சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், ஜோர்டானியரான பஷீர் அல்-படாய்னே, 38 ஆண்டுகளாக சிரியாவில் காணாமல் போன தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி சரிந்த பிறகு, ஜோர்டானின் இர்பிட்டை சேர்ந்த 83 வயதான பஷீர் அல்-படாய்னே, தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
கடந்த 1986ஆம் ஆண்டு, ஒசாமா தனது பள்ளியின் கடைசி ஆண்டைத் தொடங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் ஒரு வாரம் சிரியாவுக்கு சென்றிருந்தார்.
ஆனால் அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை. ஒசாமா காணாமல் போய் 38 ஆண்டுகள் ஆகின்றன. பஷீர் தனது மகனுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் அன்றிலிருந்து தொடர்ந்து தேடி வருகிறார்.
‘எலும்புக்கூடு போல் இருந்தார்’
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அல்-படாய்னேவும் அவரது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த செய்தியை அவர் கேள்விப்பட்டார்.
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள செட்னயா சிறையிலிருந்து ஒரு நபர், “நான் இர்பிட்டை சேர்ந்தவன்” என்று கூறி சிறையிலிருந்து வெளியேறும் காணொளி வெளிவந்தது.
பின்னர் ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகம், ஜோர்டான் நாட்டவரான ஒசாமா, சிரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஜோர்டான் திரும்பினார் என அறிவித்தது. அந்த நபர் தனது நினைவுகளை இழந்திருந்தார்.
அதன் பிறகு, அதிகாரிகள் இர்பிட்டில் விடுவிக்கப்பட்ட கைதிக்கும் அல்-படாய்னே குடும்பத்தினருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். “அவர் என் கையை நீண்டநேரம் பிடித்து முத்தமிடத் தொடங்கினார்,” என்று அல்-படாய்னே பிபிசியிடம் கூறினார்.
ஒசாமாவின் தோற்றத்தை “ஒரு எலும்புக்கூடு” என்று அல்-படாய்னே விவரித்தார். மேலும் “அவர் நினைவாற்றலை இழந்துவிட்டார் என்றும் ஒசாமாவின் தோற்றம் அதிர்ச்சியளிப்பதாகவும், அவருடைய எல்லா அம்சங்களும் மாறிவிட்டன” என்றும் அல்-படாய்னே தெரிவித்தார்.
ஒசாமா, தனது தாயின் பெயரைக் குறிப்பிட்டது, பழைய குடும்பப் புகைப்படங்களில் தன்னை அடையாளப்படுத்தியது ஆகியவற்றை ஒசாமாவின் சகோதரி பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் அப்போதுதான் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.
ஜோர்டானும் சிரியாவும் 360 கி.மீ தொலைவிலான நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன
அந்த நபர் ஜோர்டானிய தலைநகர் அம்மானில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு அவர் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் மூலம், அவருக்கும் அல்-படாய்னே குடும்பத்திற்கும் இடையே எந்த மரபணு உறவும் இல்லை என்பது தெரிய வந்தது.
சமூக ஊடகங்களில் பல முரண்பாடான கருத்துகள் எழுந்ததால், அந்த மனிதரின் அடையாளத்தைச் சுற்றி நிச்சயமற்ற தன்மை வளரத் தொடங்கியது.
அந்தக் காணொளியில் இருப்பவர், சிரியாவில் உள்ள டார்டஸ் நகரத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர்கள் ஒன்றாகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் முகநூலில் ஒருவர் கூறினார்.
மேலும், அந்த நபர் டார்டஸ் கிராமப்புறப் பகுதியில் உள்ள கஃப்ரூன் சாதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், “1986இல் பெய்ரூட்டில் இருந்து, சிரிய உளவுத்துறையால் கடத்தப்பட்டதாகவும்” அவர் குறித்துப் பேசிய மற்றொரு பெண், முகநூலில் கூறினார்.
மரபணு பரிசோதனை
படக்குறிப்பு, செட்னயா சிறைச்சாலை, மனித உரிமைக் குழுக்களால் “மனிதப் படுகொலை கூடம்” என்று குறிப்பிடப்படுகிறது
லெபனான் தலைநகரில் இருந்து கடத்தப்பட்டு சிரிய சிறைக்கு மாற்றப்பட்டதாக நம்பும் ஹபீப் சாதே எனப்படும் தனது உறவினரைப் போல் அந்த நபர் இருப்பதாக கேடலினா சாதே கூறுகிறார்.
தனது தாத்தாவின் சகோதரரான சாதே, சிரிய அரசின் மீது குற்றம் சுமத்திய பல்லாயிரக்கணக்கான மக்களைத் தடுத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோசமான ராணுவ வளாகமான செட்னயா சிறையில், இருப்பதாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்திற்குச் செய்தி வந்ததாகவும் அவர் கூறுகிறார்.
அந்த நபர், கைது செய்யப்பட்டு காணாமல் போன தங்கள் உறவினர்தான் என்பதை மரபணு பரிசோதனை மூலம் நிரூபிக்க முடியும் என்றும் அந்தக் குடும்பத்தினர் நம்புகின்றனர்.
“காணாமல் போன அந்த நபர், தற்போது ஜோர்டானில் உள்ளார். ஜோர்டான் அதிகாரிகளிடம் சோதனை முடிவுகளைச் சமர்பிப்போம்.
காஃப்ரூன் சாதே கிராமத்தில் வசிக்கும் எங்கள் தாத்தாவிடம் இருந்து பரிசோதனைக்காக ஒரு மரபணு மாதிரி எடுக்கப்படும்” என்றும் பிபிசியிடம் சாதே தெரிவித்தார்.
“சகோதரரைக் கண்டுபிடித்தால், தன் தாத்தா நிம்மதியாக இருப்பார்” என்றும் அவர் கூறினார்.
ஜோர்டானுக்கு திரும்பிய கைதியுடன் சென்ற முன்னாள் ஜோர்டானிய தொழிலாளர் துறை அமைச்சர் ‘நெடல் அல்-படாய்னே’ பேசியபோது, விடுவிக்கப்பட்ட அந்தக் கைதி, காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினராக இருக்கலாம் என்று எண்ணிய நபர்களிடம் இருந்து தனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாகக் குறிப்பிட்டார்.
தாங்கள் அந்த நபருடன் தொடர்புடையவர்கள் என நம்பும் குடும்பங்கள், மரபணு பரிசோதனை செய்து, சோதனை முடிவுகளை அனுப்புமாறு நெடல் கேட்டுக் கொண்டார்.
செட்னயா சிறையில் உள்ள ஒரு ரகசிய அறை, பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு படம் பிடிக்கப்பட்டது
இதற்கிடையில் விடுவிக்கப்பட்ட அந்த நபர், ஜோர்டானில் உள்ள பஷ்தாவியின் உறவினர் ‘அகமது’ என்று காசிம் பஷ்தாவி மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.
அவரது உறவினர் அகமது, லெபனானில் கடத்தப்பட்டு சிரியாவுக்கு மாற்றப்பட்ட ஒரு பாலத்தீன போராளி என்று பஷ்தாவி பிபிசியிடம் கூறினார்.
கடந்த 1995ஆம் ஆண்டில், அகமது, செட்னயா சிறையில் இருப்பதாக, விடுவிக்கப்பட்ட கைதி ஒருவர் அவர்களது குடும்பத்தினரிடம் கூறினார்.
சிறையில் அவரைக் கண்டறிய முயன்றபோது, சிரியாவில் உள்ள பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் பஷ்தாவி கூறினார்.
அந்த நபர் காணாமல் போன தங்கள் உறவினரா, இல்லையா என்பதை அறிய மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளவும், பஷ்தாவி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்ட அந்த கைதிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று மரபணு சோதனை முடிவில் தெரிய வந்தபோது, அவரைத் தனது மகன் ஒசாமா என்று நினைத்திருந்த அல்-படாய்னே குடும்பத்தினர் விரக்தி அடைந்தனர்.
“எங்களால் எதுவும் செய்ய முடியாது, நாங்கள் கடவுளின் கருணைக்காக காத்திருக்கிறோம்,” என்று ஒசாமாவின் சகோதரர் முகமது அல்-படாய்னே பிபிசியிடம் கூறினார்.
மகனைப் பற்றிய தகவல்களைப் பெற தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் அவரது தந்தை மேற்கொண்டார். மகனை நினைத்து ஏங்கி, அந்த சோகத்தின் காரணமாக, அவரின் தாய் தனது கண் பார்வையை இழந்தார்.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாய் இறந்துவிட்டார் என்றும் அல்-படாய்னேவின் குடும்பத்தினர் கூறுகிறார்கள்.
“அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து, நாங்கள் அவரைத் தேடுவதை நிறுத்தவில்லை, அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதைக் கண்டறிய சிரியாவில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ள முயல்கிறோம்,” என்றும் முகமது அல்-படாய்னே கூறினார்.
செட்னயா சிறையில் உள்ளவர்களின் உடல்கள் அமிலத்தில் கரைக்கப்படுவதாக ஊடகங்களில் பரவும் கதைகள் குறித்துக் கவலை அடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
ஆனால், அவரது குடும்பத்தினர் தங்களது நம்பிக்கையைக் கைவிட மறுத்து, காணாமல் போன தங்கள் உறவினரைத் தொடர்ந்து தேடத் திட்டமிட்டுள்ளனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.