல்துறைக்கு செல்வது குறித்து கருத்தில் கொண்டதாகவும், ஆனால் “பின்னர் வாழ்க்கை அப்படியே தொடர்ந்தது” என்றும் கூறினார்.
அதே நேரத்தில், 55 வயதான எலக்ட்ரீஷியன் பேட்ரிஸ் என், “காவல் நிலையத்தில் முழு நாளையும் வீணாக்க விரும்பவில்லை” என்றார்.
விசாரணையின் ஆரம்ப நாட்களில், கிசெல் பெலிகாட்டிடம், அந்த ஆண்கள் உங்களது கணவரால் கட்டாயப்படுத்தப்பட்டதாக நினைப்பது நியாயமானதா என்று கேட்கப்பட்டது.
அவர் அதனை மறுக்கும்விதமாக தலையை ஆட்டினார். “அவர்கள் தலையில் துப்பாக்கியை வைத்து, என்னை பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்று கட்டாயத்துக்கு அவர்கள் தள்ளப்படவில்லை. தங்களது முழு மனசாட்சியுடன் என்னை பாலியல் வன்புணர்வு செய்தார்கள்.”
“அவர்கள் ஏன் காவல்துறைக்கு செல்லவில்லை? அடையாளம் தெரிவிக்கப்படாத ஒரு தொலைபேசி அழைப்பு கூட என் வாழ்க்கையைக் காப்பாற்றியிருக்கும்.” என விசாரணையின் முடிவில் அவர் ஒரு கேள்வி கேட்டார்.
“ஆனால் ஒருவர் கூட அப்படிச் செய்யவில்லை,”
இப்படி கூறிவிட்டு சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவர் மேலும் சொன்னார்.
“அவர்கள் ஒருவர் கூட என்னை காப்பாற்ற நினைக்கவில்லை..”