யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக அப்பகுதி மக்கள் புதன்கிழமை (18) தெரிவித்தனர்.

ஆழியவளை பகுதியில் மணல் சட்டவிரோதமாக அகழப்படுவதாக பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டபோதும் அவர்களால் அந்த மணல் கொள்ளையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

நள்ளிரவு நேரம் காவலாளர்கள் நிறுத்தப்பட்டு, JCB இயந்திரம் கொண்டு டிப்பர்கள் மூலம் மணல் கடத்தல்காரர்களினால் மணல் கொள்ளையிடப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாதைகளை அழித்து வீதிக்கு அருகில் வைத்தே பெருமளவான மணல் வளம் சூறையாடப்பட்டு, மணல் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சீரற்று காணப்படும் அந்த பாதைகளில் தற்போது பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

மணல் மேடுகளை அழிப்பதால் கடல் நீர் குடிமனைகளுக்குள் புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கிராம அலுவலர் ஊடாக மருதங்கேணி பிரதேச செயலர் மற்றும் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரை மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து ஆழியவளை கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, தமது கிராமத்தை பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Share.
Leave A Reply